

காரைக்குடி: காரைக்குடி அருகே கோயில் விழாவில் அரை படி உப்பு ரூ.3 லட்சத்துக்கு ஏலம்போனது. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியில் சாஸ்தார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள நாச்சியாரம்மன் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாத பெண்ணடி படைப்பு விழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டு இக்கோயில் ஆடி மாத பெண்ணடி படைப்பு விழா ஜூலை 24-ம் தேதி தொடங்கியது.
இதையொட்டி, சிவகங்கை மாவட்டம் வடகுடிப்பட்டி, நேமத்தான்பட்டி, கோனாபட்டு, புதுக்கோட்டை மாவட்டம் சாஸ்தார் கோவில், செங்கீரை, கோட்டையூர் ஆகிய 6 கிராமங்களைச் சேர்ந்த குலாலர் மக்கள் கோயிலில் ஒன்றுகூடினர். இரவு பெண்கள் கும்மி கொட்டினர். இந்த 6 கிராமங்களில் பிறந்து வெளியூர்களில் திருமணமாகி சென்ற பெண்களை வரவழைத்து, கோயிலில் விருந்து அளிக்கப்பட்டது.
அவர்களுக்கு நேற்று முன்தினம் பிறந்த வீடுகளிலிருந்து சேலை, பாத்திரம், நகைகள் உள்ளிட்டவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து, அம்மனுக்கு படைக்கப்பட்ட உப்பு, மாலை, எலுமிச்சை, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 61 வகையான பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
அப்போது, அரை படி உப்பு ரூ.3 லட்சத்துக்கும், எலுமிச்சை ரூ.2.6 லட்சத்துக்கும், அம்மனுக்கு அணுவிக்கப்பட்ட மாலை ரூ.2.30 லட்சத்துக்கும் ஏலம் போயின. இது குறித்து குலாலர் மக்கள் கூறுகையில், ‘‘நூறு ஆண்டுகளுக்கு மேலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரம்பரியமாக இந்த விழாவை கொண்டாடி வருகிறோம். இதில் 6 கிராமங்களைச் சேர்ந்த எங்கள் மக்கள் தவறாமல் கலந்துகொள்வர். அம்மனுக்கு படைக்கப்பட்ட பொருட்களை ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் கைகூடும். ஏலம் எடுக்க போட்டி இருப்பதால், ஒவ்வொரு பொருளும் பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகிறது’’ என்று கூறினர்.