நாட்டு ரக பயிர்களை பாதுகாக்க விதைகளை விவசாயிகளே உருவாக்க வழிகாட்டும் மதுரை இளைஞர்!

காடைக்கன்னி என்னும் சிறுதானிய விதைகள்
காடைக்கன்னி என்னும் சிறுதானிய விதைகள்
Updated on
2 min read

மதுரை: சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் நாட்டுக் காய்கறி ரக விதைகளை விவசாயிகளே உருவாக்க வேண்டும். விதைகளை விலை கொடுத்து வாங்கும் நிலையை தடுத்து தாமாகவே உற்பத்தி செய்ய வேண்டும் என விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் தங்களாச்சேரியைச் சேர்ந்தவர் அன்னவயல் காளிமுத்து (36). எம்.ஏ., எம்.பில். (வரலாறு) படித்தவர். இவர் இயற்கை முறை விவசாயத்தின் மீதான ஈர்ப்பால் சிறுதானியங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், நாட்டுக் காய்கறி ரக விதைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாரம்பரிய ரகங்கள் பல்கிப் பெருக வேண்டும் என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விதைப் பரவலாக்கத்துக்கும் உதவி வருகிறார்.

இது குறித்து அன்னவயல் காளிமுத்து கூறியதாவது: முன்பு விவசாயிகள் விதைகளை வீடுகளில் சேமித்து வைத்து பயிர் சாகுபடி செய்து வந்த நிலை தற்போது மாறிவிட்டது. விதைகளை கடைகளில் விலை கொடுத்து விவசாயிகள் வாங்குவதைப் பார்த்து வேதனைப்பட்டேன். இதற்கு தீர்வு காணவேண்டும் என்ற நோக்கத்தில் பாரம்பரிய ரக விதைகளை பாதுகாக்கவும், சேமிக்கவும், தொடங்கினேன்.

அன்னவயல் காளிமுத்து
அன்னவயல் காளிமுத்து

அதற்காக நண்பர்கள் ஜெயச்சந்திரா, ராஜசிம்மன் ஆகியோரோடு இணைந்து மீனாட்சிபுரத்தில் 12 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன். சிறு தானியங்களில் பல வகைகள் உள்ளன. இதில், வரகு, குதிரை வாலி, சாமை, தினை, காடைக் கன்னி, கம்பு, சோளம் உள்ளிட்டவற்றை பயிரிடுகிறோம்.

பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, பெண்ணுக்குச் சீதனமாக கொடுக்கும் பூங்கார், அறுபதாம் குறுவை உள்ளிட்ட பல்வேறு ரகங்கள், கொய்யா, சப்போட்டா, மா உள்ளிட்ட பழ ரகங்கள், தென்னை ரகங்கள் பயிரிட்டுள்ளோம். இயற்கை விவசாயத்தை விரும்பும் விவசாயிகளுக்கு இலவசமாக விதை களை வழங்கி வருகிறோம்.

இயற்கை விவசாயிகளை ஒன்றிணைத்து கூட் டமைப்பை ஏற்படுத்தி விதைப் பரவ லாக்கத்துக்கு வழி வகுத்து வருகிறோம். இது தொடர்பாக விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்கிறோம் நாற்றுப் பண்ணைகளை உருவாக்கி, அரசு புறம் போக்கு நிலங்களில் மரக்கன்றுகளை வளர்க்கவும் ஊக்கப்படுத்தி வருகிறோம்.

விவசாயிகள் விதைகளை விலை கொடுத்து வாங்கக் கூடாது. தாங்களாகவே உற்பத்தி செய்து சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in