

சென்னை: இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் வசித்து வரும் இந்திய மக்கள், நிலவில் சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி மனம் உருக பிரார்த்தனை செய்து வருகின்றனர். மதங்களை கடந்து நிற்கிறது இந்த பிரார்த்தனை.
‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என பாரதியார் தெரிவித்துள்ளார். அது உலக நாடுகள் நிலவு சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்பே அவர் தெரிவித்தது. அவரது அந்த வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் கடந்த மாதம் நிலவுக்கு இந்தியா சார்பில் சந்திரயான்-3 அனுப்பி இருந்தது இஸ்ரோ. இன்று மாலை 6.04 மணிக்கு அதன் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. உலகமே இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனிக்கிறது. நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரலையில் ஸ்ட்ரீம் செய்கிறது இஸ்ரோ.
விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டுமென உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அது இந்தியாவின் ரிஷிகேஷில் தொடங்கி அமெரிக்காவின் நியூ ஜெர்சி வரை நீள்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள உஜ்ஜயினி ஸ்ரீ மஹாகாலேஷ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, உத்தரகாண்டின் ரிஷிகேஷில் கங்கை ஆரத்தி, புவனேஷ்வர், வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களிலும் மக்கள் சந்திரயான்-3 வெற்றிக்காக பிரார்த்தனை மேற்கொண்டனர்.
அதே நேரத்தில் லக்னோவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய மக்கள் சிறப்பு ஹோமம் நடத்தியுள்ளனர். லண்டனில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளனர்.