Last Updated : 31 Aug, 2023 02:33 PM

 

Published : 31 Aug 2023 02:33 PM
Last Updated : 31 Aug 2023 02:33 PM

உடுமலையில் நோயாளிகள் பசியாற ஆண்டு முழுவதும் அன்னதானம்

உடுமலை: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி உடுமலையில் தொடங்கப்பட்ட ‘பசியில்லா உடுமலை’ இயக்கத்தின் பயணத்தில், 365-வது நாளை கொண்டாடும் விதமாக 3 வண்ணங்களில் பொதுமக்களுக்கு கலவை சாதம் விநியோகிக்கப்பட்டது.

உடுமலை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளுடன் வருவோரின் பசியறிந்து, அவர்களுக்காக தொடங்கப்பட்ட இப்பணி ஓராண்டை கடந்துள்ளது. மாவட்டத்தில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அடுத்ததாக, மிக அதிகளவு நோயாளிகள் பயன்பெற்றுவரும் இடமாக உடுமலை அரசு மருத்துவமனை உள்ளது.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், குமரலிங்கம், தளி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களிலுள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், 20-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள், கேரளா மாநிலம் மறையூர் சுற்று வட்டாரத்தில் இருந்தும் தினமும் 1000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர். 400-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகப்பேறு, குழந்தை நலன், பொது, அறுவை சிகிச்சை, எலும்பு, பல், கண், காது, மூக்கு, தோல் என பல்வேறு நோய்க ளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு மட்டுமே அரசு சார்பில் உணவு அளிக்கப் படுகிறது. உடன் இருப்போர் தனியார் உணவகங்களுக்கு சென்றுதான் உணவருந்த வேண்டும்.

மிகவும் வறுமையான சூழல் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் உணவருந்த முடியாமல் பலரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனை அறிந்த உடுமலை ராயல்ஸ் அரிமா சங்கத்தின் மண்டலத் தலைவரான யோகானந்த் (43), அரசு மருத்துவமனையில் 100 பேருக்கு தினமும் அன்னதானம் வழங்கும் பணியை தொடங்கினார்.'

பின் அவரது நண்பர்கள், வாடிக்கையாளர், சமூக ஆர்வலர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாட்களில் பசியில்லா உடுமலை இயக்கத்துடன் இணைந்து இச் சேவையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். ஏழைகளுக்கு உணவு வழங்கும் பணியை ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் 365 நாட்களாக தொடர்ந்து வருவது உடுமலை மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கு.சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள், தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அதில் தேசியக் கொடியின் வண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், 3 வண்ணங்களில் தக்காளி, தயிர், மல்லி சாதங்கள் விநியோகிக்கப்பட்டன.

இது குறித்து யோகானந்த் கூறும்போது, “மருத்துவமனையில் சிகிச்சைக்காக நோயாளிகளுடன் வருவோர், அவ்வப்போது பசியை போக்க உதவி கோரி வருவர். என்னால் முடிந்த உதவிகளை செய்தேன். தொடர்ச்சியாக வருவதை கண்டு விசாரித்தபோதுதான் மருத்துவமனைக்கு வரும் பலரும் உணவு வாங்கக் கூட பணம் இன்றி அவதிக்குள்ளாவது தெரியவந்தது.

2022 ஆகஸ்ட் 15-ம் தேதி முதன் முதலில் 100 பேருக்கு பாக்கெட் சாதமும், ஒரு குடிநீர் பாட்டிலும் வழங்கினோம். இதற்காக வாடிக்கையாளர்கள், நண்பர்களிடமும் உதவி கோரினேன். அந்த வகையில் 30 பேர் தொடர்ந்தும், சுமார் 250 பேர் பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களிலும் உணவு வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இதனால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், கூலி வேலைக்கு செல்வோர் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். பசியில்லா உடுமலை இயக்கத்தில் இணைத்துக் கொண்டு உதவி வருவோருக்கும், சமையல் கலைஞர்களுக்கும் விரைவில் பாராட்டு விழா நடைபெறும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x