

இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசைப்படுபவர்கள் என்ன செய்வார்கள்? மனதுக்குப் பிடித்த காரில் கன்னியாகுமரி முதல் இமயமலைவரை பயணிப்பார்கள். சாதிக்க நினைப்பவர்கள் சைக்கிள் அல்லது பைக்கில் டூர் அடிப்பார்கள். ஆனால், ஆந்திராவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் விமல் கீதானந்தன் சற்றே வித்தியாசமானவர். அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த இவர், இந்தியாவின் 11 மாநிலங்களுக்கு பயணம் செய்து ஊர் திரும்பியிக்கிறார். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இவர் ஒரு ரூபாய்கூட செலவு செய்யாமல் 11 மாநிலங்களுக்கும் பயணம் சென்று திரும்பியிருப்பதுதான் ஆச்சரியம்!
மனிதநேயம் என்ற ஒரே ஒரு சொல், விமல் நெஞ்சில் நம்பிக்கையை ஏற்படுத்தியதன் விளைவு, 11 மாநிலங்களுக்கும் காசில்லாமல் அவரை பயணிக்க வைத்திருக்கிறது. தற்காலிக டென்ட், இலகு ரக படுக்கை, 3 செட் துணி, ஒரு லேப் டாப், பவர் பேங்க் ஆகியவைதான் விமல் தன்னுடன் கொண்டு சென்ற பொருட்கள். அனந்தபூரில் இருந்து ஜூலை முதல் தேதி பயணத்தைத் தொடங்கிய விமல், சரக்கு லாரி ஓட்டுநரின் உதவியால் பெங்களூரு சென்றார். இந்தியாவை முழுமையாகச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற விமலின் ஆசைக்கு நம்பிக்கை அளித்தது அந்த லாரிப் பயணம்தான். அஸ்கர் என்ற அந்த இஸ்லாமிய லாரி ஓட்டுநர், ரமலான் நோன்பு மேற்கொண்டிருந்தபோதிலும், விமல் சாப்பிடாததை அறிந்து, அவருக்கு தேவையான உணவை வாங்கிக் கொடுத்து உபசரித்திருக்கிறார். இந்த மனித நேயம்தான் விமல் மனதில் நம்பிக்கை விதையைப் போட்டது.
பெங்களூரு சென்ற விமல், கர்நாடகம், தமிழகம், கேரளாவுக்குப் பயணம் செய்தார். பின்னர் மகாராஷ்டிரத்திலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்ற விமல், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்தில் சுற்றி விட்டு, மேற்கு வங்கம் வந்திருக்கிறார். பல இடங்களுக்கு சென்ற விமல், கேரளாவில் நடைபெற்ற சம்பவத்தைத்தான் முத்தாய்ப்பாகச் சொல்கிறார்.
“கேரளாவின் மூணாறு அருகே உள்ள ஒரு குக்கிராமத்துக்கு சென்ற போது, மிகுந்த ஏழ்மை நிலையில் இருந்த ஒரு குடும்பத்தினர் எனக்கு அடைக்கலம் கொடுத்தனர். மிகச் சிறிய அந்த வீட்டில் ஒரே ஒரு கட்டில் மட்டுமே இருந்தது. அதை எனக்கு கொடுத்துவிட்டு, அவர்கள் தரையில் படுத்துக்கொண்டனர். இந்தச் சம்பவம் என்னை உலுக்கிவிட்டது. இதுபோன்ற ஒவ்வொரு சம்பவமும், மனிதநேயம் மரணித்து விடவில்லை என்ற நம்பிக்கையை எனக்கு உணர்த்தியது” என்கிறார் விமல்.
பயணத்தின் பெரும்பாலான நேரம் சமூக வலைதள உதவியுடன், இருக்கும் இடத்திலிருந்து விமல் உதவி கேட்டிருக்கிறார். அவருக்குத் தேவையானபோது அறிமுகம் இல்லாதவர்களும் சமூக வலைதளத்தின் மூலம் தகவல் அறிந்து, தேடி வந்து உதவியுள்ளார்கள். கார், பைக், பஸ், படகு என பல்வேறு வாகனங்களில் பயணித்த விமல், ரயிலிலும் சென்றிருக்கிறார். ஆனால், சக பயணிகள் உதவியாலேயே அவர் டிக்கெட் எடுத்துப் பயணித்திருக்கிறார்.
இந்தப் பயணத்தில் மனதைப் பாதித்த சம்பவம் எதுவும் நடக்கவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, “கொல்கத்தாவில் பாலியல் தொழில் நடைபெறும் சோனாகஞ்ச் பகுதிக்கு சென்றபோது அங்கு பாலியல் தொழிலாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை அறிந்து மனம் வருந்தினேன். சோனாகஞ்ச் பகுதிதான் என்னை மனதளவில் பாதித்தது. அங்குள்ள பெண்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் சமூக வலைதளம் ஒன்றைத் தொடங்கப்போகிறேன்” என்று தீர்மானமாகச் சொல்கிறார் விமல்.
இந்தியா முழுவதையும் ஒரு ரூபாய் செலவில்லாமல் சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்ற இலக்குடன் இருந்த விமலுக்கு அவரது அம்மாவிடமிருந்து வந்த மொபைல் அழைப்பு, கொலகத்தாவுடன் லட்சியப் பயணத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. பெங்களூருவுக்கு வீட்டை மாற்ற வேண்டும் என்ற குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்ற மீண்டும் அனந்தபூருக்குத் திரும்பினார் விமல். பெங்களூருவுக்கு வீட்டை மாற்றிய விமல், தற்போது தனது லட்சியப் பயணத்தில் தனக்கு உதவியவர்களை வீட்டுக்கு அழைத்து உபசரிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். லாரி ஓட்டுநர் அஸ்கர் தொடங்கி வழியில் சந்தித்த நல் உள்ளம் படைத்த அனைத்து மனிதர்களை வீட்டுக்கு அழைக்க உள்ளார்.
வித்தியாசமான இளைஞன்; புதுமையானப் பயணம்!