

ராமேசுவரம்: இந்திய விடுதலைப் போராட்ட மரபில் வந்த பக்கிரிசாக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கையில் தப்ஸ் எனும் கொட்டு, ஜெபமாலை, பச்சை தலைப்பாகை, காதில் சுருமா கம்பி என தனித்த அடையாளங்களுடன் நாடோடிகளாக வலம் வரும் பக்கீர்கள் விடுதலைப் போராட்டப் பாடல்கள், தமிழ் இஸ்லாமிய பாடல்கள், நன்னெறிப் பாடல்களை பாடியவாறு பணம், தானியம், உணவு யாசகமாகப் பெற்றுக் கொள்கின்றனர்.
பக்கீர் என்ற சொல் `இரப்பவர்` அல்லது `இரவலர்` என்னும் பொருள் தரக்கூடிய பாரசீகச் சொல்லில் இருந்து உருவானதாகும். மேலும் பக்கீர் என்றால் உலக வாழ்வியலில் தேவையற்றவர்களாகவும், இறைவனிடம் மட்டும் தேவையுள்ளவர்களாகவும் கருதப்படுகின்றனர்.
இதுகுறித்து பாம்பனைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் தாகிர் சைபுதின் கூறியதாவது: இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றிய தமிழ் புலவர்கள், தமிழில் நாட்டுப்புறக் கூறுகளைக் கொண்டு படைக்கப் பட்ட அம்மானை, பள்ளு, குறவஞ்சி, ஊசல் முதலான இலக்கிய வடிவங்களைப் பின்பற்றி பல்வேறு இலக்கியங்களை படைத்துள்ளனர்.
அப்புலவர்களின் பாடல்களை பக்கீர்கள் தங்கள் வாய்மொழி மூலம் சமயக் கருத்துகள் அடங்கிய இறை வணக்கப் பாடல்கள், கதைப் பாடல்கள் என பாடி வருகின்றனர். இதற்காக முறை யான இசைப்பயிற்சி கற்றுக் கொள்வது கிடையாது. தங்கள் முன்னோர் பாடியதைக் கேட்டு கேள்வி ஞானமாகப் பாடுகிறார்கள்.
பாடுதல் ஒன்றையே தொழிலாகக் கொண்டுள்ள பக்கீர்களில் ஆண்கள் மட்டும் ஊர் ஊராகச் சென்று பாடல் பாடி மக்கள் கொடுக்கும் தர்மம் பெற்று இரவு நேரத்தில் அந்தந்த ஊர்களில் தங்கி விடுகின்றனர். இந்த வாழ்க்கை முறை சங்ககால பாணர் மரபோடு ஒத்துப் போகிறது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான வீர சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து எழுதிய எரிமலை என்ற நூலில், ‘‘ஆங்கில ராணுவ முகாம்களில் இருந்த இந்திய வீரர்களிடம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்ட உத்வேகத்தையும், சிப்பாய்கள் மனதில் விடுதலை தீயையும் இஸ்லாமிய பக்கீர் கள் ஏற்படுத்தினார்கள். தேச யாத்திரை செல்வதாகக் கூறி பக்கீர்கள் பொதுமக்களிடம் சுதந்திரப் போராட்டத்தை போதித்தனர் என சிலாகித்து எழுதியுள்ளார்.
2004-ம் ஆண்டு டிசம்பரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, மாலத்தீவு, மியான்மர் ஆகிய நாடுகளில் பல்வேறு மதங்களின் பாரம்பரிய இசையை ஆய்வு செய்த லயா புராஜக்ட்ஸ் என்ற உலக இசை நிறுவனம் அதனை ஆல்பமாக வெளியிட்டு சுனாமியால் இறந்த வர்களுக்காக அர்ப்பணித்தது. இந்த ஆல்பத்தில் பக்கீர்களின் பாடலும் இடம்பெற்றுள்ளன.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமியர்களிடம் பக்கீர்களுக்கு இருந்த செல்வாக்கு இன்று குறைந்துள்ளது. பக்கீர்கள் கால ஓட்டத்துக்கு ஏற்ப தங்கள் பாடல்களை திரைப்படப் பாடல்களின் மெட்டுக்களில் அமைத்துக் கொள்கின்றனர். பொருளாதாரத் தேவைகளுக்காக தொப்பி, பாய், பூட்டு, சாவி விற்பவர்களாகவும் தொழில் புரிந்து வருகின்றனர்.
சுதந்திரப் போரில் முக்கியப் பங்காற்றிய பக்கீர்கள் இன்று வறுமையில் வாடுகின்றனர். பக்கீர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மேலும் உலமாக்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதியம் போல இவர்களுக்கும் ஓய்வூதியமும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் அடையாளமாக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய சலு கையும் வழங்க வேண்டும், என்று கூறினார்.