

சென்னை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மக்களால் அதிகம் போற்றப்படும் நபராக திகழ்கிறார். யாரிடமும் பரிசு மற்றும் ஆதாயம் பெறுவதை தவிர்ப்பது அவரது வழக்கம்.
இந்தச் சூழலில் தனக்கு கொடுக்கப்பட்ட பரிசுக்கு ஈடான தொகையை பரிசு கொடுத்தவரிடம் அப்துல் கலாம் வழங்கியுள்ளார். அதனை அண்மையில் மீள் பதிவு செய்திருந்தார் ஐஏஎஸ் அதிகாரியான எம்.வி.ராவ். எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள நீண்ட பதிவு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“கடந்த 2014-ல் அப்துல் கலாம் அய்யா கலந்து கொண்ட நிகழ்வை ஸ்பான்சர் செய்த சவுபாக்யா வெட் கிரைண்டர் எனும் நிறுவனம், அவருக்கு பரிசு ஒன்றை வழங்கியுள்ளது. அதை அவர் ஏற்க மறுத்துள்ளார். இருந்தும் ஸ்பான்சரின் வலியுறுத்தல் காரணமாக அதனை அப்போது அவர் பெற்றுக் கொண்டார். அது ஒரு கிரைண்டர்.
அடுத்த நாள் அதன் சந்தை மதிப்பை அறிந்து கொண்டு, அந்த தொகைக்கான காசோலையை அந்நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதை அந்நிறுவனம் வங்கியில் டெபாசிட் செய்யாமல் வைத்திருந்துள்ளது.
அதை தனது வங்கியின் மூலம் அறிந்து கொண்ட அவர், காசோலையை டெபாசிட் செய்யவில்லை என்றால் பரிசை திரும்ப அனுப்பி விடுவேன் என சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து அதை ஜெராக்ஸ் எடுத்து, ஃபிரேம் போட்டு பத்திரமாக வைத்த அந்நிறுவனம், காசோலையை டெபாசிட் செய்துள்ளது. இந்த பதிவுடன் அந்த காசோலையின் படம் உள்ளது. அவர் மாமனிதர். இது எனக்கு குரூப்பில் வந்த மெசேஜ்” என தனது பதிவில் எம்.வி.ராவ் தெரிவித்துள்ளார்.