Published : 02 Oct 2023 01:55 PM
Last Updated : 02 Oct 2023 01:55 PM

வல்லாரை என்ற பெயரில் சந்தையில் விற்பனையாகும் பல்வேறு கீரைகள் - நிபுணர்கள் சொல்வது என்ன?

மருத்துவ குணங்கள் நிறைந்த வல்லாரை செடிகள்,

தருமபுரி: கீரைகள் அனைத்தும் உடலுக்கு நன்மைதான் விளைவிக்கும் என்றாலும் வல்லாரை என்ற பெயரில் பல்வேறு கீரைகள் விற்பனையாவதால் நுகர்வோர் அதுபற்றிய விழிப்புணர்வு அடைய வேண்டுமென தருமபுரி மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி உட்பட பல்வேறு இடங்களில் பல்வேறு தோற்றங்களைக் கொண்ட கீரைகள் வல்லாரை என்ற ஒரே பெயரில் சந்தையில் விற்பனையாகி வருகின்றன. இவ்வாறு விற்பனையாகும் 5-க்கும் மேற்பட்ட கீரைகளில் வல்லாரை வகையைச் சேர்ந்த கீரைகள் எவை, அவ்வகையைச் சேராத கீரைகள் எவையென இந்த கீரைகளை பயன்படுத்துவோர் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இதுபற்றி, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெண்ணிலா மற்றும் பேராசிரியர் முனைவர் இந்துமதி ஆகியோர் கூறியது: சித்த மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ முறைகளில் வல்லாரை கீரைகள் முக்கிய இடம்பெறுகின்றன. இயற்கை மருத்துவ முறைகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் சமையலிலும் பயன்படுத்தப்படும் வல்லாரைக் கீரை மாநிலம் முழுவதும் பரவலாக சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மலை வல்லாரை என்றும், ஹைபிரீட் வல்லாரை என்றும் வேறுவேறு பெயர்களில் விற்பனை செய்யும் கீரைகள், உண்மையான வல்லாரை அல்லாத பிற தாவர இனங்களைச் சேர்ந்த கீரைகள் ஆகும்.

வல்லாரையை போன்று காணப்படும் எலிக்காதிலை எனும் தாவரம்.

வல்லாரையின் தாவரவியல் பெயர் சென்டெல்லா ஏசியாட்டிக்கா ஆகும். ஏபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த வல்லாரை குளிர்ச்சியான, தண்ணீர் அதிகமுள்ள பகுதிகளில் வளரும். இந்திய துணைக் கண்டம், இலங்கை, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வல்லாரை கீரையாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. கசப்புத் தன்மை கொண்ட இந்த கீரையில் ஏ மற்றும் சி வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் அதிக அளவில் உள்ளன. உடலில் உள்ள நஞ்சுகளை நீக்குவதுடன், கொழுப்பைக் குறைக்கும் குணமும் இந்த கீரைக்கு உண்டு.

நரம்பு மண்டலம் சார்ந்த பிரச்சினைகள், சரும பராமரிப்பு, சரும நோய் சிகிச்சை, மனக் குழப்பத்துக்கான சிகிச்சை, கூந்தல் வளர்ச்சி என வல்லாரையின் பயன்பாடுகளை பட்டியலிடலாம். வாய்ப்புண், வயிற்றுப்போக்கு, நோய் எதிர்ப்பாற்றல், வலிப்பு, கற்றல் குறைபாடு, நினைவாற்றல் குறைபாடு ஆகியவற்றுக்கான சிகிச்சை முறைகளிலும் வல்லாரை இடம்பெறுகிறது. இதுதவிர, நவீன மருத்துவ முறைகளிலும் கூட வல்லாரை பயன்படுத்தப்படுகிறது.

அதிலுள்ள உயிர் வேதி மூலக்கூறுகளான ஏசியாடிக் அமிலம், மேடகாசிக் அமிலம், ஏசியாடிக்கோசைடு, மேடகாசிகோசைடு, பிரமோசைடு ஆகியவை பல்வேறு மருத்துவ குணங்களும், ஆன்டிஆக்சிடெண்ட் பண்புகளும் கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. சந்தையில் வல்லாரையை அடிப்படையாகக் கொண்டு வல்லாரை கரைசல், களிம்பு, மாத்திரை, சோப்பு, இலைத்தூள், எண்ணெய், அழகுசாதனப் பொருட்கள் கிடைக்கின்றன.

இவ்வாறான பலவித தயாரிப்புப் பொருட்களில் பயன்படுத்தும் அளவுக்கு வணிக ரீதியாக வல்லாரை கீரை சாகுபடி செய்யப்படுவதில்லை. வல்லாரை வனம் மற்றும் இன வாழிடத்தில் இருந்து மட்டுமே சேகரிக்கப்படுபவை ஆகும்.

மருத்துவம் மற்றும் அதுசார்ந்த பொருட்களின் தயாரிப்புகளின் தேவை அதிகரிப்பால் பிற தாவர இனங்களை வல்லாரை என குறிப்பிட்டு விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இவற்றை ஒப்பிட்டு ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடும் அளவுக்கு இப்பிரச்சினையின் வீரியம் அதிகரித்துள்ளது.

ஹைபிரீடு வல்லாரை என்ற பெயரில் விற்பனை யாகும் செடி.

ஆய்வாளர்களான சுப்ரமணியன் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவரும், சேலம் பகுதியில் எலிக்காதிலை எனும் வகையைச் சேர்ந்த கொடி, வல்லாரை என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது என்று கடந்த 2013-ல் தங்களின் ஆய்வுக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். மலை வல்லாரை அல்லது ஹைபிரீட் வல்லாரை என்று ஹைட்ரோகோட்டைல் வெர்டிசில்லேட்டா என்ற தாவரம் சந்தையில் விற்கப்படுகிறது. பலர் இந்த தாவரத்தை வீடுகளில் வளர்த்தும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், இது அரேலேசியே குடும்ப தாவரம். வல்லாரை ஏபியேசியே குடும்ப தாவரம் ஆகும். வல்லாரை என்ற பெயரில் விற்பனையாகும் இதர கீரை வகைகளால் உடலுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது. அவ்வகை கீரைகளில் இருந்தும் உடலுக்கு நன்மை தரும் சத்துகள் கிடைக்கும். இருந்தபோதிலும், வல்லாரையின் பயன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேறு வகை கீரைகளை பயன்படுத்துவதை தவிர்க்க அனைவரும் போதிய விழிப்புணர்வு அடைய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x