"தொடக்க நிலையிலேயே சிகிச்சை அளித்தால் மன நல பாதிப்புகளை குணப்படுத்த முடியும்"
கோவை: மன நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல வழிகளில் ஆதரவு அளிப்பதையும் நோக்கமாக கொண்டு, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி உலக மன நல தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டுக்கான கருப்பொருள், ‘மன நலம் ஒரு உலகளாவிய மனித உரிமை’ என்பதாகும். உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்கள், ஏதோ ஒரு மன நல பாதிப்பால் அவதிப்படுகிறார்கள்.
இதில் பதற்றம், மிகை அச்சம் மற்றும் மனச் சோர்வு ஆகியவை பொதுவான மன நல பாதிப்புகள் ஆகும். இந்தியாவை பொறுத்த வரை சுமார் 15 கோடிக்கு அதிகமான மக்கள் ஏதாவது ஒரு மன நல பாதிப்பால் பாதிக்கப்படுவதாக மதிப்பீடு செய்யப்படுகிறது.
மனநல பாதிப்புகளுக்கான காரணங்கள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து மூத்த மனநல மருத்துவர் என்.எஸ்.மணி கூறியதாவது: மன நலம் என்பது உடல் நலத்துக்கு இணையான முக்கியமானது. மனநல பாதிப்புகளுக்கு மரபியல், உளவியல், சமூகவியல் என பல்வேறு காரணங்கள் உள்ளன.
பெரும்பாலும் இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினருக்கு தீவிர மன நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. நன்றாக உழைத்து, வருமானம் ஈட்டி, பிற்காலத்துக்கு பொருள் சேர்த்து, தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் கால கட்டத்தில் மன நல பாதிப்பு ஏற்படுவதால், தொடர் வேதனைக்கும், பொருளாதார பாதிப்புக்கும் குடும்பமே உள்ளாகி, நிம்மதி இழக்கிறது.
மன நல பாதிப்புகள் ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண், தொழிலாளி, முதலாளி, குழந்தை, முதியவர், ஆசிரியர், மாணவர் என பால், இனம், வயது, தொழில் பாகுபாடு இன்றி ஏற்படுகிறது. மன நல பாதிப்புக்கு காரணம் செய்வினை, கெட்ட ஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம் போன்றவையே என்ற மூட நம்பிக்கைகளாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் பலருக்கு சரியான சிகிச்சை மற்றும் பராமரிப்பு கிடைப்பது இல்லை.
சிகிச்சைகள் என்ன?: கடந்த 20 ஆண்டுகளாக மன நல மருத்துவத்தில் ஏற்பட்ட புரட்சி காரணமாக மன நல பாதிப்புகள் குணப்படுத்த கூடியதாகவும், சிகிச்சை அளிக்க கூடியதாகவும், ஓரளவுக்கு தடுக்க கூடியதாகவும் உள்ளன. இதற்கு தொடக்க நிலையிலேயே பாதிப்பை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
மன நல பாதிப்புகள் ஏற்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் தீர்வுகள் உள்ளன. மருத்துவ சிகிச்சை, உளவியல் ஆலோசனை, நடத்தை மாற்று சிகிச்சை, மறுவாழ்வு பயிற்சி, குழு சிகிச்சை, மின் அதிர்வு சிகிச்சை, ஆழ்நிலை உறக்க வைத்தியம், குடும்ப ஆலோசனை என தேவைக்கேற்ப சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
போதுமான தூக்கம், ஆரோக்கியமான உணவு, தவறாமல் உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற பயிற்சிகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு மற்றும் மனம் விட்டு பேசுவது ஆகியவை மனநல பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
