தமிழக நெடுஞ்சாலைகளில் தொடரும் பாண்டிய மன்னர்களின் பாரம்பரிய எல்லை குறியீடுகள்

தமிழக நெடுஞ்சாலைகளில் தொடரும் பாண்டிய மன்னர்களின் பாரம்பரிய எல்லை குறியீடுகள்
Updated on
2 min read

உத்தமபாளையம்: திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ( எண் 183 ) பயணிப்பவர்கள் கொட்டாரக்கரா எத்தனை கிலோ மீட்டர் என்று குறிப்பிடப்பட்டுள்ள மைல் கற்களை வழி நெடுகிலும் காண முடியும்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே இருந்து வத்தலகுண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், குமுளி என்று வழிநெடுக இந்த மைல் கற்கள் வாகன ஓட்டுநர்களுக்கு வழிகாட்டுகின்றன. கேரளாவில் புகழ்பெற்ற திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம் என பல ஊர்கள் இருந்தாலும் அதை குறிப்பிடாமல் பலருக்கும் தெரியாத இந்த கொட்டாரக்கரா எனும் ஊர் பெயரை மைல் கல்லில் குறிப்பிட்டுள்ளது பல ருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறிய ஊருக்கு திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதன் பின்னணியில் பிரிட்டிஷ் கால பாரம்பரிய ஒப்பந்தமே காரணமாக உள்ளது. பிரிட்டிஷ் கால ஆட்சியின்போது பாண்டிய மரபைச் சார்ந்த பூஞ்ஞார் சமஸ்தான ஆட்சி இப்பகுதியில் நடைபெற்றது.

இதன் தலைநகரம் தான் கொட்டாரக்கரா. கரையில் அமைந்துள்ள அரண்மனை, கோட்டை அமைந்துள்ள நிலம் என்றெல்லாம் இதன் பொருள் குறித்து கூறப்படுகிறது. பூஞ்ஞார் சமஸ்தானத்தின் இன்றைய தமிழக எல்லையின் ஒருபகுதி ஆண்டிபட்டி, வத்தலகுண்டு வரை இருந்துள்ளது. பிரிட்டிஷ் கால ஆட்சியில் இந்த சமஸ்தான எல்லையை குறிப்பிடும் வகையில் எல்லைக்கற்கள் நடுவதற்கான ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது.

இந்த பாரம்பரியத்தின் நினைவாக தற்போதும் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் பூஞ்ஞார் சமஸ்தான தலைநகர எல்லை குறித்த மைல் கற்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. அன்றைய பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக தற்போதும் கொட்டாரக்கரா குறியீடுகள் தமிழக நெடுஞ்சாலைகளில் தொடர்கின்றன.

இது குறித்து ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.அப்பாஸ் கூறுகையில், பிரிட்டிஷ் காலத்தில் பூஞ்ஞார் சமஸ்தானத்தின் எல்லை இன்றைய தமிழகத்துக்குள்ளும் படர்ந்து விரிந்திருந்தது. அதன் மன்னர்கள் தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டி மற்றும் வத்தலகுண்டு கணவாய் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து எதிரிகள் வருவதை கண்காணித்து வந்துள்ளனர்.

கே.எம்.அப்பாஸ்
கே.எம்.அப்பாஸ்

பூஞ்ஞார் சமஸ்தானமும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் பல ஒப்பந்தங்களை போட்டுள்ளனர். அதில் ஒன்று தான் எல்லை வரையறை குறியீடு அமைப்பது. அந்த பாரம்பரிய நினைவாக இன்னமும் கொட்டாரக்கரா இடத்தின் தூரத்தை குறிக்கும் மைல் கற்கள் திண்டுக்கல், தேனி மட்டுமல்லாது, திருமங்கலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in