

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு அடுத்த புத்திரன்கோட்டை கிராமத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட நடுக்கல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்டு வரும் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான சி.சந்திரசேகர் கூறியதாவது: புத்திரன் கோட்டை கிராமத்தில் சிவன் கோயிலுக்கு எதிரில் சாலையின் ஓரமாக மதில் சுவருக்கு அருகில் கண்டறியப்பட்ட நடுகல், நவகண்ட வகையை சார்ந்ததாகும். இரண்டடி உயரமும், இரண்டடி அகலமும் உள்ளது. இந்த நவகண்ட நடுக்கல்லில் உள்ள போர் வீரன் தனது இடது கையால் தலையில் காணப்படும் கிரீடத்தை பிடித்திருப்பது போலவும், வலது கையில் உள்ள கத்தியால் தனது கழுத்தை அறுப்பது போலவும் செதுக்கப்பட்டுள்ளது.
தமிழரின் வழிபாடு, இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு 'கந்தழி' என்று பெயர். தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்தக்களத்துக்கு சென்று உயிரிழக்கும் வீரர்களின் நினைவாகவும், தலைவர்களின் நினைவாகவும் ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக மக்கள் வழிபடுவார்கள். அதற்கு, 'நடுகல்' வழிபாடு என்று பெயர். நடுகல்லில் பலவகை உண்டு. நவகண்டம், அவிப்பலி, அரிகண்டம் தூங்குதலை என்று வகைப்படுத்தலாம்.
புத்திரன்கோட்டை சிவன் கோயிலுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது நவகண்ட நடுகல்வகையைச் சார்ந்ததாகும். நவகண்டம் என்பது ஒரு போர் வீரன் தனது உடலில் தன்னைத்தானே ஒன்பது இடங்களில் வெட்டிக்கொண்டு, அரசர்போரில் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கொற்றவையின் முன், தன் தலையை தானே வெட்டி பலி கொடுப்பதற்கு நவகண்டம் என பெயராகும். 9-ம் நூற்றாண்டு முதல் 13 ம் நூற்றாண்டு வரை நடுக்கல் அமைத்து வழிபடும் வழக்கம் அதிகம் இருந்தது எனலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நவகண்ட நடுகல் வழிபாட்டு முறை, இன்றும் இப்பகுதியில் இருப்பது சிறப்பானதாகும். இவ்வாறு அவர் கூறினார். இதுபோன்ற கள ஆய்வுகள் மூலம் ஏராளமான உள்ளூர் வரலாற்றை பதிவு செய்வதே தங்களின் நோக்கம் என உடன் இருந்த ஆசிரியர் ரமேஷ் கூறினார்.