

மதுரை: “கடந்த 10 ஆண்டுகளாக நானும் இயற்கை விவசாயிதான். அமைச்சரானதால் விவசாயத்துக்கும் எனக்கும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது” என அமைச்சர் பி.மூர்த்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள வேளாண் உணவு வர்த்தக மையத்தில் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் அறக்கட்டளை, வேளாண் உணவு வர்த்தக மையம் சார்பில் “வைப்ரன்ட் தமிழ்நாடு” என்னும் வேளாண் உணவுப் பொருட்கள் அனைத்துலக வர்த்தகப் பொருட்காட்சி நடந்துவருகிறது. அதனையொட்டி இன்று பொருட்காட்சி அரங்கத்தில், விவசாயிகள், வணிகர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகப்படுத்த உதவும் வகையில் அறிமுகம் மேடை ( லான்ச்பேட்) என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர் மூர்த்தி இன்று திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் பி.மூர்த்தி பேசியது: “காலத்துக்கு உகந்தது சிறுதானியங்கள்தான். எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் உணவுப்பழக்க வழக்கத்தால் புதிய புதிய நோய்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சிறுதானிய உணவை மக்கள் விரும்புகிறார்கள். தற்போது வேளாண்மை செய்வதில் ரசாயனம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை விவசாயிகள், மக்களும் அறிந்துள்ளனர்.
தற்போது ஆரோக்கியமான உணவை வாங்கிச்சாப்பிடுவதை மக்கள் விரும்புகின்றனர். அதற்கு என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துள்ளனர். மக்களுக்கு தேவையானதை கொடுக்க உங்களைப்போன்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளன. தற்போது சிறுதானியம் மூலம் எல்லா வகையான உணவுகளையும் செய்துகொள்ளலாம் என்ற நிலை வந்துள்ளது.சிறுதானியங்கள் மிகச்சிறந்த உணவுப்பொருளாக மாறியுள்ளது. ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. விவசாயிகளிடம் உள்ள தேக்கநிலையை போக்குவதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் வழிவகுக்கும்.
எனக்கு 35 வயதிருக்கும்போது எனது அப்பத்தா மண் சட்டியில் வைத்து சோறும், மீன் குழம்பும் சமைப்பார்கள். பழைய சோறும் மணக்கும், நான்குநாள் வச்சு சாப்பிடும் அளவுக்கு இருக்கும். இயற்கை விவசாயத்தில் செலவு அதிகம். விற்கும்போது நஷ்டம்தான் ஏற்பட்டது. நான் சுமார் 10 ஆண்டாக இயற்கை விவசாயத்தை செய்துவருகிறேன். ஆனால் விற்பனை செய்வது தெரியாமல், ரசாயனத்தில் விளைந்த நெல்லை விற்பதுபோல் விற்றுவந்தேன்.
தற்போது அமைச்சரானதிலிருந்து விவசாயத்திலிருந்து எனக்கு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு மக்களிடையே மாற்றம் ஏற்பட்டு வருகிறது. வணிகப் பெருமக்கள் விற்பனை செய்வதற்கும், விவசாயிகள் உற்பத்தி செய்வதற்கும் இந்தக் கண்காட்சி நல்ல வாய்ப்பாக அமையும்” என்று அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பொருட்காட்சி படைப்பாற்றல் தலைவர் ரத்தினவேல், பொருட்காட்சி தலைவர் திருப்பதி ராஜன், மிராக்கல் ட்ரீ குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனர் மற்றும் இயக்குனர் சரவணகுமரன், துணைத்தலைவர்கள் முத்து, சுரேஷ் குமார், அறிமுக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நாச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.