Last Updated : 02 Oct, 2023 03:46 PM

1  

Published : 02 Oct 2023 03:46 PM
Last Updated : 02 Oct 2023 03:46 PM

வீதிகள், தெருக்களுக்கு தமிழ் மணக்கும் பெயர்கள்: அசத்தும் ஆத்திப்பட்டி ஊராட்சி

ஆத்திப்பட்டி ஊராட்சியில் உள்ள தெருக்களின் பெயர்கள்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே 150 தெருக்கள் மற்றும் வீதிகளுக்கு தமிழ் மாதங்கள், மலர்கள், நதிகள், புலவர்கள் பெயரிட்டு அசத்தியுள்ளது ஆத்திப்பட்டி ஊராட்சி.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளது ஆத்திப்பட்டி ஊராட்சி. மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச் சாலை இணைப்பில் அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் புதிது புதிதாகத் தோன்றி வருகின்றன.

அருப்புக்கோட்டை நகரின் விரிவாக்கப் பகுதியாகத் திகழும் ஆத்திப்பட்டி ஊராட்சியில் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கட்டகஞ்சம்பட்டி, லட்சுமி நகர், நாராயணபுரம், ஜெயராம் நகர், என்.ஜி.ஓ. காலனி போன்ற பகுதிகளும் இந்த ஊராட்சியில் அடங்கியுள்ளன.

புதிதாகத் தோன்றும் விரிவாக்கப் பகுதிகளுக்கு பெயர் சூட்டப்படாமல் இருந்ததால் விரிவாக்கப் பகுதியில் குடியிருந்து வரும் பொதுமக்கள் தாங்களாக பல பெயர்களை சூட்டிக்கொண்டனர். அதோடு, புதுப்புது தெரு பெயர்கள் பெயரளவில் கூறப்பட்டதால் உரிய முகவரிகளை கண்டுபிடிக்க முடியாமல் அஞ்சல் ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ஆன்-லைன் டெலிவரி ஊழியர்களும் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஆத்திப்பட்டி ஊராட்சி நிர்வாகம் ஒரு திட்டம் வகுத்தது. அதன்படி, புதிதாக விரிவாக்கம் அடைந்துள்ள 150 தெருக்களுக்கும் தமிழ் மாதங்கள், மலர்கள், நதிகள், புலவர்கள் பெயர்களைச் சூட்ட முடிவு செய்தது.

அதன்படி தெருக்களுக்கு சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி தெரு என்றும், கங்கை வீதி, காவிரி வீதி, மணிமுத்தாறு, குண்டாறு, பம்பா, ஆழியாறு, அமராவதி, மகாநதி என்றும், முல்லை, வாடாமல்லி, தாமரை, ரோஜா, அல்லி, சூரியகாந்தி, செந்தாமரை, ஆவாரம்பூ, மகிழம்பூ, தாழம்பூ, அடுக்குமல்லி, சாமந்திப்பூ, பவளமல்லி, தும்பை பூ, என்றும், பொதிகை வீதி, சதுரகிரி வீதி, இமயம் வீதி, அகத்தியர் வீதி, கம்பன் வீதி, திருவள்ளுவர் வீதி, குறள் வீதி, ராஜ வீதி என்றும், செந்தமிழ் வீதி, முத்தமிழ் வீதி, செங்கரும்பு வீதி, செங்கனி வீதி, பசுமை வீதி, முகில் வீதி, தென்றல் வீதி, சாரல் வீதி என்றும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு தெரு மற்றும் வீதியின் முகப்பிலும் பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊாட்சித் தலைவர் ராஜேஸ்வரி கூறியதாவது: ஆத்திப்பட்டியில் விரிவாக்கப் பெயர்களுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால், வழக்கமான பெயர்களாக இல்லாமல், 150 வீதிகளுக்கும் சிறப்பான முறையில் தமிழ் பெயர் சூட்ட வேண்டும் எனத் தோன்றியது. அதன்படி ஆறுகள், தமிழ் மாதங்கள், மலர்கள், புலவர்கள் பெயர்களைத் தேர்ந்தெடுத்து வீதிகளுக்கும் தெருக்களுக்கும் வைத்துள்ளோம்.

ராஜேஸ்வரி

அதோடு, ஒரு பகுதியில் உள்ள தெருக்களுக்கு மலர்களின் பெயர்கள், மற்றொரு பகுதியில் உள்ள தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர்கள், வேறொரு பகுதியில் உள்ள வீதிகளுக்கு ஆறுகளின் பெயர்கள் என வைத்துள்ளோம். இதனால் ஒரு தெருவின்பெயரைக் கூறினால் அது எந்த பகுதியில் உள்ளது என்பதை எளிதாக அடையாளம் காண முடிகிறது.

அதோடு, தெருக்கள், வீதிகளின் பெயரை கூகுள் மேப்பில் தேடினால் முகவரியைக் கண்டுபிடிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சிப் பகுதியிலும் விரிவாக்கப் பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படுகின்றன, என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x