

கோவை: ‘கருவறையிலும் இருட்டு, கருவறைக்கு வெளியிலும் இருட்டு’ என்பதுதான் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் நிலை. உடல்குறைபாடே யாசகம் பெறுவதற்கான தகுதி என நினைத்து வாழும் சிலருக்கு மத்தியில், உடல்குறையெல்லாம் ஒரு குறையே அல்ல; உள்ளக்குறைதான் பெரும் குறை என எத்தனையோ மாற்றுத்திறனாளிகள் நிரூபித்து வருகின்றனர்.
‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப, வாழ்க்கையில் பல போராட்டங்களை கடந்து மின்சாதனப் பொருட்கள் பழுதுநீக்கும் தொழிலில் சாதித்து வருகிறார் கோவை கவுண்டம்பாளையம் அசோக் நகரை சேர்ந்த இளைஞர் சுரேஷ் குமார் (32). அவர் கூறியதாவது:
எனது அப்பா கனகராஜ், அம்மா மகேஸ்வரி. எனக்கு ஓர் அண்ணன், 2 சகோதரிகள் உள்ளனர். 6 வயது வரை கண் பார்வை சரியாகத்தான் இருந்தது. மற்ற சிறுவர்களைப்போல நானும் இவ்வுலகை ரசித்து ஆடிப்பாடி மகிழ்ச்சியாகத் திரிந்தேன். அதன்பின்னர் என் வாழ்க்கையை புரட்டிப்போடும் வகையில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டது. என்னை குணப்படுத்த பல்வேறு மருத்துவமனைகளுக்கு என் பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால் குணமாகவில்லை.
இதையடுத்து பசுந்தலை சாற்றை அரைத்து குடிக்கக் கொடுத்தால், மூளைக்காய்ச்சல் குணமாகுமென சிலர் தெரிவித்ததால், அந்த முயற்சியிலும் என் பெற்றோர் இறங்கினர். பசுந்தலைச் சாறு பிழிந்து, என் வாயில் சிலர் ஊற்றினர். வாந்தி எடுக்காமல் தடுக்க வாயை பொத்தியபோது ஏற்பட்ட திணறலால், கண்ணுக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டது. அன்றுதான் நான் இந்த உலகை கண்ட கடைசிநாள். அதன்பின்னர் என் பார்வை பறிபோனது.
இச்சம்பவம் நிகழ்ந்த சில மாதங்களில் அப்பாவை இழந்துவிட்டேன். எனது அக்காவின் பராமரிப்பில் இருந்து வந்தேன். தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தேன். படிப்பில் ஓரளவுக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் சில காரணங்களால் படிப்பை தொடர முடியாமல், பாதியிலேயே கைவிட நேர்ந்தது. சரவணம்பட்டியில் உள்ள எனது அக்கா ரேவதியின் வீட்டிலேயே வசித்து வந்தேன். என் பார்வையாக இருந்து அக்கா வழிநடத்திச் சென்றார்.
அப்போது, வீட்டில் பழுதான மின்சாதனப்பொருட்களை நானே சரி செய்வேன். எனது ஆர்வத்தை அறிந்த எனது அக்கா, சரவணம்பட்டியில் உள்ள மின்சாதனப் பொருட்கள் பழுது நீக்கும் கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்கு 4 ஆண்டுகள் ஹெல்ப்பராக பணியாற்றி, மிக்ஸி, வாஷிங்மிஷின், அயர்ன்பாக்ஸ், டவர்ஃபேன், வாட்டர்ஹீட்டர் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களை பழுது நீக்கக் கற்றுக்கொண்டேன்.
மல்டி மீட்டர் சாதனத்துடன் வயரை இணைத்துப் பார்த்தால் எது மோட்டார் லைன், எது டைமர் லைன் என தெரிந்துவிடும். இதுபோலவே மற்ற மின்சாதனப் பொருட்களின் வயர்களை அறிந்து கொள்கிறேன்.
நீலாம்பூரில் தனது குடும்பத்தினருடன் அக்கா குடியேறிவிட்டதால், நானும், எனது அம்மாவும் கவுண்டம்பாளையம் அசோக் நகரில் வாடகை வீட்டில் குடியேறினோம். யாரிடமும் உதவி என்று கேட்டு நிற்பதற்கோ, எந்த வேலையும் செய்யாமல் பிறரிடம் பணம் வாங்குவதற்கோ என் மனம் இடம்தரவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கவுண்டம்பாளையம் டி.வி.எஸ் நகரில் அக்கா வாடகைக்கு கடை பார்த்துக் கொடுத்தார்.
இதையடுத்து மின்சாதனப் பொருட்கள் பழுதுநீக்கும் கடையை நடத்தி வருகிறேன். நான் மாற்றுத்திறனாளி என்பதால், பழுதான மின்சாதனப் பொருட்களை முதலில் பொதுமக்கள் தரத்தயங்கினர். போகப்போக எனது பணியையும், குறித்த காலத்தில் பழுது நீக்கி கொடுக்கும் திறனையும் பார்த்து என்னிடமே மின்சாதனப் பொருட்களை பழுது நீக்கித் தருமாறு வழங்கி வருகின்றனர்.
6 வயது வரை இவ்வுலகை பார்த்துவிட்டு, திடீரென இருளானதால் நான் இடிந்துபோய் இருந்தேன். எனது குடும்பத்தினரின் உதவியுடன், நம்பிக்கையை என் பார்வையாக்கி முன்னேறி வருகிறேன். மின்சாதனப்பொருட்களின் பழுதைநான் நீக்கி வருவதை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்த பலரும் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். கோவையில் பெரியபெரிய மின்சாதனப் பொருட்கள் விற்பனை ஷோரூம்கள், கடைகள் உள்ளன.
இக்கடைகளின் உரிமையாளர்கள் யாரேனும் எனக்கு ‘ஸ்பான்சர்’ அளித்து உதவிகரம் நீட்டினால், இத்தொழிலில் நிச்சயம் என்னால் சாதிக்க முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையாக ரூ.1500 கிடைக்கிறது. பெரியநாயக்கன்பாளையத்தில் அரசு குடியிருப்பில் எனக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 லட்சம்செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சொற்ப வருமானத்தைக் கொண்டு வீட்டு வாடகை, கடை வாடகை, குடும்பச் செலவை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகிறேன். இதனால் ரூ.2 லட்சத்தை கட்ட முடியவில்லை. எனது நிலையை உணர்ந்து, குடியிருப்பை இலவசமாக ஒதுக்கித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.