

சின்னமனூர்: ஓணம் பண்டிகைக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் தேனி மாவட்டத்தில் நள்ளிரவில் தலையில் சிறிய மின்விளக்கை பொருத்தி பூ பறிக்கும் பணியில் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் நடைபெறும் ஓணம் பண்டிகையை கணக்கிட்டு தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி, கோட்டூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி, வேப்பம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பூ விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை வரும் 29-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பூ அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தின் பிரபல பூ மார்க்கெட் சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் உள்ளது.
20 கடைகள் உள்ள இச்சந்தையில் தினமும் சராசரியாக 5 டன் அளவுக்கு பூக்கள் விற்பனை நடை பெறும். ஓணம் பண்டிகையை யொட்டி தற்போது 8 டன்னாக அதிகரித்துள்ளது. கேரளாவுக்கு அருகில் தேனி மாவட்டம் உள்ளதால் அங்குள்ள வியாபாரிகள் பலரும் சீலையம்பட்டிக்கு வந்து பூக்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதற்காக அதிகாலையிலேயே பூ விற்பனை தொடங்குகிறது. இந்த பூக்கள் முற்பகலுக்குள் கேரளாவின் பல பகுதிகளுக்கும் சென்று விடுகிறது. ஆகவே பூக்களை அதிகாலையிலேயே கொண்டு வரும் வகையில் விவசாயிகள் நள்ளிரவில் பூக்களை பறிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். நள்ளிரவு 1 மணிக்கு வரும் தொழிலாளர்கள் அதிகாலை 4 மணி வரை இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
நள்ளிரவு என்பதால் தொழிலாளர்கள் நெற்றியில் சிறிய மின்விளக்கை பொருத்தியபடி பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் பூ வாசனைக்கு அதிகம் பாம்புகள் வருவதால் பாதுகாப்புக்காக முழங்கால் வரையிலான பூட்ஸ் அணிந்து கொள்கின்றனர்.
இது குறித்து தொழிலாளி சீதா லட்சுமி கூறுகையில், பகலில் மற்ற வேலைக்குச் செல்வோம். இரவில் கூடுதல் பணியாக இங்கு பூ பறிக்க வந்திருக்கிறோம். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக் கிறது. இருப்பினும் பாம்புகள் அதிகளவில் வரும். சிறிய பாம்புகளிடமிருந்து இந்த பூட்ஸ் பாதுகாக்கும். பெரிய பாம்புகளால் பாதிப்பு ஏற்படும். சிலர் பாம்பு கடித்து இறந்திருக்கின்றனர் என்றார்.