

மதுரை: மதுரையில் மாடக்குளம் கண்மாய் மூலம் 1500 ஏக்கர் பாசன வசதி பெற்ற விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறியதால் தற்போது குடியிருப்புகளின் குடிநீராதாரமாக மாறியுள்ளது. எனவே, கண்மாயின் கரைகளை அகலப்படுத்தி சாலைகள் அமைக்க வேண்டும், கரையின் கீழ்ப்பகுதியில் பூங்காக்கள் அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையின் பழமையான கண்மாய்களில் ஒன்றான மாடக்குளம் கண்மாய் 326 ஏக்கர் கொள்ளளவுடைய பொதுப்பணித்துறை கண்மாய். இக்கண்மாய் வைகை ஆற்றிலிருந்து நேரடி கால்வாய், நிலையூர் கால்வாய் மற்றும் மழைநீரால் நிரம்புகின்றன. இக்கண்மாயிலிருந்து சுமார் 1500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றன. தற்போது விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாகவும், கான்கிரீட் காடுகளாகவும் மாறியதால் தற்போது 100 ஏக்கர் பாசனப்பரப்பாக சுருங்கியுள்ளது. இக்கண்மாயின் 3 மடைகளில் நடுமடை, பொன்மேனி மடைப்பகுதிகள், துரைச்சாமி நகர், பழங்காநத்தம், பொன்மேனி பகுதி குடியிருப்புகளாக மாறிவிட்டன.
ஆனால், தெற்கு மடையில் மட்டும் பழங்காநத்தம் விவசாயிகள் 100 ஏக்கரில் நெல், வாழை பயிரிட்டு வருகின்றனர். இதனால் தற்போது 167 மில்லியன் கன அடி நீர் தேங்கும் குடிநீர் குடியிருப்புகளுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்கின்றன. எனவே, கண்மாய் கரைகளை அகலப்படுத்தி சாலை வசதி செய்துதருவதோடு, கரையோர கீழ்ப்பகுதிகள் பூங்காக்கள் அமைக்க மாடக்குளம் பகுதியைச் சேர்ந்தவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் புறநகர் மாவட்டச் செயலாளர்கி.ராமகிருஷ்ணன் (71) கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறும்போது, “மாடக்குளம் கண்மாய் மூலம் சுமார் 1500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றன. சுமார் 25 ஆண்டுகளுக்குள் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறியதால் பாசனப்பரப்பு 100 ஏக்கராக மாறியது. தற்போது குடியிருப்புவாசிகளின் குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. எனவே,கண்மாய் கரைகளில் அச்சம்பத்து முதல் முனியாண்டிபுரம் வரையிலான 6 கிமீ தூரமுள்ள கரையை அகலப்படுத்தி தார்ச்சாலை அமைக்க வேண்டும். கரையின் கீழ்ப்பகுதியில் பூங்காக்கள் அமைக்க வேண்டும்.
காலை,மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்யவும், பொழுதுபோக்கு இடமாகவும் மாறும். சாலை அமைத்தால், நாகமலை புதுக்கோட்டையிலிருந்து அச்சம்பத்து வழியாக செல்வோர் திருநகர், திருப்பரங்குன்றம் பகுதிக்கு எளிதில் செல்லலாம். மேலும், விராட்டிபத்து, காளவாசல் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். எனவே மாவட்ட நிர்வாகம், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள வண்டியூர் கண்மாய் போன்று மாடக்குளம் கண்மாய்க்கரையை அகலப்படுத்தி தார்ச்சாலை அமைக்க வேண்டும். கரையை ஒட்டிய கீழ்ப்பகுதியில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.