Last Updated : 08 Dec, 2017 12:02 PM

 

Published : 08 Dec 2017 12:02 PM
Last Updated : 08 Dec 2017 12:02 PM

விடைபெறும் 2017: தீயாய் வேலை செய்யும் சமூக ஊடகங்கள்!

 

ல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கற்காலத்தில் வாழ்க்கையைத் தொடங்கிய மனித இனம், இன்று தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர்கூடத் தகவல் தொழில்நுட்பம் இப்போது இருக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை. ஆனால், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று தினம் ஒரு மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த மாற்றத்துக்கு சமூக ஊடகங்களும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இந்த ஆண்டு சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியையும் சந்தித்த மாற்றங்களையும் பார்ப்போம்.

ஃபேஸ்புக்

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக்கை மார்க் ஸக்கர்பர்க் தொடங்கியபோது, அது உலக மக்களை ஒன்றிணைக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். இந்த ஆண்டு முக்கியமான ஒரு மைல்கல்லை ஃபேஸ்புக் எட்டியது. ஜூன் மாதத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 200 கோடியாக அதிகரித்ததுதான் அது. சமூக ஊடகங்களிலேயே அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டிருப்பது ஃபேஸ்புக் மட்டுமே.

இந்த ஆண்டு பல புதுமையான மாற்றங்களையும் ஃபேஸ்புக் கண்டது. எங்கிருந்து வேண்டுமானாலும் ஃபேஸ்புக்கில் லைவ் செய்யும் வசதி அறிமுகமானது இந்த ஆண்டின் மிகப் பெரிய மாற்றம். ஸ்மார்ட்போன் ஃபேஸ்புக் பக்கங்களுக்கு மட்டுமே கிடைத்த இந்த லைவ் வசதி, பின்னர் அனைத்துப் பயனாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இதனால் கணினியில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் பயனாளர்கள் நேரலை வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ சேவைகளுக்கு ஃபேஸ்புக் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

இதேபோல் பயனாளர்கள் பார்வையிடும் பக்கத்தைப் பார்க்க நியூஸ் ஃபீட் என்ற ஆப்ஷன் ஃபேஸ்புக்கில் சேர்க்கப்பட்டு, தனிப்பட்ட, வணிகரீதியிலான விஷயங்களைப் பார்க்கும் பக்கம் ‘எக்ஸ்புளோர் ஃபீட்’ என்றும் பிரிக்கப்பட்டது. வணிக ரீதியிலான விளம்பரங்களுடன் வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்துப் பின்தொடரும் நட்சத்திரங்களின் போஸ்ட்களை எக்ஸ்புளோர் ஃபீட்டில் பார்க்கவும் இந்த வசதி உதவியது. இவை தவிர, இன்னும் ஏராளமான மாற்றங்கள் ஃபேஸ்புக்கில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டன.

வாட்ஸ்அப்

ஒவ்வோர் ஆண்டும் வாட்ஸ் அப் செயலி புதுவிதமான மாற்றங்களையும் புதிய பயனாளர்களையும் கண்டு வருகிறது. 2013-ல் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் கடந்த 4 ஆண்டுகளில் 130 கோடிப் பயனாளர்களுடன் உலக அளவில் முன்னணிச் செயலியாக வளர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 10 கோடிப் பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு புதிய மாற்றமாக ஸ்டேட்டஸ் வைப்பதில் புதிய வசதியை வாட்ஸ்அப் கண்டது. இதன் மூலம் பயனர்கள் வண்ணமயமான எழுத்துகளை ஸ்டேட்டஸ் பகுதியில் புகுத்திக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

வாட்ஸ்அப்-ல் கேமரா ஐகானுக்கு மேல் பகுதியில் புதிதாக பென்சில் பட்டன் அறிமுகமானது. இதனால், பயனாளர்கள் வண்ணமயமான டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் பதிவேற்றம் செய்து வாட்ஸ்அப்பைக் கொண்டாடினர். இதற்காகவே இமோஜியை சேர்ப்பது, ஃபான்ட் தேர்வு செய்தல், பேக் கிரவுண்ட் கலர் மாற்றுதல் என மூன்று விதமான ஆப்ஷனை வழங்குகிறது வாட்ஸ்அப். இது போக ஸ்டேட்டஸ் பகுதியில் ஒளிப்படங்களையும் சிறு வீடியோவையும்கூட வைத்துக்கொள்ள முடியும். இது 24 மணி நேரத்துக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

ட்விட்டர்

ஃபேஸ்புக் போலவே இன்னொரு சமூக வலைத்தளமான ட்விட்டரும் இந்த ஆண்டு கணிசமாக வளர்ந்திருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் ட்விட்டரில் புதிதாக இரண்டு கோடிப் பேர் இணைந்திருக்கிறார்கள். 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ட்விட்டர் தற்போது 33 கோடிப் பயனாளர்களுடன் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு ட்விட்டர் கண்ட முக்கியமான மாற்றம், பதிவிடும் எழுத்துகளின் நீளத்தை அதிகரித்துதான். இதற்கு முன்புவரை 140 எழுத்துகள்வரை மட்டுமே பதிவிடும் வசதி இருந்தது. அந்த எண்ணிக்கை 280 ஆக அதிகரித்தது ட்விட்டர். குறைந்த அளவு எழுத்துகளைக் கொண்டு தாங்கள் விரும்பும் செய்தியைப் பதிவுசெய்வதில் பயனாளர்களுக்குச் சிரமம் இருந்ததைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றத்தைச் செய்ததாகத் தெரிவித்தது ட்விட்டர்.

இன்ஸ்டாகிராம்

ஒளிப்படங்களைப் பதிவிடுவதற்காக பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட இன்ஸ்டாகிராம் செயலி இந்த ஆண்டு மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது. 2012-ல் இன்ஸ்டாகிராம் செயலியை ஃபேஸ்புக் வாங்கிய பிறகுப் பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. தற்போதைய நிலையில் 80 கோடிப் பேர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு சூப்பர்ஸும் வசதியையும் டெஸ்க்டாப்பில் பயன்படுத்தும் வசதியும் இன்ஸ்டாகிராமில் அறிமுகமானது. வருவாய் ஈட்டும்வகையில் இன்ஸ்டாகிராமில் ஏற்கெனவே செய்யப்பட்ட மாற்றத்தின் மூலம் அதன் விளம்பர வருவாயும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

யூடியூப்

வீடியோக்களைப் பதிவிடுவதற்காகப் பிரத்யேகமாக 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது யூடியூப். இந்த ஆண்டு அதன் பயனாளர்களின் எண்ணிக்கை 130 கோடியாக அதிகரித்தது. உலகெங்கும் ஒரு நிமிடத்துக்கு 300 மணி நேர வீடியோப் பதிவுகள் பதிவேற்றப்படுகின்றன என்பதிலிருந்து யூடியூபின் வளர்ச்சியைஅறிந்துகொள்ளலாம். சமூக ஊடகங்கள் நேரத்தை வீணடிக்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கு மாறாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் யூடியூப் வழங்கிவருகிறது.

தொடங்கியதிலிருந்து ஒரே லோகோவைப் பயன்படுத்திய யூடியூப் இந்த ஆண்டு அதன் லோகோவை மாற்றியமைத்தது. பார்த்தவுடனேயே வீடியோ பிளேயர் என்பதை உணரும் வகையில் அந்த மாற்றம் இருந்தது. குழந்தைகளுக்காக பிரத்யேகமாக யூடியூப் கிட்ஸ் ஏற்கெனவே தொடங்கப்பட்டிருந்தாலும், அதை இந்த ஆண்டு இன்னும் மெருகேற்றினர்.

சமூக ஊடங்களில் இந்த ஐந்து மட்டுமே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன. ஆனாலும் அண்மைக் காலமாக ரெட்டிட் (Reddit), வைன் (Vine), பின்டரெஸ்ட் (Pinterest), கூகுள் பிளஸ் (Google +) போன்ற சமூக ஊடகங்களும் தொடர்ந்து அதிகமான பயனாளர்களுடன் முன்னேறி வருகின்றன. வரும் காலத்தில் இவையும் முன்னணியில் உள்ள சமூக ஊடகங்களுக்குப் போட்டியாக மாறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x