Published : 11 Oct 2023 03:27 PM
Last Updated : 11 Oct 2023 03:27 PM

திருக்குறளுடன் ஒரு முன்முயற்சிப் பயணம்: ஆரணி தமிழ் ஆசிரியை உமாராணி நெகிழ்ச்சி

குடையில் திருக்குறளை எழுதும் ஆசிரியர் உமாராணி.

திருவண்ணாமலை: உலக பொதுமறை நூல் “திருக்குறள்”. வாழ்வியல் நெறிகளை கொண்டது. 133 அதிகாரங்களில் உள்ள 1,330 திருக்குறளிடம் சரணாகதி அடையாத ‘மானிடர்கள்’ இல்லை என்றே கூறலாம். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என உலகெங்கும் திருக்குறள் பற்றாளர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும், தங்கள் ரசனைக்கு ஏற்ப திருக்குறளை ரசிக்கின்றனர். இந்த வரிசையில் குடை, காய்கனிகள், அகல் விளக்கு, மணி, நாணயம், மற்றும் பட்ஸ் (காது சுத்தம் செய்வது) ஆகியவற்றில் ‘திருக்குற(ள்)ளை’ எழுதி, தன்னுடைய ஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியை உமாராணி.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக உமா ராணி பணியாற்றி வருகிறார். மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பித்து வரும் ஆசிரியை உமாராணி, தன்னுடைய வாழ்வில் கரோனா ஊடரங்கு காலம் திருப்புமுனையை ஏற்படுத்தியது என அக மகிழ்வுடன் கூறுகிறார்.

மகள்களின் ஊக்கம்... மேலும் அவர் கூறும்போது, “மாணவர்களுக்கு பாடம் கற்பித்து, நல்வழிப்படுத்தும் பணியில் கடந்த 25 ஆண்டுகளாக பயணிக்கிறேன். கரோனா ஊரடங்கு காலத்தில், திருக்குறள் மீதான பற்று காரணமாக படிக்க தொடங்கினேன். என்னுடைய ஆழ்மனதில் இனம்புரியாத பேரானந்தம் ஏற்பட்டது. எனது வாழ்நாளிலும், திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் வகையில், என்னுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் 1,330 திருக்குறளை எழுதி, அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவெடுத்தேன். இதற்காக, எனக்கு தெரிந்த வழிமுறையில், எனது பணியை தொடங்கினேன். குடை, பீன்ஸ் விதை, அகல் விளக்கு, சிறிய மணியில் 1,330 திருக்குறளை எழுதும் பணியை தொடங்கினேன்.

என்னுடைய முயற்சிக்கு எனது மகள்கள் பவித்ரா, ரோஜா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். என்னுடைய ஆற்றல் மங்கிவிடக் கூடாது எனக் கூறி, எனது மகள்கள் அளித்த ஊக்கம், திருக்குறளுடனான உன்னத பயணம் செம்மையாக தொடர்கிறது. முதற்கட்ட முயற்சியுடன் திருக்குறள் எழுதும் பணியை முடித்து கொள்ளாமல், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தேன்.

பதக்கங்களுடன் தமிழ் ஆசிரியை உமாராணி.

திருக்குறளை தேசிய நூலாக... திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என தேசிய கொடியின் பின் பகுதியிலும், ரூபாய் நாணயத்தை விட திருக்குறள் முக்கியம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு ரூபாய் நாணயம் மீதும், செவிக்கு கொண்டு செல்ல வேண்டும் என பட்ஸ்-ல் திருக்குறளை எழுதியுள்ளேன். மேலும், ரயில் பயணத்தின் போது, ஒரு சிறிய குடையில், மனித வாழ்வியல் நெறிமுறைகளுடன் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவரின் பெயரை 3,800 முறை எழுதியுள்ளேன். திருக்குறள் மீதான உன்னத பயணம், என்னுடன் முடிந்து விடக்கூடாது என்பதற்காக, என்னுடைய பள்ளி மாணவிகளையும் ஊக்கப்படுத்தினேன்.

எனது பணியை முன்மாதிரியாக கொண்டு 20 மாணவிகள் களத்தில் உள்ளனர். முருங்கைக்காய், மஞ்சள், வேதியியல் ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் டெஸ்ட் டியூப், ரிப்பன் போன்றவற்றில் 1,330 திருக்குறளை எழுத தொடங்கினர். அவர்களது வெற்றி பயணம், சாதனை பயணமாக தொடர்கிறது. என்னுடைய பணியை அங்கீகரித்து, ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட அமைப்புகள், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தன. மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழசை சவுந்தர்ராஜனும் நேரில் வரவழைத்து பாராட்டினார்.

அகத்தூய்மையும், மகிழ்ச்சியும்... கல்வி, பணி, பணம், குடும்பம் என குதிரைக்கு கடிவாளம் போட்டதுபோல் மனிதர்களின் வாழ்வியல் பயணம் தொடர்கிறது. ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கை, உடல் நலம் முக்கியமானது. சுவர் இருந்தால்தான், சித்திரம் வரைய முடியும் என்பார்கள்.

‘வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்’ என்ற திருக்குறளுக்கு ஏற்ப நமது அகம் தூய்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ‘முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு’ என்ற திருக்குறள், இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல, ஒருவரை இதயப்பூர்வமாக நேசிப்பதே உண்மையான நட்பாகும் என கூறுகிறது.

‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’ எனும் திருக்குறள், ஒருவர் நமக்கு செய்த உதவியை மறப்பது அறம் அன்று, அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம் என்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் அகத்தூய்மை, மனதில் உன்னதமான மகிழ்ச்சி இருந்தால் வாழ்வில் சாதிக்கலாம். இக்குறளை மேற்கோள்காட்டி, என்னுடைய மாணவ செல்வங்களை வழிநடத்தி வருகிறேன். அவர்களும், என்னுடன் இணைந்து பயணிக் கின்றனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x