Published : 15 Dec 2017 12:08 pm

Updated : 15 Dec 2017 12:08 pm

 

Published : 15 Dec 2017 12:08 PM
Last Updated : 15 Dec 2017 12:08 PM

விடைபெறும் 2017: மைதானங்களை அதிர வைத்தவர்கள்

2017

விளையாட்டுத் துறையில் ஒரே வீரர் அல்லது வீராங்கனை வாழ்நாள் சாதனையாளராக வலம் வர முடியாது. திடீரென ஒருவர் உச்சத்துக்குச் செல்வார். உச்சத்தில் இருந்தவர் தலைக்குப்புறக் கிடப்பார். குறிப்பிட்ட ஆண்டில் களத்தில் நின்று சாதித்தவர்களே அந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் அரியணையை அடைவார்கள். அப்படி 2017-ம் ஆண்டு ஜொலித்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் யார்?

ரவிச்சந்திரன் அஸ்வின்


இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத சுழல் மன்னரான அஸ்வின், இந்த ஆண்டு ஓசையில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தினார். நாக்பூரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கடந்தவர் என்ற சாதனையைச் சொந்தமாக்கிக்கொண்டார். 56 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி செய்திருந்த சாதனையையும் தரைமட்டமாக்கினார். உள்ளூரில்தான் அஸ்வின் ஜொலிக்கிறார் என்ற விமர்சனம் ஒருபுறம் இருந்தாலும், இன்றைய நிலையில் இவர் மட்டுமே சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருக்கிறார்.

பி.வி. சிந்து

பாட்மிண்டனில் இந்தியாவின் ‘ஒன் வுமன் ஆர்மி’யாகப் போய்க்கொண்டிருந்த சாய்னா நேவாலைப் பின்னுக்குத் தள்ளி உலக பாட்மிண்டனின் ராணியாகக் கோலோச்சிக்கொண்டிருக்கிறார் பி.வி. சிந்து. இந்த ஆண்டு கொரியன் பாட்மிண்டன் சூப்பர் சீரிஸில் சாம்பியன் பட்டம் வென்றபோது, அதிகப் புள்ளிகள் பெற்று உலக பாட்மிண்டன் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறினார் பி.வி. சிந்து. உலகத் தரவரிசையில் இரண்டாம் இடம்வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்தது. தற்போதைய நிலையில் தரவரிசையில் 3-ம் இடத்தில் நீடிக்கிறார்.

விராட் கோலி

கிரிக்கெட்டில் விராட் கோலி இந்த ஆண்டு செய்யாத சாதனைகளே இல்லை. இந்த ஆண்டு மட்டும் டெஸ்ட் போட்டிகளில் 3 இரட்டைச் சதங்களை விளாசினார். கேப்டனாக ஆறு இரட்டைச் சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாராவைச் சமன் செய்தார். ரன் மெஷினாக மாறி இந்த ஆண்டில் மட்டும் அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 2,818 ரன் விளாசியிருக்கிறார். சர்வதேசப் போட்டிகளில் 50 சர்வதேச சதங்களையும் இந்த ஆண்டு கடந்திருக்கிறார். விராட் கோலி கேப்டனாக இந்திய அணிக்கு 9 டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து வென்றுக் காட்டியதும் இந்த ஆண்டில்தான்.

லட்சுமணன்

இந்த ஆண்டு தமிழக விளையாட்டு வீரர் ஒருவரின் தனிப்பட்ட சாதனையாகப் புதுக்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணனின் வெற்றியை ஆராதிக்கலாம். புவனேஸ்வரில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் லட்சுமணன் தங்கம் வென்று தமிழகத்தின் தங்க மகனானார். மிகவும் பின்தங்கிய, ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், இளம் வயதிலிருந்தே வெறுங்காலில் புதுக்கோட்டை சாலைகளில் ஓடி பயிற்சி பெற்றவர். விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு லட்சுமணன் இன்று ஒரு ரோல் மாடல்.

கிடாம்பி ஸ்ரீகாந்த்

பாட்மிண்டனில் மகளிர் பிரிவில் பி.வி. சிந்து ஒரு புறம் சூறாவளியாகச் சுழன்று அடித்த வேளையில் ஆண்கள் பிரிவில் ஓசையே இல்லாமல் வெற்றிக்கொடியை நாட்டினார் கிடாம்பி ஸ்ரீகாந்த். இந்த ஆண்டு மட்டும் இந்தோனேஷிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபன், டென்மார்க் ஓபன், பிரெஞ்சு ஓபன் என சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்று உலகின் தரமான பாட்மிண்டன் வீரர்களில் ஒருவராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த். தரவரிசைப் பட்டியலிலும் ஏற்றம் கண்ட கிடாம்பி ஸ்ரீகாந்த், 4-வது இடத்தில் உள்ளார்.

மித்தாலி ராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்து அதற்கு தனி அந்தஸ்து ஏற்படுத்திக்கொடுத்தார் மித்தாலிராஜ். இவரது தலைமையிலான அணி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிவரை சென்று, நூலிழையில் இங்கிலாந்திடம் கோப்பையைக் கோட்டைவிட்டது. தனிப்பட்ட சாதனையாக ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 7 அரை சதங்களை அடித்த முதல் வீராங்கனை, ஒரு நாள் போட்டியில் அதிக ரன் அடித்த வீராங்கனை, 6 ஆயிரம் ரன் கடந்த முதல் வீராங்கனை என்ற பெருமைகளை இந்த ஆண்டு படைத்தார் மித்தாலி ராஜ். அனைத்துக்கும் மகுடம் வைத்தாற்போல் தரவரிசையிலும் இந்த ஆண்டு முதலிடம் பிடித்தார் மித்தாலி ராஜ்.

மீராபாய் சானு

மகளிர் பளுதூக்குதலில் இந்த ஆண்டு இந்தியாவின் கொடியை உயரப் பறக்கவிட்டார் மீராபாய் சானு. அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்கி முதலிடம் பிடித்தார் மீராபாய். உலகச் சாம்பியன்ஷிப் பளுதூக்குதலில் கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர் மட்டுமே. இதற்கு முன்பு 1994, 95-ம் ஆண்டுகளில் கர்ணம் மல்லேஸ்வரி தங்கம் வென்றதே சாதனையாக இருந்தது. அந்த வரலாற்றை மாற்றிக் காட்டியிருக்கிறார் மீராபாய் சானு.

பங்கஜ் அத்வானி

பில்லியர்ட்ஸ் விளையாட்டில் இந்தியாவின் முகமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் பங்கஜ் அத்வானிக்கு இந்த ஆண்டும் மறக்க முடியாததாக அமைந்தது. கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து வீரர் மைக் ரசலை வீழ்த்தி பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டம் வென்றார். இது பங்கஜ் அத்வானி வென்ற 18-வது பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டம் என்ற பெருமையையும் பெற்றுத் தந்தது.

ஹரிந்தர் பால் சாந்து

ஸ்குவாஷ் விளையாட்டில் இந்த ஆண்டு ஹரிந்தர் பால் சாந்து குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தார். சண்டிகரில் பிறந்து சென்னையில் வாழ்ந்துவரும் ஹரிந்தர் பால் சாந்துவின் ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றது கவனம் பெற்றது. அடிலெய்டில் நடந்த இந்தத் தொடரில் உலகின் முதல்நிலை வீரர்களான நெதர்லாந்தின் பியட்ரோ ஸ்வெட்டர்மேன், ஆஸ்திரேலியாவின் ரைஸ் டௌலிங் போன்றவர்களை வீழ்த்தினார். இந்த சாம்பியன்ஷிப் வெற்றி சாந்துவின் 8-வது தொழில்முறை பட்டம். இந்த ஆண்டில் அவர் பெற்ற 3-வது சாம்பியன் பட்டம் இது.

பிரனாய் குமார்

இந்த ஆண்டு உலக பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கும் இன்னொரு இந்திய வீரர் பிரனாய்குமார். தற்போது தவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் பிரனாய் குமார், இந்த ஆண்டில் மட்டும் 45 போட்டிகளில் விளையாடி 31 வெற்றிகளை வசப்படுத்தியிருக்கிறார். இதில் இந்தோனேஷிய ஓபன், வியட்நாம் ஓபன் தொடர்களை வென்றதும் அடங்கும்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x