

திருப்பூர்: ‘கரணம் தப்பினால் மரணம்’ என்ற பழமொழி, ‘மரணக்கிணறு’ சாகச நிகழ்ச்சிக்கு நூறு சதவீதம் பொருந்தும். மரணக் கிணறு என்ற சாகச விளையாட்டு இன்றைய காலத்தில் பெருமளவில் குறைந்துவிட்டது என்றே கூறலாம். திருவிழா காலங்கள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறும் சமயங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற சாகச நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. இதில் பங்கேற்போர் உயிரை பணயம் வைத்து, பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றனர்.
இந்த சாகச விளையாட்டுக்காக சுமார் 20 அடி முதல் 40 அடி உயரம் கொண்ட கிணறு மரச்சட்டங்களால் உருவாக்கப்படுகிறது. இதன் விட்டம் 30 அடி வரை இருக்கும். இதில் கார், பைக் என பல வாகனங்களை ஒரே சமயத்தில் ஓட்டி வீரர்கள் அசத்துவர். இதை காணும் ஒவ்வொருவருக்கும் அந்த வீரர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது கடவுளே என்ற எண்ணம் வரும் அளவுக்கு வாகனங்களின் வேகமும், காதைக்கிழிக்கும் சத்தமும் இருக்கும்.
ஐந்து முதல் ஆறு சாகச கலைஞர்கள் பங்கேற்று, தன்னால் இயன்றவரை வாகனங்களை வேகமாக இயக்கி காண்போரை திகிலூட்டுகின்றனர். சில தினங்களுக்கு முன் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் அம்மன் கோயில் திருவிழாவையொட்டி சந்தை பகுதியில் நடைபெற்ற மரணக்கிணறு நிகழ்ச்சியை பார்த்து ரசித்த பார்வையாளர்கள் சிலர் கூறும்போது, “மரணக்கிணறு விளையாட்டின் பெயருக்கு ஏற்ப பார்வையாளர்களிடம் மரண பீதியை ஏற்படுத்திவிட்டனர், சாகச கலைஞர்கள். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை திட்டமிட்ட வேகத்தில் குறுக்கும், நெடுக்குமாக மரணக்கிணற்றில் ஓட்டும் சாகச வீரர்கள், சில நிமிடங்கள் வரை மனதை ‘திக்... திக்...’ அடைய செய்கின்றனர்.
சில நேரங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் விபத்துகளும் ஏற்படத்தான் செய்கின்றன. அப்படி விபத்து நேர்கையில் ஒருவர் செய்யும் சிறு தவறால் பலருக்கும் பேராபத்து ஏற்படுகிறது. அதனாலேயே இது போன்ற போட்டிகள் இப்போது பெருமளவு குறைந்து வருகின்றன” என்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீஸார் கூறியதாவது: மரணக்கிணறு சாகச விளையாட்டு என்பது இன்று, நேற்று தொடங்கிய நிகழ்ச்சி அல்ல. காலம்காலமாக நடைபெற்று வருகிறது. சர்க்கஸில் கூண்டுக்குள் நடைபெறும். அதேநிகழ்ச்சி வெட்டவெளியில் மரணக்கிணறு என்ற பெயரில் நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சி நடத்த உரிய அனுமதியை காவல் துறையிடம் பெற வேண்டும். நிகழ்ச்சி நடத்தப்படும் இடத்தை ஆய்வு செய்தபின், பார்வையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பானதாக இருந்தால், நடத்த அனுமதி வழங்கப் படும். பார்வையாளர்களுக்கும், மரணக் கிணறுக்கும் இடைவெளி இருக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு அம்சங்களை கவனித்த பிறகே மரணக்கிணறு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது, என்றனர்.