

ராமேசுவரம்: 58 ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடியில் புயலால் சேத மடைந்த கட்டிடங்களை ரூ.5 கோடியில் பழமை மாறாமல் புனரமைக்கும் பணி சுற்றுலாத் துறை சார்பில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் நுழைவாயிலாக ஆங்கிலேயர் ஆட்சியில் தனுஷ் கோடி துறைமுகம் 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்கள் காலத்தில் தனுஷ் கோடியில் துறைமுகக் கட்டிடம், சுங்க அலுவலகம், ரயில் நிலையம், தபால் நிலையம், மருத்துவமனை, பள்ளிக் கூடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டன.
மேலும் ஆங்கிலேயர்கள் தங்களின் வழிபாட்டுக்காக பவளப் பாறைகள் மற்றும் சுண்ணாம்புக் கற்களைக் கொண்டு தேவாலயத்தையும் தனுஷ் கோடியில் கட்டினர். 1964-ம் ஆண்டு டிச.22 அன்று பாக் நீரிணை கடற்பரப்பைத் தாக்கிய கோரப் புயலால் இரவோடு இரவாக தனுஷ் கோடியில் இருந்த அனைத்து அரசுக் கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாகின.
ஆனால் தேவாலயம் இடிபாடுகளுடன் தப்பியது. அதுதான் இன்றும் தனுஷ்கோடியின் அடையாளமாகத் திகழ்கிறது. புயலில் எஞ்சிய கட்டிடங்களைப் பார்வையிட தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி வந்து செல்கின்றனர். புயல் தாக்கி 53 ஆண்டுகளுக்குப் பின் 27.07.2017-ல் ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான புதிய தேசிய நெடுஞ்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
14.05.2022-ல் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் சார்பாக தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டது. இதனால் தனுஷ் கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து தற்போது ஆண்டுக்கு சராசரியாக 4 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
வரலாற்றுச் சின்னமான இந்த தேவாலயத்தில் உள்ள பவளப் பாறைகளையும், சுண்ணாம்புக் கற்களையும் சமூக விரோதிகள் சிலர் உடைத்து எடுத்துச் சென்று தங்களது கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தினர். மேலும் சூறைக்காற்று, மழை மற்றும் புயல் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின் போதும் இந்த தேவாலயத்தின் சுவர்கள் அடிக்கடி இடிந்து விழுந்தன.
இதனால், தனுஷ்கோடி புயலுக்குப் பின்னர் சேதமடைந்து இடிந்த நிலையில் உள்ள கட்டிடங்களை அதன் பழமை மாறாமல் பாதுகாத்திடும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் திட்ட வரைவை தமிழக அரசுக்கு அனுப்பியது.
இது குறித்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறியதாவது: புயலுக்குப் பின்னர் தனுஷ்கோடியில் சேதமடைந்து இடிந்த நிலையில் உள்ள தேவாலயம், கோயில், மருத்துவமனை, பள்ளிக் கூடம், ரயில்வே கேபின் உள்ளிட்ட கட்டிடங்களை அதன் பழமை மாறாமல் புதுப்பிப்பதற்காகவும், தனுஷ் கோடி மற்றும் அரிச்சல் முனையில் பல்வேறு அடிப்படை வசதிகள், வணிக வளாகங்கள் கட்டுவதற்காகவும் தமிழக அரசு சுற்றுலாத் துறை மூலம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினர்.