

சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரத்தில் உள்ள கந்தவனப் பொய்கை ஊருணி வற்றாமல் 10 கிராமங்களின் தாகம் தீர்த்து வருகிறது. சிவகங்கையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது சோழபுரம் கிராமம். மிகவும் பழமை வாய்ந்த இந்த ஊரில், பிரசித்தி பெற்ற வடகரை காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலையொட்டி ‘கந்தவனப் பொய்கை’ ஊருணி உள்ளது.
பல நூறு ஆண்டுகளாக இந்த ஊருணியில் இருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர். இந்த ஊருணி சோழபுரம் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள நாலுகோட்டை, ஈசனூர், புதுப்பட்டி, கருங்காலங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் தாகம் தீர்த்து வருகிறது. மேலும் இப்பகுதிகளில் உள்ள கோயில்களில் சமைப்பதற்கு இங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து சோழபுரத்தைச் சேர்ந்த சமயத்துரை கூறியதாவது: கந்தவனப் பொய்கை ஊருணி என்றும் வற்றாது. ஊருணி தண்ணீர் சுவையாக இருப்பதால், தாகத்தோடு வருவோர், சிறிதளவு பருகினாலே தாகம் தீர்ந்துவிடும். கட்டுக்கோப்பாக இந்த ஊருணியை பாதுகாத்து வருகிறோம்.
கால்நடைகள் வராமல் இருக்க ஊருணியை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. சில ஆண்டுகளாக கம்பி வேலிகள் சேதமடைந்து கால்நடைகள் உள்ளே நுழைந்து விடுகின்றன. இரவில் சிலர் ஊருணிக்கு வரும் பறவைகளை பிடிக்க கன்னி வைக்கின்றனர். அவற்றை தடுத்து ஊருணியை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.