

ஆண்டிபட்டி: மனநலம் பாதித்து சாலையோரம் சுற்றித் திரி வோர் எண்ணிக்கை தேனி மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
கிடைக்கும் உணவை உண்டு, நினைத்த இடத்தில் படுத்து துர்நாற்றத்துடன் உள்ள இவர்களைக் கண்டு பலரும் விலகிச் செல்வதால் சாலையோரத்திலேயே இவர்கள் வாழ்வு முடிந்து விடுகிறது. இதில் வெளி மாவட்டம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகம்.
பராமரிக்க மனமில்லாத உறவுகள் இதுபோன்றவர்களை தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டத்தில் கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். மேலும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்படும் வயதான, கடும் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் பலரையும் உறவினர்கள் கைவிட்டுச் சென்று விடுகின்றனர்.
சில நாட்களுக்கு பிறகு, மருத்துவமனையில் இருந்து வெளியேறும் நபர்கள் சாலையோரங்களில் தஞ்சம் அடைகின்றனர். இந்நிலையில், டி.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக மருந்தாளுநராக பணிபுரிந்து வரும் ந.ரஞ்சித் குமார் ஆதரவற்ற மனிதர்களை மீட்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் சிலரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினார். இதை அறிந்த அரசின் பல் வேறு துறைகளும் இவருக்கு கை கொடுத்து வருவதால், தற்போது இப்பணியில் முழு வீச்சில் களமிறங்கி உள்ளார். இதுவரை 141 பேரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி உள்ளார். இது குறித்து இவர் கூறியதாவது: மனநல பாதிப்புள்ளவர்களை மீட்டு சுத்தம் செய்து, காவல் நிலையங்களில் ஒப்புகைச் சீட்டு பெற்று பெரியகுளம் தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள மனநல சிகிச்சை வார்டில் சேர்த்துவிடுவேன்.
அங்கு அதிகபட்சம் 90 நாட்கள் சிகிச்சை வழங்கப்படும். பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்போம். அல்லது அரசு உதவி பெறும் இல்லங்களில் தங்க வைக்கிறோம். இதில் போதைப்பொருட்களுக்கு அடிமை யானவர்களே அதிகம். தற்காலிகப் பணி என்பதால் பொருளாதார சிரமத்துடன் தான் இப்பணியைச் செய்து வருகிறேன். என்னை பணி நிரந்தரம் செய்தால் இன்னும் உத்வேகத்துடன் இப்ப ணிகளை முன்னெடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மன நலம் பாதித்து வீதியில் அலைவோரை பார்க்க நேரிட்டால் 14567, 14416, 102, 104 போன்ற கட்டணமில்லாத ஏதாவது ஒரு அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கலாம். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் கூறினர்.