

விழுப்புரம்: சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், விழுப்புரத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம்வகுப்பு வரை படித்த ரயில்வே பள்ளி மூடப்பட்டு கிடக்கிறது.
இந்தப் பள்ளியை, மீண்டும் திறந்து, முன்பு போல் அனைத்து தரப்பு மாணவர்களையும் சேர்த்து, வீரமுத்துவேலுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே நிர்வாகம், தனது ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு தொடக்கத்தில் அவர்களுக்கான குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகளை நாடு முழுவதும் கட்டியது.
இந்த பணியாளர் நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக, விழுப்புரம் ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே குடியிருப்புக்கு மத்தியில் ரயில்வே இருபாலர் ஆங்கில வழி உயர்நிலைப் பள்ளி (ரயில்வே மிக்ஸ்டு ஸ்கூல்) தொடங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் போது, இயற்கைச் சூழலில் 04.02.1924 அன்று இப்பள்ளி தொடங்கப்பட்டது.
தொடக்கத்தில் 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை இயங்கிய இந்தப் பள்ளி, கடந்த 1998-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. ஒருகட்டத்தில் இதில் ரயில்வே ஊழியர்களின் பிள்ளைகள் மட்டுமின்றி, வெளி மாணவர்களும் சேர அனுமதிக்கப்பட்டனர். இப்பள்ளியில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர்.
ஆங்கிலோ- இந்தியன் பாடத் திட்டத்துடன், ஆங்கில வழியில் இப்பள்ளி இயங்கியது. 2011-ம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்திய பின், ஆங்கில வழியில் அப்பாடத் திட்டம் இப்பள்ளியில் கடைப்பிடிக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு வரையில் 1,000 மாணவ, மாணவிகளுடன் சிறப்பாக இயங்கி வந்த இந்தப் பள்ளியை ரயில்வே நிர்வாகம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அதன்பின் தரம் குறைந்தது.
ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இந்தப் பள்ளி இயங்கினாலும், மாவட்டக் கல்வித் துறையின் மூலம் தேர்வுகள் உள்ளிட்ட பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. தனியார் பள்ளி மோகம் அதிகரிக்க தொடங்கிய நிலையில், கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பின் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறையத் தொடங்கியது.
இந்தப் பள்ளியையும் சேர்த்து தெற்கு ரயில்வே, தங்களது பணியாளர்களின் குழந்தைகள் பயில்வதற்காக மொத்தம் 9 பள்ளிகளை நடத்தியது. கேரள மாநிலம் பாலக்காடு, தமிழகத்தில் அரக்கோணம், பெரம்பூர், மதுரை, ஈரோடு, ஜோலார்பேட்டை, போத்தனூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் இந்தப் பள்ளிகள் இயங்கின.
இந்நிலையில், தெற்கு ரயில்வே கடந்த 2021 ஏப்ரல் 30-ம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், “புதிதாக மாணவர்களைச் சேர்க்க வேண்டாம். 9 பள்ளிகளும் மூடப்படவுள்ளன. இங்கு பயிலும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரத்தில் இயங்கிய இந்தப் பள்ளியும் 2021-ம் ஆண்டு நிர்ந்தரமாக மூடப்பட்டது.
அதன்பின் பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு. தற்போது அந்த வளாகம் வெறும் மைதானமாக காட்சி அளிக்கிறது. “விழுப்புரத்தில் கடந்த 97 ஆண்டுகளாக இயங்கிய ஒரு பள்ளி இது. சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட சாதனையாளர்களை உருவாக்கிய ஒரு பள்ளி இன்று தடம் தெரியாமல் மைதானமாக காட்சி அளிப்பது மிக கொடுமையாகவே உள்ளது.
இந்தப் பள்ளியை இதே இடத்தில் மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும். அவர்களின் லாப பங்களிப்பில் பொது நோக்குடன் இப்பள்ளியை மீண்டும் நடத்துவதில், அவர்களுக்கு எந்த ஒரு பெரிய நஷ்டமும் ஏற்பட்டு விடாது.” என்று இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த புருஷோத்தமன் தெரிவிக்கிறார்.
ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டால், “எங்கள் துறையின் கொள்கை முடிவு இது” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொள்கின்றனர். ரயில்வே துறையைப் பொருத்தவரையில், தமிழகத்துக்கு ஒன்று என்றால் பலமுறை கோரிக்கை வைத்து, முட்டி மோதி ஒன்றைப் பெற வேண்டும். எந்த ஆட்சியாக இருந்தாலும் இதுதான் நடைமுறை. இந்தச் சூழலில் நிரந்தரமாக இழுத்து மூடப்பட்ட இப்பள்ளியை தெற்கு ரயில்வே மீண்டும் எடுத்து நடத்துவது சந்தேகமே என்கின்றனர் இத்துறையின் செயல்பாட்டை நன்கு உணர்ந்தவர்கள்.