Last Updated : 05 Aug, 2023 03:29 PM

 

Published : 05 Aug 2023 03:29 PM
Last Updated : 05 Aug 2023 03:29 PM

ஞாபகம் வருதே... - பால்ய கால நினைவுகளை மீட்டெடுக்கும் 90’ஸ் கிட்ஸ் மிட்டாய் கடைகள்!

கோவை: சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள், கட்சியினர், நடிகர்கள், நடிகைகளின் சண்டைகள், அவர்களின் விமர்சனங்களைவிட பெரிய அளவில் பரவி வருவது 90'ஸ், 2 கே கிட்ஸின் சுவாரஸ்யமான சண்டைகள்தான். சமீப காலமாக நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற இணைய தள சண்டையில் 80'ஸ்கிட்ஸும் இணைந்து கொண்டதால் நாள்தோறும் இவர்களது கருத்து மோதலில் தினம்தினம் சுவாரஸ்யம்கூடிக்கொண்டே வருகிறது. இதில் 90’ஸ் கிட்ஸின்நினைவுகளாக இணையத்தை கலக்கி வரும் சில மீம்ஸ்கள், 2 கே கிட்ஸையும் ஏங்க வைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை!

90’ஸ் கிட்ஸின் சில மீம்ஸ்கள்

* கைகளை தலைக்குமேல் உயர்த்தி, வளைத்து மறுபுறக் காதை தொடுவதே, 90’ஸ் கிட்ஸ் பள்ளியில் சேருவதற்கான அதிகபட்ச நுழைவுத்தேர்வு.

* மஞ்சள் பையில் புத்தகங்களை தூக்கிச்சுமந்த காலங்கள் பசுமைக்காலங்களே..!

* வாயில் ‘புர்ர்ர்.. டுர்ர்’னு பைக் ஓட்டி, தெருவோரமாய் நின்றிருந்த அம்பாஸிடர் காரை தடவிப்பார்த்து வருங்காலத்தில் நானும் இதுபோல் கார் வாங்கு வேன் என சபதம் செய்தவர்களில் பலர் 90’ஸ் கிட்ஸ்.

* பெற்றோரிடம் சண்டையிட்டு, ஒரு ரூபாய் வாங்கி வாடகை சைக்கிளில் கதாநாயகனாய் ஊர் சுற்றியவன் 90’ஸ் கிட்ஸ். தாமதமானாலும் திட்டாத வாடகை சைக்கிளின் உரிமையாளர்கள் 90’ஸ் கிட்ஸ்களின் கதாநாயகர்கள்.

* தொலைதொடர்பு சாதனங்கள் இல்லை என்றாலும், விடுமுறைக்காலங்களில் காலை 6 மணிக்கு மைதானங்களில் இருந்தவர்கள் 90’ஸ் கிட்ஸ்.

* விளையாடிக் களைத்துவிட்டு திரும்பும் 90’ஸ் கிட்ஸ்களுக்கு தெரு முச்சந்தியில் காத்திருக்கும் ‘அடிபம்பு’ சப்பைத் தண்ணீர்தான் உற்சாக பானமே!

* மவுசு பிடித்து விளையாடும் 2 கே கிட்ஸ்க்கு தெரியாது, மண் புழுதியில் விளையாடிய 90ஸ் கிட்ஸின் மவுசு.

* லேப்டாப்பில் பொழுதைக்கழிக்கும் 2கே கிட்ஸுக்கு தெரியாது, லாலிபாப்புக்காக அம்மாவிடம் அழுதுபுரண்ட காலங்கள்.

* பலமொழிகள் அறிந்த 2கே கிட்ஸுக்கு தெரியாது, எங்கள் வீட்டு முதியோர் சொல்லும் பழமொழியின் மகிமை.

* ஹோம் தியேட்டரில் வீட்டில் படம் பார்க்கும் 2கே கிட்ஸைவிட, பஞ்சாயத்து டிவியில் எதிரொலி, ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை பார்த்து ரசித்த 90’ஸ் கிட்ஸ் மேலானவர்கள்.

இப்படி பிறந்தது முதல் திருமணம் வரை 90’ஸ் கிட்ஸின் சுவாரஸ்யமான நினைவலைகளின் பட்டியல் இதயத்தை வருடிக்கொண்டேதான் இருக்கும்...!

தற்போது 90’ஸ் கிட்ஸின் நினைவுகளை 2 கே கிட்ஸும் அறிந்துகொள்ளும் வகையில், கோவையில் பல இடங்களில் 90’ஸ் கிட்ஸ் மிட்டாய் மற்றும் விளையாட்டு உபகரணக் கடைகள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து கோவை காந்திபார்க்கில் கடை வைத்திருக்கும் மணிகண்டன் என்பவர் கூறியதாவது: நான் கடந்த 6 ஆண்டுகளாக 90’ஸ் கிட்ஸ் மிட்டாய் விற்பனைக் கடை நடத்தி வருகிறேன். தமிழகம் முழுவதுமே 90’ஸ் கிட்ஸை குறிவைத்து பல கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. உடலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டதுடன், அதிக சுவையுடன் இருப்பதால் கோவையில் இக்கடையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாடி வருகின்றனர்.

பழங்கால உணவுப் பண்டங்கள் அழிந்துவரும் நிலையில், நாங்கள் இதுபோன்ற உணவுப் பண்டங்கள் தயாரிக்கும் இடங்களை தேடிப்பிடித்து அவர்களிடம் 90’ஸ் கிட்ஸ் உணவுப் பண்டங்களை வாங்கி வருகிறோம். இதன்மூலம் அவர்களது சிறுதொழிலும் காக்கப் படுகிறது.

எங்களிடம் மம்மி டாடி, சாக்கோ சிப், கிராஸி பாப், மில்க் பவுடர், புளிப்பு மிட்டாய், இலந்தைப் பொடி, இலந்தை வடை, கலர் ஜாம், பேப்பர் அப்பளம், எடைக்கல் மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், தேன் மிட்டாய், கயிறு மிட்டாய், பல்லி மிட்டாய், சீரக மிட்டாய், கமர்கட், ஆரஞ்சு மிட்டாய், ஐஸ் கோன் மிட்டாய், குச்சி மிட்டாய், குருவி ரொட்டி, எழுத்து ரொட்டி, பஞ்சு மிட்டாய் என 75 வகையான மிட்டாய்கள், ரொட்டி வகைகள் உள்ளன.

பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில், அந்தந்த பள்ளி, கல்லூரிகளில் ஸ்டால்கள் அமைக்க எங்களை நாடி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிகளின்போது ஸ்டால்கள் அமைத்து, அவரவர்உறவினர்களை பழைய நினைவுகளுடன் நாங்கள் வரவேற்கிறோம். காலத்தால் அழியாதது நினைவுகள் மட்டுமே, அந்த வகையில் மிட்டாய், பிஸ்கெட்களின் வடிவில் 90’ஸ் கிட்ஸின் நினைவுகளை மீட்டெடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x