Published : 18 Aug 2023 01:20 AM
Last Updated : 18 Aug 2023 01:20 AM

பிரண்டை சாகுபடியில் அசத்தும் நாமக்கல் விவசாயி - மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை

நாமக்கல் அருகே அத்தியம்பாளையம் கிராமத்தில் பந்தல் அமைத்து பிரண்டை கொடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.. (2வது படம்) விளைநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தூதுவளை செடி. (படம்: கி.பார்த்திபன்)

நாமக்கல்: வேலிப் பயிராக விளையும் பிரண்டையை நாமக்கல்லைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பிரதான பயிராக சாகுபடி செய்வதுடன் அதனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

போதிய மழையின்மை, மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயத்தைக் கைவிட்டு பலர் மாற்றுத் தொழில் நாடிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனினும், கால சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விவசாயத்தை லாபகரமாகவும் நடத்தவும் செய்கின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் அருகே எர்ணாபுரம் அத்தியம்பாளையத்தை சேர்ந்த விவசாயி எஸ்.ராமசாமி என்பவர் பிரண்டை, தூதுவளை போன்றவற்றை சாகுபடி செய்வதுடன் அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாகவும் மாற்றி விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகிறார்.

இதுகுறித்து விவசாயி ராமசாமி கூறுகையில், "தனியார் வேளாண் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ. 1.50 லட்சம் ஊதியம் பெறும் அலுவலராக பணிபுரிந்து வந்தேன். எனினும், விளை நிலம் இருந்ததால் அப்பணியில் இருந்து விலகி விவசாயம் மேற்கொள்ள முடிவு செய்தேன். என்ன சாகுபடி செய்யலாம் என முடிவு செய்தபோது தான் மக்கள் மத்தியில் அதிகம் கவனம் பெறாத பிரண்டை, தூதுவாளை போன்வற்றை சாகுபடி செய்யலாம் என திட்டமிட்டேன்.

இவை வேலிப் பயிராக விளையும் தன்மை கொண்டது. இதனை சாகுபடி செய்வதுடன் நேரடியாக விற்பனை செய்யாமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்யவும் முடிவு செய்தேன். இதன்படி அரை ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைத்து பிரண்டை சாகுபடி செய்யத் தொடங்கினேன். நடவு செய்து ஓராண்டு முதல் மகசூல் கொடுக்க ஆரம்பித்தது. உருண்டை, தட்டை என இருவகை பிரண்டை சாகுபடி செய்கிறேன்.

இதில் நுனிப்பகுதியை மட்டும் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் கத்தரித்து ஈரோட்டில் உள்ள எங்களது ஆலைக்கு கொண்டு சென்று அரைத்து பிரண்டை தொக்காக தயார் செய்து பாட்டில் அடைத்து விற்பனை செய்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக இப்பணி மேற்கொண்டு வருகிறேன். எலும்புகளுக்கு உறுதிதன்மை கொடுக்கும், நன்கு பசி எடுக்க வைக்கும் போன்ற மருத்துவ குணங்கள் பிரண்டைக்கு உண்டு.

இதனால் பிரண்டை தொக்கிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பிரண்டைக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. அதுபோல் குறைந்த தண்ணீர் இருந்தாலே போதும். இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது. ஒரு முறை நடவு செய்தால் ஏறத்தாழ 5 ஆண்டுகள் வரை மகசூழ் எடுக்கலாம். பந்தல் அமைக்க வேளாண் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது.

இதுபோல் தூதுவளை, புளிச்சக்கீரை போன்றவையும் இங்கு சாகுபடி செய்து தொக்காக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுக்கும் பராமரிப்பு செலவும் குறைவு தான். செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. பஞ்சாவ்யம் போன்ற இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துகிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x