

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே சென்னானூா் கிராமத்தில் 2,000 ஆண்டு பழமையான செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சென்னானூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ததில், பல்வேறு விதமான தொல்லியல் எச்சங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: சென்னானூர் மலையடிவாரத்தை ஒட்டி, 10 ஏக்கர் பரப்பளவில் பழங்காலப் பானையோடுகள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பகுதியானது அண்மையில் தமிழக அரசு அகழாய்வு மேற்கொண்ட மயிலாடும்பாறை பகுதியை போன்றது.
இங்கும் மேற்பரப்பில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள் தொடங்கி, உடைந்த புதிய கற்கால கைக்கோடரிகள், இரும்புக் காலத்தை சேர்ந்த கருப்பு சிவப்பு பானையோடுகள், இரும்பு கழிவுகள், பாறை ஓவியங்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட கால எச்சங்களோடு வரலாற்றுக் காலத்தின் தொடக்கமான சங்ககாலத்தைச் சேர்ந்த செங்கற்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
அதன்படி ஒரு கிணற்றின் ஒரு பக்க கால்வாய் முழுவதும் ஏறக்குறைய 2,000 ஆண்டு பழங்கால செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த இடம் சங்ககால மக்களின் வாழ்விடமாக இருக்கக்கூடும் என்பது மிக தெளிவாக தெரிகிறது. மாவட்டத்தில் ஏற்கெனவே ஆம்பள்ளியை அடுத்த குட்டூர், அங்குசகிரி ஆகிய இடங்களில் சங்ககால செங்கற்கள் கிடைத்துள்ளன.
மேலும் சென்னானூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 8, 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்தோடு கூடிய நடுகற்கள் மற்றும் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டும் கிடைத்துள்ளன. எனவே சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் மனிதர்கள் வாழத் தொடங்கி இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்பகுதி, அதற்கான தொல்லியல் சான்றுகளை தொடர்ச்சியாகக் கொண்டுள்ளது வியப்பளிக்கிறது. இதனை மேலும் உறுதிப்படுத்த தமிழக அரசு சென்னானூர் கிராமத்தில் அகழாய்வு பணி மேற்கொண்டு பல அரிய தகவல்களை உலகிற்கு கொடுக்க வேண்டும், என்றார்.