

கொழும்பு: அண்மையில் தனது முதல் குழந்தையை இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா - சஞ்சனா தம்பதியர் வரவேற்றனர். இந்நிலையில், அதற்கு தனது வாழ்த்தினை தெரிவித்து, அன்புப் பரிசையும் வழங்கியுள்ளார் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அஃப்ரிடி.
அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் கொழும்பில் விளையாடி வருகின்றன. முதலில் இந்தியா பேட் செய்து வரும் நிலையில் 24.1 ஓவர்கள் விளையாடிய சூழலில் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அன்று ஆட்டம் தடைபட்டது. இந்த போட்டி ‘ரிசர்வ் டே’-வான இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதியர் தங்கள் முதல் குழந்தையை வரவேற்றனர். தங்கள் மகனுக்கு அங்கத் ஜஸ்பிரித் பும்ரா என்றும் பெயர் சூட்டியுள்ளனர். அதற்கு தனது வாழ்த்தை தெரிவித்த ஷாகீன் ஷா அஃப்ரிடி, அன்புப் பரிசையும் வழங்கி உள்ளார். இது அவர்கள் இருவருக்குள்ளும் உள்ள அன்பின் பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு பும்ரா தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இன்றும் மழை பெய்தால் என்ன ஆகும்? இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக இன்றும் நடத்த முடியாமல் தடைபட்டால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து வழங்கப்படும்.