

கோவை: மற்ற பண்டிகை சமயங்களில் மக்கள் தங்களுக்கு பிடித்த கடவுள்களின் சிலைகள், உருவப் படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபடுவர். ஆனால், விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள், இந்து அமைப்புகளின் சார்பில், சாலையோர பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு, சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். இதனால் விநாயகர் சதுர்த்தி தினம் நெருங்குவதற்கு, சில மாதங்களுக்கு முன்னரே பல்வேறு அளவு, வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணிகள் தீவிரமாகிவிடும். இதையொட்டி கோவையில் சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்கு பாளையம் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தெலுங்குபாளையத்தில் சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சக்திவேல் முருகன் கூறியதாவது: விநாயகர்சிலைகளில் 2 வகைகள் உள்ளன.முதலாவது, 3 இன்ச் முதல் 3 அடிக்குகுறைவான உயரம் கொண்டவை. இவை வீடுகளில் வைத்து வழிபடுவதற்கானதாகும். களிமண்ணால் இவைசெய்யப்பட்டு இருக்கும்.அடுத்தது, 3 அடிமுதல் 10 அடி வரை உயரம் கொண்ட சிலைகள்.
இவை பொது இடங்களில்வைத்து வழிபடுவதற்கானதாகும். இவை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், எளிதில் நீரில் கரையும்வகையில் கிழங்குமாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் உள்ளிட்ட கலவைகளை ஒன்றாக கலந்து, பிரத்யேக டையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. சிலையின் உட்புறத்தில் தாங்கு திறனுக்காக சவுக்கு குச்சிகள் வைக்கப்படும். இவ்வாறு தயாரிக்கப்படும் சிலைகள் 2 அல்லது 3 நாட்கள் நன்றாக வெயிலில் காய வைக்கப்படும்.
பின்னர், வடிவங்கள் தயாரித்து, அதன் மீது சிமென்ட் பேப்பர் எனப்படும் பிரத்யேக பேப்பர் ஒட்டப்படும். தொடர்ந்து அதன் மீது வாட்டர் கலர் பூசப்படும். எளிதில் நீீரில் கரையும் வகையிலும், சுற்றுச்சூழல், நீர் நிலைகளுக்கு மாசு ஏற்படாத வகையிலும் கிழங்குமாவு கலவைகளை கொண்டு தயாரித்து வாட்டர் கலர் வகை வர்ணம் பூசப்படுகிறது. எனாமல் கலப்பதில்லை. நாங்கள் 3 அடி முதல் 9 அடி உயரம் வரை வெவ்வேறு உயர அளவுகளில் அதிகளவிலான சிலைகள் தயாரித்து வருகிறோம்.
10 அடி உயரத்தில் மட்டும் குறைந்த எண்ணிக்கையிலேயே சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. நடப்பாண்டு சனீஸ்வர பகவானுடன் விநாயகர் அமர்ந்திருக்கும் சிலை, விவசாய விநாயகர் அதாவது, விவசாயி நின்று கொண்டிருப்பார். அதற்கு அருகே கையில் கதிர், அரிவாள் வைத்துக் கொண்டு விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற வடிவ சிலைகள், கடல்கன்னி உருவத்தின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலை, 3 சிங்க வாகனங்கள் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலை, முருகன் புல்லட் ஓட்ட விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலை ஆகியவை புதிய வரவுகளாகும்.
அதுதவிர, வழக்கமான வகைகளான ராஜகணபதி, டிராகன் உருவ வாகனத்தில் இருக்கும் விநாயகர்,புல்லாங்குழல் மற்றும் மயில் மீது அமர்ந்திருக்கும் விநாயகர், தாமரை, சிங்கம், மயில், நந்தி, எலி, மான், அன்னம் ஆகியவற்றின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது, கையில் இசைக் கருவிகள் ஏந்தி நிற்பது, சிவன் சிலையை ஏந்தி நிற்பதுபோன்ற பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டு சிலை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால் விநாயகர் சிலைகளின் விலைகளும் உயர்ந்துள்ளன. 3 அடி முதல் 9 அடி வரை உயரம்கொண்ட சிலைகள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம்வரை வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அளவு, வடிவம் ஆகியவற்றுக்கு ஏற்ப சிலைகளின் விலை விவரம் மாறுபடும். கோவை மாநகர் மட்டுமின்றி, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.