

மதுரை: அனைவருக்கும் நஞ்சில்லாத உணவு கிடைக்கபாடுபட்டவர் மறைந்த இயற்கை விவசாயி நம்மாழ்வார். அவரது வழியில் எம்பிஏ படித்து ஐடிதுறையில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர் விவசாயத்தை முழு நேர தொழிலாகக் கொண்டுள்ளார். அவர் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் மற்றவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது பதினெட்டாங்குடி. இவ்வூரை சேர்ந்த ரா.காந்தி-ஜெயந்தி தம்பதியின் மகன் கா.கார்த்திகேயன் (27). எம்பிஏ படித்த இவர், ஐ.டி. துறையில் வேலை செய்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.டி. துறையில் இருந்து விலகி ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பு என ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வருவாய் ஈட்டி வழிகாட்டுகிறார்.
இது குறித்து கா.கார்த்திகேயன் கூறிய தாவது: ஐ.டி. துறையில் கைநிறைய சம்பாதித்தாலும் மனநிறைவு இல்லை. அதனால் நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு அனைவருக்கும் நஞ்சில்லா உணவு கிடைக்கச் செய்ய வேண்டும் என எண்ணினேன். இதற்காக ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான எனது தந்தையின் உதவியோடு எங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங் கிணைந்த பண்ணையத்தை தொடங்கினோம்.
பாரம்பரிய நெல் ரகங்களான கறுத்தகார், மாப்பிள்ளைச்சம்பா, சீரகச்சம்பா பயிரிட்டோம். தொடர் வருமானத்துக்கு வாழையில் நாட்டு ரகம், கற்பூரவல்லி, ரஸ்தாலி ஆகிய ரகங்களை நட்டோம். மழை நீரைச் சேகரிக்க பண்ணைக் குட்டை. அதில் மீன் வளர்ப்பு. மேலும், செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்க்கிறோம். அதற்கு தேவையான தீவனங்களையும் பயிரிட்டுள்ளோம். மேலும் கோழிகள், வான் கோழிகளும் வளர்த்து வருகிறோம்.
இயற்கை முறையில் விளைந்த நெல் ரகங்களை குறைந்த விலைக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக இடைத்தரகர் இன்றி விற்கிறோம். எனது பெற்றோரும் உறுதுணையாக உள்ளனர். விவசாயமும் லாபம் தரும் தொழில்தான் என்பதை உணர்ந்து இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.