Published : 22 Dec 2017 11:39 am

Updated : 22 Dec 2017 11:39 am

 

Published : 22 Dec 2017 11:39 AM
Last Updated : 22 Dec 2017 11:39 AM

விடைபெறும் 2017: இணையத்தை வளைத்து தேடிய இந்தியர்கள்!

2017

ணையதளத்தின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துவிட்ட நிலையில், ஒவ்வோர் ஆண்டும் மக்கள் இணையத்தில் எதைத் தேடினார்கள் என்ற விஷயமும் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் இந்தியர்கள் 2017-ல் அதிகம் தேடிய விவரங்கள் என்னென்ன?

சினிமா


தேடியந்திரங்களில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ள பட்டியலில், சினிமா, கிரிக்கெட் தொடர்பான தகவல்களே அதிகம் தேடப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இளைஞர்கள் இந்த விஷயங்களைத்தான் அதிகம் தேடியிருக்கிறார்கள். இதில் ‘பாகுபலி-2’ படத்தைப் பற்றிய தகவல்களைத்தான் ஆர்வத்துடன் சேகரித்திருக்கின்றனர் நெட்டிசன்கள். அடுத்ததாக ‘தங்கல்’, ‘ஹால்ஃப் கேர்ள்பிரெண்ட்’, ஷாருக்கான் நடித்த ‘ரயீஸ்’, அலியா பட் நடித்த ‘பத்ரிநாத் கி துல்ஹானியா’ ஆகிய திரைப்படங்களைப் பற்றியும், அதுதொடர்பான செய்திகளையுமே அதிகம் தேடியிருக்கிறார்கள்.

பான் கார்டு பரபர

சினிமா, விளையாட்டு மட்டுமல்ல; மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் கூகுளில் அதிக தேடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ‘பான் கார்ட் உடன் ஆதார் நம்பரை இணைப்பது எப்படி?’ என்பதைப் பற்றித்தான் அநேகர் கூகுள் ஆண்டவரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதேபோல சரக்கு மற்றும் சேவை வரியைப் (ஜிஎஸ்டி) பற்றிய அதிகமான தேடல்களும் இந்த ஆண்டு கூகுளில் ஹிட் அடித்திருக்கின்றன. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கிறது.

பிட்காயின்

வழக்கமாக இந்திய நெட்டிசன்கள் பங்குச்சந்தை, முதலீடு விஷயங்களைத் தெரிந்துகொள்வதிலும் ஆர்வம் காட்டுவது வாடிக்கை. இந்த ஆண்டு அது அதிகமாகியிருகிறது. உபயம், பிட்காயின் என்று சொல்கிறது கூகுள். பிட்காயின் எனப்படும் ‘கிரைப்டோகரன்சி’ (cryptocurrency) பற்றி அறிந்துகொள்ளவே இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர். இந்தியாவில் பிட்காயின் வாங்குவது எப்படி, பிட்காயின் எங்கு கிடைக்கும், பிட்காயின் முதலீடு நம்பகத்தன்மை உடையதா? போன்ற கேள்விகளைக் கேட்டுதான் கூகுள் தேடு பொறியில் அதிகம் முறை கேட்டிருக்கிறார்கள். பிட்காயின் பற்றி எதிர்மறையான செய்திகள் வந்தபோதும், அதைப் பொருட்படுத்தாமல் இந்தியர்கள் அதிகம் கவனம் செலுத்தியிருப்பது ஆச்சரியமளிக்கிறது என்கிறது கூகுள்.

கிரிக்கெட்

ஐ.பி.எல். 10-வது சீசன் நடைபெற்ற காலகட்டத்தில் அதுதொடர்பான செய்திகளைப் படிக்கவும் ஒளிப்படங்களையும் இளைஞர்கள் அதிகம் தேடியிருக்கிறார்கள். சாம்பியன் டிராபி போட்டி நடந்தபோது இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் பற்றிய விவரங்களையும் இளைஞர்கள் அதிகம் தேடியிருகிறார்கள்.

சலுகை மேளா

இந்த ஆண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கிய சலுகைகள் இந்தியர்களைப் பெரிதும் கவர்ந்த நிலையில், அது இணையத்திலும் எதிரொலித்திருக்கிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் போட்டிபோட்டு கொண்டு சலுகைகள் வழங்கியதால், அது பற்றிய விவரங்களை அறிய அந்த நிறுவனங்களின் தளங்களை இந்தியர்கள் விசிட் அடித்திருக்கிறார்கள். ஒரு நிறுவனம் அறிவித்த, ஸ்மார்ட்ஃபோனை ஆன்லைனில் எப்படிப் பதிவுசெய்து வாங்குவது என்ற கேள்வியும் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது.

கிடுகிடுக்க வைத்த வைரஸ்

இந்தியாவில் பெரியளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், உலகின் பல வல்லரசு நாடுகளை நடுங்கவைத்த ‘ரான்சம்வேர்’ என்ற கம்ப்யூட்டர் வைரஸ் பற்றிய தேடலும் கூகுளில் ஹிட் அடித்தது. செல்போனில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படி போன்ற கேள்விகளும் கூகுள் தேடலில் இந்த ஆண்டு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம்

இவைதவிர, இந்த ஆண்டில் தொடக்கத்தில் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றியும், பீட்டா அமைப்பைப் பற்றிய தகவல்களும் கூகுளில் அதிகம் தேடப்பட்டிக்கின்றன. மார்ச் மாதத்துக்குப் பிறகு பி.எஸ்.-3 வாகனங்களை இந்தியாவில் விற்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, பி.எஸ்.-3 வாகனம் என்றால் என்ன? என்ற கேள்வியை ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் கூகுளில் கேட்டதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

இது காதல் நேரலை!

லைஃப் ஸ்டைல்
x