

கோவை: மருந்தில்லா மருத்துவ சிகிச்சை முறைகளில் இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த சிகிச்சை முறையில் உடல் அசைவுகள் மற்றும் மின் சாதனங்களைக் கொண்டு உடலுக்கு வெளியில், பாதிப்பு உள்ள பகுதியில்மட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதால், பக்கவிளைவுகள் ஏதும்இல்லை. நோயின் காரணிகளைக் கண்டறிந்து குணப்படுத்துவதால், நோயிலிருந்து நிரந்தரமாக குணம் பெற முடியும்.
பிசியோதெரபி சிகிச்சையில், நோய்கள் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை சிகிச்சை முறைகளும் உள்ளதால்,நோய்கள் வராமலும்நம்மைக்காத்துக்கொள்ள முடியும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் போதிய பிசியோதெரபி மருத்துவர்கள் இல்லாமல் உள்ளனர். உதாரணமாக, கோவை மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகைக்கு, குறைந்தபட்சம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 15 மருத்துவர்களாவது இருக்க வேண்டும். ஆனால், 4 பேர் மட்டுமே உள்ளனர்.
இதுகுறித்து, எலும்பியல் பிசியோதெரபி மருத்துவரும், தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவ சங்க மாநில பொதுச்செயலாளருமான ராஜேஸ் கண்ணா கூறியதாவது:
வலி, வாதம், உடல் இயக்க குறைபாடுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு பிசியோதெரபி மருத்துவரை நேரடியாக அணுகி, நோய்களுக்கான காரணிகளைக் கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். பிசியோதெரபி மருத்துவர் மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைக்க மாட்டார். எனவே, இவர் மருந்தில்லா மருத்துவர் ஆவார்.
குறிப்பாக பக்கவாதத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கஅரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்மற்றும் வட்டார மருத்துவமனைகளில் பிசியோதெரபி மருத்துவர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால், கிராமப்புற மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, தனது வாழ்நாள் முழுவதும் பாதிப்புடன்வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
உரிய பிசியோதெரபி சிகிச்சை கிடைக்காததால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், படுத்தபடுக்கையாகி இறந்தே விடுகிறார்கள். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் ஒரு சில பிசியோதெரபி மருத்துவர்களே உள்ளனர். இதனால் அனைத்து நோயாளிகளுக்கும் தொடர் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது.
தமிழக அரசு இதனைக் கருத்தில் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடனடியாக பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்கவும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் பயிற்சி பிசியோதெரபி மருத்துவர்களை, ஊக்க ஊதியத்துடன் தற்காலிகமாக பணியில் அமர்த்தவும் உத்தரவிட வேண்டும்.
அதேபோல, ஆரம்ப மற்றும் வட்டார மருத்துவமனைகளில் பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொது மக்களிடம் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் பக்கவாதத்தின் தாக்கத்தை குறைக்கவும், குணப்படுத்தவும் முடியும்.
காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும்: முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் பிசியோதெரபி சிகிச்சையை சேர்க்க வேண்டும். இதன் மூலம் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக உள்ள பிசியோதெரபி சிகிச்சை எளிதில் கிடைக்க வாய்ப்பாக அமையும். அரசு பிசியோதெரபி கல்லூரிகளில், முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் தொடங்க வேண்டும். அரசு பிசியோதெரபி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை 25-ல் இருந்து 100 இடங்களாக உயர்த்த வேண்டும்.
இதன் மூலம் ஏழை மாணவர்களும் பிசியோதெரபி மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பாக அமையும். ஏற்கெனவே அறிவித்த 5 அரசு பிசியோதெரபி கல்லூரிகளை உடனடியாக தொடங்க வேண்டும். அலோபதி, சித்தா, ஹோமியோபதி, யுனானி, நேச்சுரோபதி மருத்துவத் துறைகளை போன்று பிசியோதெரபி மருத்துவ துறையையும், தனி மருத்துவ துறையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.