180 செம்மறி ஆடுகளை வளர்த்து வருவாய் ஈட்டும் எம்பிஏ பட்டதாரி @ மதுரை

மதுரை சிக்கந்தர்சாவடி அருகே மிளகரணை பகுதியில் நிலங்களில் மேயும் செம்மறியாடுகள்
மதுரை சிக்கந்தர்சாவடி அருகே மிளகரணை பகுதியில் நிலங்களில் மேயும் செம்மறியாடுகள்
Updated on
2 min read

மதுரை: மதுரையைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி இளை ஞர் தங்க நாராயணன், தனியார் துறை வேலையை விட்டு ஆடுகள் வளர்ப்பில் ஈடு பட்டு, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். மதுரை சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்த விவசாயி சேது ராமு - ராக்காயி ஆகியோரின் மூத்த மகன் தங்க நாராயணன்(26). இவர் எம்பிஏ (மனித வளம் மற்றும் நிதி) படித்துள்ளார். இவருக்கு தம்பி நீதிராஜன், தங்கை திருச்செல்வி ஆகியோர் உள்ளனர். தங்க நாராயணன் எம்பிஏ படித்து முடித்து விட்டு தூத்துக்குடியில் தனியார் நூற்பாலை நிறுவனத்தில் வேலை பார்த்தார்.

மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளத்துக்கு தினமும் 14 மணிநேரம் வேலை பார்க்க வேண்டியிருந்தது. எவ்வளவு உழைத்தாலும் கூடுதல் வருவாய் ஈட்ட முடியவில்லை என்ற ஆதங்கத்துடன் இருந்தவர், சுயதொழில் செய்ய முடிவு செய்தார். அதன்படி மேய்ச்சல் முறையில் 180 செம்மறி ஆடுகளை வளர்த்து வருவாய் ஈட்டி வருகிறார்.

இது குறித்து சே.தங்க நாராயணன் கூறிய தாவது: தனியார் வேலையை ராஜினாமா செய்ததும், தந்தையின் ஆலோசனையின் படி ஆடுகள் வளர்க்க ஆரம்பித்தேன். கடந்த 3 ஆண்டுகளில் பல அனுபவங்களை கற்றுக்கொண்டேன். வெள்ளாடு என்றால் அதற்கு எவ்வளவு தீனி அளித்தாலும் பத்தாது. செம்மறியாடு என்றால் அரைவயிறு உண்டால்கூட அமைதியாக இருக்கும்.

தங்க நாராயணன்
தங்க நாராயணன்

எனவே, செம்மறியாடு வளர்க்க ஆரம்பித்தேன். செம்மறியாட்டில் ராமநாதபுரம் வெள்ளை, மேல்ச்சேரி, பட்டணம் ஆடு, கச்சைகட்டி (கருப்பு) ஆடு, எட்டையபுரம் ஆடு (செவலை) என பல வகை ஆடுகள் உள்ளன. இதில் எந்த சூழலையும் தாங்கும் ராமநாதபுரம் வெள்ளை ரக ஆடுகளை அதிக எண்ணிக்கையிலும், மற்ற ரகங்களில் சில ஆடுகளையும் வளர்த்து வருகிறேன்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பின்பு இளைஞர்களிடையே ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதில் கிடாமுட்டு சண்டைக்குரிய நாட்டின செம்மறியாடுகளை பலர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இயற்கை உரத்துக்காக ஒருநாளைக்கு கிடை போடுவதன் மூலம் நெல் வயல்களுக்கு ரூ.200-ம்,மற்ற பயிர் விளையும் நிலங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.300-ம் ஊதியமாக பெறுகிறோம்.

இது தவிர, கிடை மூலம் கிடைக்கும் இயற்கை உரங்களை சாக்கு மூட்டைகளில் நிரப்பி ஒரு சாக்கு மூட்டை ரூ.100-க்கு விற்பனை செய்வோம். இதனை கேரளத்திலிருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் செல்வர். பெரும்பாலும் மேய்ச்சல் முறையில் வளர்க்கிறோம். ஒருநாளைக்கு 10-லிருந்து 15 கி.மீ. தூரத்துக்கு ஆடுகளை மேய்ப்போம்.

தற்போது சிக்கந்தர் சாவடி அருகிலுள்ள மிளகரணை பகுதியில் உள்ள இடங்களில் மேய்ச்சல் முறையில் ஆடுகளை வளர்த்து வருகிறேன்.செய்யும் தொழிலே தெய்வம். விரும்பிச் செய்வதால் எனக்கு எந்த கஷ்டமும் தெரியவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கிறது. மனதுக்கு பிடித்து செய்வதால் எந்த சுமையும் தெரியவில்லை.

நமது பாரம்பரிய நாட்டின ரக செம்மறியாடுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறோம் என்கிற பெருமிதமும், இயற்கை உரங்களை உற்பத்தி செய்து விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கிறோம் என்ற திருப்தியும் கிடைக்கிறது. பட்டம் படித்துவிட்டு ஆடு மேய்ப்பதா என கூச்சப்படாமல் இன்றைய இளைஞர்கள் துணிச்சலுடன் என்னைப்போன்று சுயதொழில் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in