Published : 25 Sep 2023 07:33 PM
Last Updated : 25 Sep 2023 07:33 PM
புதுக்கோட்டை: 2009-ல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 25-ம் தேதி உலக மருந்தாளுநர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவத் துறையில் மருந்தாளுநர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களது அர்ப்பணிப்பு ஆகியவற்றை போற்றும் விதமாக இந்தக் கொண்டாட்டம் அமைகிறது.
நிகழாண்டுக்கான கருப்பொருள் ‘மருந்தியலாளர்கள் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துதல்’ ஆகும். இந்தக் கருப்பொருளானது கரோனா தொற்று காலத்தில் மருந்தாளுநர்கள் ஆற்றிய பணியை போற்றும் விதமாக அமைந்திருப்பதாக மருந்தியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதனால் ஏற்பட்டுள்ள மருந்தாளுநர்களுக்கான அங்கீகாரம் மற்றும் தொழில் வாய்ப்பு ஆகியவற்றை முன்னெடுக்கும் நோக்கத்துடன் நிகழாண்டு மருந்தாளுநர்களையும், மருந்துத் துறையையும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச மருந்தியல் கூட்டமைப்பு உறுதி பூண்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கார்த்திக் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: உயிர் காக்கும் மருந்துகளை வழங்குவதில் மருந்தாளுநர்களின் பணி மிகவும் முக்கியமானது. மருந்தில் கலப்படம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள இயலாதோ, அதுபோல தான் மருந்தாளுநர்களிலும் கலப்படம் கூடாது.
முறையான மருந்தியல் கல்வியை பெறாமல் சிலர் மருந்து கடைகளில் பணிபுரிகின்றனர். பயிர்களுக்கு இடையே முளைக்கும் களைச் செடிகளைப் போன்று மருந்தியல் துறையில் முளைத்துள்ள இந்த போலி மருந்தாளுநர்களையும் களை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். வெளிநாடுகளைப் போன்று இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளிலும் மருந்தாளுநர்களுக்கான உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். மருந்தாளுநர்களை தவிர வேறு யாரும் மருந்தகங்கள் தொடங்க அனுமதி வழங்கக் கூடாது.
ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கு ஏற்ப மருந்துகளை உட்கொள்ளும் முறைகளை தெளிவாக எடுத்துரைக்க மருந்தாளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும், மாறிவரும் கால சூழ்நிலையை அறிந்து கொள்ளும் வகையில் மாதம் ஒரு முறை புத்தாக்க பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மருந்தகத்தில் மருந்தாளுநர்கள் மட்டுமே என்ற முழக்கம் இந்த மருந்தாளுநர்கள் தினத்திலிருந்து ஒலிக்கத் தொடங்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT