வெம்பக்கோட்டை அருகே 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை அருகே 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
Updated on
1 min read

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பட்ட இரு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெம்பக்கோட்டையிலிருந்து சுமார் 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள சிவசங்குபட்டியில் சிலர் கட்டிடப் பணிகளுக்காக குழி தோண்டியுள்ளனர். அப்போது, 6 முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இவற்றில் 4 முதுமக்கள் தாழிகள் உடைந்துள்ளன. மீதம் உள்ள 2 முதுமக்கள் தாழிகளை அப்பகுதியினர் பத்திரமாக எடுத்து அங்கு உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

இதுகுறித்து, வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈடுபட்டுள்ள தொல்லியல் அலுவலர் பொன் பாஸ்கர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரெங்கநாதன் ஆகியோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, இருவரும் அங்கு சென்று, முதுமக்கள் தாழியை ஆய்வு செய்தனர். அப்போது, அவை இரண்டும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரியவந்தது. அதோடு, சிவங்குபட்டியில் மேலும் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

அதன்பின்னர், சிவசங்குப்பட்டியிலும் தொல்லியல் அலுவலர் பொன் பாஸ்கர், வட்டாட்சியர் ரெங்கநாதன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அரசு பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 2 முதுக்கள் தாழிகளும் பாதுகாப்பாக வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன.

இதுகுறித்து, தொல்லியல்துறை அலுவலர் பொன் பாஸ்கர் கூறுகையில், “கட்டிடப் பணிகளுக்கு குழி தோண்டியபோது முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அதில், 4 உடைந்துவிட்டன. 2 மட்டுமே முழுமையாக கிடைத்துள்ளன. அவை இரண்டும் வருவாய்த்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள பகுதியில் முறையான ஆய்வு நடத்தப்பட்டால் மேலும் பல தகவல்கள் தெரியவரும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in