

விருதுநகர்: பத்மஸ்ரீ விருது வாங்கும் லட்சியத்துடன், தந்தையுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான நாகஸ்வர கச்சேரிகளுக்குச் சென்று இசையால் அசத்தி வருகிறார் 13 வயது சிறுமியான காவியலெட்சுமி.
விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறைச் சேர்ந்த நாகஸ்வர வித்வான் செந்தில். இவரது மனைவி அனிதா. இவர்களது மகள் காவியலெட்சுமி. இவர் தனது 8 வயதில் தந்தையிடம் நாகஸ்வரம் கற்கத் தொடங்கி, தற்போது தந்தையுடன் சேர்ந்து அவருக்கு ஈடாக நூற்றுக்கணக்கான கச்சேரிகளில் பங்கேற்று வருகிறார்.
இதுகுறித்து காவியலெட்சுமி கூறியதாவது: விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் உள்ள அரசு உதவிபெறும் எம்.எஸ்.பி. மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறேன். 3-ம் வகுப்பு படிக்கும்போதே தந்தை வாசிப்பதை கேட்டு கேட்டு எனக்கும் நாகஸ்வரம் வாசிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
அப்பாவும் நாகஸ்வரம் வாசிக்க கற்றுத் தர சம்மதித்தார். அதிலிருந்து அப்பாவை குருவாக ஏற்று நாகஸ்வரம் கற்றுக்கொள்ள தொடங்கினேன். எனது தம்பி கருப்பசாமியும் நாகஸ்வரம் கற்று வருகிறான்.
முதலில் மூச்சுப் பயிற்சிக்காக தினமும் காலை 6 முதல் 8 மணி வரை சாதகம் செய்து பழகினேன். பின்னர், சரளி, ஜண்ட வரிசை, மேல்தாழ் வரிசை, கீழ்தாழ் வரிசை, அலங்காரம், கீதம், வர்ணம், கீர்த்தனை என ஒவ்வொன்றாகப் பயிற்சி பெற்றேன். அதன்பின்னர், தந்தையுடன் சேர்ந்து நாகஸ்வர கச்சேரிகளுக்குச் செல்லத் தொடங்கினேன்.
கடந்த 5 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான விழாக்கள், கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள் போன்றவற்றில் நாகஸ்வரம் வாசித்து வருகிறேன். குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவில் வாசித் ததை மிகவும் பாக்கியமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறந்த மற்றும் புகழ்பெற்ற வித்வான்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் எனக்கும் கடந்த ஆண்டு திருவிழாவின்போது நாகஸ்வரம் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியமே.
பள்ளி ஆசிரியர்களும் எனக்கு ஊக்கம் அளித்து வருவதால், பள்ளி மூலம் பல அரசு விழாக்களிலும் நாகஸ்வரம் வாசித்து வருகிறேன். தொடர்ந்து வாசித்து பத்மஸ்ரீ விருது பெறுவதே எனது லட்சியம் என்றார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், ‘நான் வீட்டில் நாகஸ்வரப் பயிற்சியில் ஈடுபடும் போதெல்லாம், குழந்தைப் பருவத்திலிருந்தே எனது மகள் அருகில் வந்து அமர்ந்து ஆர்வமுடன் இசையை ரசிப்பார். அதே ஆர்வத்தில் எனக்கு நாகஸ்வரம் கற்றுத் தாருங்கள் எனக் கேட்டதால் நான் கற்றுத் தந்தேன். தற்போது என்னுடன் சேர்ந்து பல கச்சேரிகளில் பங்கேற்று வரு கிறார்’ என்றார்.