

மதுரை: இயற்கை முறை விவசாயத்தில் எண்ணெய் வித்து பயிர் சாகுபடியில் ஈடுபடுவதுடன், அதை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றும் வகையில் மரச்செக்கில் எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த பொறியாளர்.
மதுரை கப்பலூரைச் சேர்ந்த விவசாயி குருசாமியின் மகன் பாண்டித்துரை (53). பி.இ. எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு அசாம் மாநிலத்தில் தனியார் இரும்பு கம்பிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் உற்பத்திப் பிரிவில் மேலாளராக 23 ஆண்டுகள் பணியாற்றினார்.
இயற்கை விவசாயம் மேற்கொள்வதில் ஏற்பட்ட ஆர்வத்தால் வேலையை ராஜினாமா செய்து விட்டு 2015-ம் ஆண்டில் சொந்த ஊருக்கு திரும்பிய பாண்டித்துரை, 8 ஏக்கரில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்ய தொடங்கினார். அதைத்தொடர்ந்து மரச்செக்கில் எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். தற்போது எள், கடலை, தேங்காய், சூரியகாந்தி மற்றும் ஆமணக்கிலிருந்து எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறார்.
இது குறித்து பாண்டித்துரை கூறியதாவது: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இயற்கை விவசாயத் தில் ஈடுபட முடிவு செய்தேன். நம்மால் இயன்றஉதவிகளை சமுதாயத்துக்குச் செய்ய வேண்டும்என்ற அக்கறையில் 2 ஆண்டுகள் கள ஆய்வு செய்தேன். மக்கள் பயன்படுத்தும் எண்ணெய்யில் கலப்படம் அதிகரித்துள்ளதும், அதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதும் தெரிய வந்தது.
கலப்படமில்லாத சுத்தமான மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கலாம் என முடிவெடுத்து பேரையூர் கணவாய்ப்பட்டியிலுள்ள 8 ஏக்கரில் இயற்கை விவசாயத்தில் எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். 2017-ம் ஆண்டிலிருந்து திருநகர் முல்லை நகரில் மரச்செக்கு மூலம் தரமான எண்ணெய் உற்பத்தி செய்து வழங்கி வருகிறேன். எங்களை தேடி நேரடியாகவே வந்து எண்ணெய் வாங்கிச் செல்கின்றனர்.
தற்போது 3 ஆயிரம் குடும்பத்தினர் எங்களின் எண்ணெய்யை பயன்படுத்தி வருகின்றனர். சொந்த நிலத்தில் எள், நிலக் கடலை, ஆமணக்கு, சூரிய காந்தி, தென்னை பயிரிட்டுள்ளதோடு, திருமங்கலம், கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயிகளிடமிருந்து எண்ணெய் வித்துக்களை பெறுகிறேன்.
மரச்செக்கில் எண்ணெய் உற்பத்தி செய்யும்போது எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்கும். 1 லிட்டர் நல்லெண்ணெய் ரூ.400, கடலை எண்ணெய் ரூ.300, தேங்காய் எண்ணெய் ரூ.300, சூரிய காந்தி எண்ணெய் ரூ.300, ஆமணக்கு எண்ணெய் ரூ.400-க்கு விற்பனை செய்கிறேன்.
தற்போது நாளொன்றுக்கு 150 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறேன். எனக்கு உதவியாக மனைவி ஜெயலட்சுமியும், எம்.எஸ்சி. புட் சயின்ஸ் படித்த எனது மகள் பொன் அனிதாவும் உள்ளனர். தேடிவரும் மக்களுக்கு தரமான எண்ணெய் வகைகளை உற்பத்தி செய்து கொடுக்கிறோம் என்பதே மனநிறைவை தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.