

மதுரை: ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பட்டாம் பூச்சிகளை அதிகளவு பார்க்கலாம். இந்த சீசனில் மழை பெய்து இலை, தழைகள் வரும். இவை, பட்டாம் பூச்சிகளுக்கு உணவாக அமைகிறது.
பட்டாம் பூச்சிகள் ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அந்த இடம் சுற்றுச்சூழல் மாசு அடையாத இடமாகவும், மனிதர்கள் வாழத் தகுந்த இடமாகவும் கருதப்படுகிறது. பட்டாம் பூச்சிகளை பற்றி 2009-ம் ஆண்டு முதல் மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ஜாய் ஷர்மிளா ஆய்வு செய்து வருகிறார்.
அழகர்கோவிலில் உள்ள அழகர் மலையில் பல்கலைக்கழக மானியக் குழு ஒதுக்கிய ரூ.2 லட்சத்தில் பட்டாம் பூச்சிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டார். அதில், 101 வகை பட்டாம்பூச்சிகள் அங்கு இருப்பதைக் கண்டறிந்தார். அதில் முக்கியமானதாக ‘சதன்பேர்டு விங்’ பட்டாம் பூச்சி. ஒரு பறவையின் இறக்கை அளவுக்கு இது இருக்கும்.
தமிழில் பொன்னழகி என்றும் இந்தப் பட்டாம் பூச்சியை சொல்வார்கள். இந்த வகை பட்டாம்பூச்சிகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே இருக்கும் என அதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால், கிழக்குத் தொடர்ச்சி மலையில் இருப்பதை இவர் முதன் முதலில் கண்டறிந்தார். அதுபோல், க்ளாட் ஐ புஷ் ப்ரவுன் (glad eye bush brown) என்ற அரிய வகை பட்டாம் பூச்சியினத்தையும், கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஆய்வு மாணவர்களுடன் பார்த்தார்.
இவர் தனது ஆய்வுகளை ‘பட்டர்பிளைஸ் ஆப் அழகர் கில்ஸ்’ என்ற புத்தகமாக வெளியிட்டதோடு, அடுத்த தலைமுறை மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டார். தற்போது அமெரிக்கன் கல்லூரியில் பட்டாம் பூச்சி பூங்கா ஒன்றை அமைத்துள்ளார்.
பல்வேறு வகை பட்டாம் பூச்சிகளை அந்தப் பூங்காவில் விட்டு இனப்பெருக்கம் செய்து தற்போது 40 வகை பட்டாம் பூச்சிகள் இந்தப் பூங்காவில் உள்ளன. பட்டாம் பூச்சிகள் சார்ந்து வாழக்கூடிய கருவேப்பிலை, வில்வம், பென்டாஸ், தொட்டாச்சினுங்கி, கட்டிப்போட்டால் குட்டிபோடும் செடிகள், லண்டானா, கிலு கிலுப்பை, துத்தி, தாத்தா பூ, மூங்கில்,போன்சே ஆலமரம் போன்ற 50 வகையான செடிகளை வைத்துள்ளனர்.
இது குறித்து பேராசிரியர் ஜாய் ஷர்மிளா கூறியதாவது: பட்டாம் பூச்சிகள் இல்லையென்றால், பறவைகளுக்கு உணவு கிடைக்காது. பறவைகள், பட்டாம்பூச்சிகளின் லார்வா கம்பளி புழுக்களையும், பெரிய பட்டாம்பூச்சிகளையும்(Adult butterfly) விரும்பிச் சாப்பிடுகின்றன. பட்டாம்பூச்சிகளில் தாவிகள், அழகிகள், வெள்ளையன்கள், நீலன்கள், வரியன்கள் என 5 விதமான குடும்பங்கள் உள்ளன.
குழந்தைகளுக்கு பட்டாம் பூச்சிகளை கொண்டு இயற்கையை சொல்லிக் கொடுக்கலாம். பட்டாம் பூச்சிகளைக் கொண்டு ‘ஈக்கோ டூரிஸம்’ மேம்படுத்தலாம். பெங்களூருவில் பன்னார்கட்டாவில் பட்டாம் பூச்சிக்கென்றே ஒரு பூங்கா அமைத்துள்ளனர். அந்தப் பூங்காவுக்கு தினமும் ஆயிரக் கணக்கானோர் வருகிறார்கள். குழந்தைகளை அதிகம் கவர்ந்த பூங்காவாக அது திகழ்கிறது.
அதுபோல், தமிழகத்தில் திருச்சியில் பட்டாம்பூச்சி பூங்கா ஒன்று உள்ளது. இந்தப் பூங்கா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டம். அதுபோல், மதுரை மாவட்டத்தில் அழகர்கோவிலில் பட்டாம்பூச்சிகள் அதிகம் உள்ளன. ஒரே இடத்தில் 200 முதல் 300 பட்டாம்பூச்சிகள் உள்ளன. அதனால், அழகர் மலையில் பட்டாம்பூச்சி பூங்கா அமைக்கலாம்.
அமெரிக்காவில் ஒருவருக்கு அவரது விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால், பட்டாம்பூச்சி பக்கத்தில் போய் சொன்னால் போதும் நிறைவேறும் என்பதை ஐதீகமாக நினைக்கிறார்கள். ஓரிடத்தில் சமாதானம், மகிழ்ச்சி இருந்தால் பட்டாம்பூச்சிகளை காட்டுகிறார்கள். பறக்க விடுகிறார்கள். பட்டாம்பூச்சிகள் ஆனந்தத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
பட்டாம் பூச்சிகள், வெயிலில் அமர்ந்து சூரிய குளியல்(sunbath) எடுத்து பறக்கின்றன. சூரிய குளியல் எடுக்கும்போது வெயிலில் உள்ள சக்தியை தன்னுடைய உடலில் எடுத்து பறக்கத் தொடங்கும். அதற்கான சக்தி வெயிலில் கிடைக்கிறது. அதனால், இயற்பியல் விஞ்ஞானிகள், தற்போது பட்டாம் பூச்சிகளின் உடம்பில் உள்ள துகள்களை சோலார் பேனலாகப் பயன்படுத்தலாமா எனவும் ஆராய்ச்சி செய்கிறார்கள்.
அமெரிக்காவில் ராணுவத்தில் நச்சுத் தன்மை உடைய பொருட்களைக் கண்டறிய பட்டாம் பூச்சிகளை பயன்படுத்துகிறார்கள். நச்சுகள் இருந்தால் பட்டாம்பூச்சிகளின் உடல் நிறம் மாறிவிடும். அதைக் கொண்டு நச்சு இருப்பதை கண்டறிகிறார்கள். மேலும், பட்டாம் பூச்சிகளின் உடலில் தண்ணீர் நிற்காது. அதனால், தண்ணீர், அழுக்குப் படாமல் இருக்கக்கூடிய சட்டைகள், சேலைகளைத் தயாரிக்கும் ஆய்வும் நடக்கிறது என்று கூறினார்.
வாழ்க்கைத் தத்துவம்: பட்டாம்பூச்சி முட்டையில் இருந்து லார்வா, பியூபா நிலைகளை கடந்து பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றன. இதில், பியூபா நிலையில் இருந்து பட்டாம் பூச்சிகளாக இறக்கை முளைத்து மாறும் போது இடர்பாடுகளைக் கடந்து கூட்டில் இருந்து வெளி வருகிறது. பட்டாம் பூச்சியின் இந்த இடர்பாட்டைப் பார்த்த விவசாயி ஒருவர், அந்தக் கூட்டை கிழித்து எளிதாக அது வெளியே வருவதற்கு உதவியுள்ளார்.
அந்தப் பட்டாம் பூச்சி வெளியே வந்ததும் பறக்கவே முடியவில்லை. இறக்கையும் சுருங்கிப்போனது. இதிலிருந்து வாழ்க்கையில் இடர்பாடுகள் நிறைய இருக்கும். இடர்பாட்டால் பட்டாம் பூச்சிகள் மகிழ்ச்சியாக இருக்கலாம். இடர்பாடுகளில் இருந்து தப்பித்தால் இறக்கை சுருங்கிய பட்டாம் பூச்சி போல் பறக்க இயலாது என்ற நன்னெறியை நமக்கு உணர்த்துகின்றன.