Published : 25 Aug 2023 09:03 AM
Last Updated : 25 Aug 2023 09:03 AM

பெயர் வெளியிட வேண்டாம் என்று கூறி மதுரையில் மருத்துவமனை தொடங்க ரூ.6 கோடியை அள்ளிக் கொடுத்த வள்ளல்

மதுரை மாவட்டம் சரந்தாங்கி கிராமத்தில் சிவானந்தா ஆசிரம வளாகத்தில் இலவச பொது மருத்துவமனையைத் திறந்துவைத்த மாவட்ட ஆட்சியர் சங்கீதா. உடன், மருத்துவர் நாராயணசாமி, ஆசிரம நிர்வாகிகள் உள்ளிட்டோர். படம்: என்.தங்கரத்தினம்

மதுரை: மதுரை நத்தம் சாலை அருகே சரந்தாங்கியில் உள்ளது சிவானந்த ஆசிரமம். இங்கு இயற்கை மருத்துவம் சார்ந்த யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சியை வெளிநாட்டினர் உள்ளிட்ட பலரும் பெற்று வருகின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த கிராமத்தினருக்கு ஆசிரமம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஆசிரம வளாகம் முழுவதும் பசுமை வளாகமாகப் பராமரிக்கப்படுகிறது. இந்த ஆசிரம வளாகத்தில் புதிய 2 மாடிக் கட்டிடத்தில் இலவச மருத்துவமனை நேற்று திறக்கப்பட்டது. மதுரை ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா திறந்து வைந்தார்.

இதில் சோழவந்தான் எம்எல்ஏ. ஆ.வெங்கடேசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், சரங்தாங்கி ஊராட்சித் தலைவர் விஜயலட்சுமி, அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். இந்த மருத்துவமனையில் அறுவைசிகிச்சை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் சிகிச்சை முழுவதும் இலவசம். கட்டிடம், 2 ஆண்டுகளுக்கு சிகிச்சை, மருத்துவப் பணியாளர்கள் ஊதியம் என அனைத்துச் செலவுகளையும் ஏழை மக்களுக்காக வெளிநாட்டு பிரமுகர் ஒருவர் ஏற்றுள்ளார். இதற்காக அவர் ரூ.6 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது குறித்து ஆசிரம நிர்வாகி கூறியதாவது: இப்பகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு இயற்கை சார்ந்த மருத்துவ வசதிகள் ஏற்கெனவே வழங்கி வருகிறோம். தற்போது சிவானந்தா இலவச கிராமிய பொது மருத்துவமனையைத் திறந்துள்ளோம். இந்த இலவச மருத்துவ வசதியை ஏழை மக்களுக்கு அளிக்க மூல காரணம் வெளிநாட்டுப் பிரமுகர் ஒருவர்தான்.

எங்கள் ஆசிரமத்தின் சேவையால் ஈர்க்கப்பட்ட அவர் ரூ.6 கோடி நன்கொடை அளித்துள்ளார். அவர் வழங்கிய நிதியில்தான் 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 24 மணி நேர மருத்துவமனையாகச் செயல்படும். 2 மருத்துவர்கள், 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருப்பர். இங்கு படுக்கை வசதி, வெளி மற்றும் உள் நோயாளிகள் பிரிவு, லேப், எக்ஸ்ரே, இசிஜி, ரத்த அழுத்தம், அறுவை சிகிச்சை அரங்கு, இதயப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இங்கு சிகிச்சை மட்டுமின்றி, மருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் இலவசம்தான். இவ்வளவு பெரிய தொகையை அளித்துள்ள பிரமுகர் தன்னைப் பற்றி எந்த அடையாளத்தையும் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். ஏழை மக்களுக்கு சரியான வழியில் பலனைச் சேர்க்க வேண்டும் என்பதால் எங்கள் ஆசிரமம் மூலம் இதைச் செயல்படுத்துகிறார்.

அவர் அளித்த நிதியின் மூலம் 2 ஆண்டுகளுக்கு இலவச சேவையை அளிப்போம். இது அலங்காநல்லூர், பாலமேட்டை சுற்றியுள்ள கிராமத்தினர், நெடுஞ்சாலையில் பயணிப் போரில் அவசர உதவி தேவைப்படுவோர் என பலரும் பயனடைலாம். குறிப்பாக இப்பகுதி ஏழை மக்களுக்கு மிகுந்த பலன் தரும்.

மருத்துவமனை நடத்தும் அனுபவம் எங்களுக்கு இல்லாதததால், மருத்துவர் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனம், மருத்துவமனை நிர்வாகப் பொறுப்பை மதுரை விக்ரம் மருத்துவமனை ஏற்றுள்ளது. தரமான சிகிச்சை நிச்சயம் கிடைக்கும். 2 ஆண்டுகள் முடிவில் இலவச சிகிச்சையைத் தொடர்வதற்கு உதவப் போதிய நிதியை நன்கொடையாக யாரேனும் வழங்கினால், மருத்துவமனை தொடர்ந்து இலவச சேவையை வழங்கும். இல்லாத சூழலில் இயற்கை சார்ந்த மருத்துவ சேவைக்கு மாறுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிவானந்தா ஆசிரமத் தலைவரும், விக்ரம் மருத்துவமனை தலைமை நிர்வாக இயக்குநருமான மருத்துவர் நாராயணசாமி கூறுகையில், ‘ இலவச மருத்துவமனையை சிறப்பாக நிர்வகிக்க அதன் நிர்வாகப் பொறுப்பை விக்ரம் மருத்துவமனை ஏற்றுள்ளது. ஏழை மக்களின் நலன் கருதி இப்பொறுப்பை ஏற்றுள்ளோம். எங்கள் ஊழியர்கள் அனைத்து சிகிச்சைகளையும் வழங்குவர்.

மருத்துவமனை வளாகத்தில் அவசர வாகன வசதியும் செய்யப்படும். இலவச சிகிச்சை பெறுவோர் மேல் சிகிச்சை தேவைப்பட்டால் 108 ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகள் விருப்பப்படி அரசு அல்லது தனியார் மருத்துவமனை என எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையால் மதுரை மாவட்டத்தின் தென்பகுதி மக்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும்.

மாவட்டத்தின் வடபகுதி மக்கள் பயன்பெற முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை நினைவு கூரும் வகையில், கருணாநிதி இன்ஸ்டி டியூசன் ஆப் மெடிக்கல் சயின்ஸ் ( கிம்ஸ் - Kims ) என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஒரு கிராமிய மருத்துவமனையை இப்பகுதியில் நிறுவ முன்வர வேண்டும், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x