Last Updated : 03 Oct, 2023 05:33 PM

Published : 03 Oct 2023 05:33 PM
Last Updated : 03 Oct 2023 05:33 PM

விழுப்புரம் 30 | மாவட்டம் உதயமான வரலாறும், சில பெருமித தருணங்களும்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் ஏரியல் வியூ.

விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. சிறப்பான ஒரு தருணத்தை நோக்கி நமது விழுப்புரம் மாவட்டம் சென்று கொண்டிருக்கிறது. பரந்து விரிந்து கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலைப் பகுதிகளையும் தன்னகத்தே கொண்டிருந்த இம்மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட பிறகு விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம், மரக்காணம் ஆகிய 9 வருவாய் வட்டங்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திண்டிவனம், மயிலம், செஞ்சி, திருக்கோவிலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. திண்டிவனம், கோட்டக்குப்பம், விழுப்புரம் ஆகிய 3 நகராட்சிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளன. 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவக்கரை கல்மரங்கள், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழ்வாலைப் பாறை ஓவியங்கள் உள்ளிட்ட தொல்பழங்காலச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்ட, பழமையும் பெருமையும் மிக்கது விழுப்புரம் மாவட்டம்.

அருவா நாடு, மலாடு, திருமுனைப்பாடி நாடு, நடுநாடு, சேதிநாடு என்றெல்லாம் அழைக்கப்பட்ட இம்மாவட்டம், தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாகவும் விளங்கியது. சங்க இலக்கியங்களில் பாடப்பெற்ற ஊர்கள் இடம்பெற்றதும், சுந்தரமூர்த்தி நாயனார், மெய்கண்ட தேவர், கவிகாளமேகம், கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் ஆகியோர் அவதரித்ததும் இந்த மண்ணில்தான்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என சொல்லப்படும் ஐந்து நிலங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை நிலங்கள் அமைந்துள்ளன. தமிழகத்திலேயே அதிக தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய மாவட்டம் இது. பல்லவர்களின் குடைவரைக் கோயில்கள், ஓவியங்கள், சமணக் குகைத்தளங்கள் – நிசீதிகைக் கல்வெட்டுகள், சோழர்களின் கலைச்சின்னங்கள் ஆகியவை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. பல்லவர், சோழர், பாண்டியர், காடவர், சம்புவராயர், முகலாயர், விஜயநகரர், பீஜப்பூர் சுல்தான், மராட்டியர் மற்றும் பிரிட்டிஷ்- பிரெஞ்சு ஆகிய அரசுகளின் ஆளுகைகளில் இருந்துள்ளது விழுப்புரம் மாவட்டம்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், 1801-ம் ஆண்டு கேப்டன் கிரஹம் தலைமையில் தென்னாற்காடு மாவட்டம் உருவானது. இதில் இடம்பெற்ற 20 தாலுகாக்களில் விழுப்புரமும் ஒன்று. 1975-ம் ஆண்டு அரசுப் போக்குவரத்துக் கழகமும், 1982-ம் ஆண்டு தென்னாற்காடு மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியமும், 1988-ம் ஆண்டு காவல் மாவட்டமும் விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்பட்டன.

தமிழக முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது விழுப்புரம் வருவாய் மாவட்டத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஆனாலும் இது 1993-ம் ஆண்டுதான் செயல் வடிவம் பெற்றது. விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கலாம் என முடிவெடுத்த அரசு, இந்த மாவட்டத்துக்கு, ‘விழுப்புரம் வள்ளலார் மாவட்டம்’ எனப் பெயர் சூட்டியது. இதன் தனி அதிகாரியாக ரமேஷ் குமார் கன்னா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், வள்ளலார் வாழ்ந்து மறைந்தது வடலூரில், எனவே வடலூரை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்துக்கு அவரதுப் பெயர் வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து வலுவானது.

அதன் பின்னர் 30.09.1993 அன்று கடலூர் மாவட்டத்துக்கு, ‘தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம்’ எனப் பெயர் சூட்டிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ‘விழுப்புரம் ராமசாமி படையாட்சியார் மாவட்டம்’ எனும் புதிய மாவட்டத்தைத் தொடங்கி வைத்தார். (உண்மையில் ராமசாமி படையாட்சி யாரும் கடலூர் மாவட்டத்துக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது) இதற்கிடையே 1997-ல் தமிழக அரசின் பெயர் மாற்ற நடவடிக்கையைத் தொடர்ந்து, மாவட்டத்தின் தலைநகரான ‘விழுப்புரம்’ என்ற பெயரிலேயே இம்மாவட்டம் அழைக்கப்பட்டு வருகிறது.

வடக்கில் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள், தெற்கில் கடலூர் மாவட்டம், மேற்கில் கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்கள், கிழக்கில் வங்காள விரிகுடா ஆகியவை இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3715.23 சதுர கிலோ மீட்டராகும்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் (கள்ளக்குறிச்சி உள்ளடக்கிய) 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,85,790 ஆகும். 2 வருவாய் கோட்டங்கள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 928 கிராமங்கள் 688 ஊராட்சிகளில் உள்ளடங்கி பரந்து விரிந்துள்ள இம்மாவட்டத்தில் தென்பெண்ணை, மலட்டாறு, சங்கராபரணி ஆகிய ஆறுகளும், வீடூர், எல்லீஸ் அணைக்கட்டுகளும் உள்ளன. செஞ்சிக் கோட்டை, வீடூர் அணை, ஆரோவில் ஆகிய முக்கியச் சுற்றுலாத் தலங்களும் உள்ளன.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, கடலூர்- சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, புதுவை - கிருஷ்ணகிரி தேசியநெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை ஆகியவை இம்மாவட் டத்தின் வழியாக செல்கின்றன. விழுப்புரம் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக அஷோக் வர்தன் ஷெட்டி 30.09.93 அன்று பதவியேற்றார்.

அப்போது மாவட்ட எஸ்.பியாக விஜயகுமாரும், காவல் மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின்பு 05.09.98 அன்று ஆர். பாஸ்கரும் எஸ். பியாக பதவி வகித்தவர்கள். தற்போது 22 -வது ஆட்சியராக டாக்டர் பழனியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சஷாங்க் சாய் ஆகியோரும் பதவி வகிக்கின்றனர்.

கடந்த 12.11.2019 அன்று விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது. இந்த நீண்ட வரலாறுகளுக்கு நடுவே விழுப்புரம் மாவட்டம் நேற்று 30- வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. தனி மாவட்டமாக பிரிந்ததில் நல்ல பல விஷயங்கள் கிடைக்கப் பெற்றன. நீண்ட காலமாக நிறைவேறாத எதிர்பார்ப்புகள் இன்றைக்கும் தொடர்கின்றன. விழுப்புரம் தொகுதியின் தேவைகள் விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வி.மருதூர் ஏரி குடிநீர், பாசன வசதிக்கு பயன்படுத்தி வருகின்றன.

இந்த ஏரியின் மதகுகளை சரிசெய்தும், வரத்துவாய்க்கால்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்திடவும், பொதுமக்கள்பயன்படுத்தும் வகையில் நடைபாதை, சிறுவர் விளையாட்டு பூங்கா, படகு சவாரி செய்வதற்கு ஏற்ற வகையில் ஏரியை புதுப்பித்துத் தர வேண்டும். விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பொய்யப்பாக்கம் அல்லது கா.குப்பம் பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைக்க வேண்டும்.

வளவனூரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். இப்பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். தளவானூரில் ஊருக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க 300 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மலட்டாறிலிருந்து பிரியும் நரிவாய்க்கால் மூலம் ஏராளமான ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. ஆக்கிரமிப்பில் உள்ள இந்த வாய்க்காலை புனரமைக்க வேண்டும்.

எல்லீஸ்சத்திரம் அணையை புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இம்மாவட்ட மக்களால் வலியுறுத்தப்பட்டு, நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இந்த 30 ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டம் பெற்றது என்ன..? இழந்தது என்ன..? பெறத்தவறியது என்ன..? என்பதை தொடர்ந்து வரும் நாட்களில் பார்ப்போம்.

இவர்களெல்லாம் இங்கே பிறந்தவர்கள்.. காஞ்சி சங்கர மடத்தின் 68-வது பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பிறந்தது விழுப்புரத்தில். செவாலியர் விருது பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பூர்வீகம் சூரக்கோட்டையாக இருந்தாலும், அவர் பிறந்தது விழுப்புரத்தில்தான்.

புகழ்பெற்ற நடிகரான பின்பு விழுப்புரம் நகராட்சி அவரின் பிறப்பு சான்றை விழா ஒன்றில் வழங்கியது. மதராஸ் மாகாணத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, திமுகவுக்கு உதய சூரியன் சின்னம் வழங்கிய ஏ. கோவிந்தசாமி, திருக்குறள் முனுசாமி, படத்தொகுப்பில் தேசிய விருது பெற்ற மறைந்த படதொகுப்பாளர் கிஷோர், உள்ளிட்டவர்களும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

வாசிக்க > விழுப்புரம் 30 | விழுப்புரம் மாவட்டம் பெற்றதும்... பெறத் தவறியதும்..!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x