Last Updated : 24 Jul, 2023 05:02 PM

10  

Published : 24 Jul 2023 05:02 PM
Last Updated : 24 Jul 2023 05:02 PM

“உருவாகிறது கூரிய சிந்தனை இல்லா தலைமுறை” - யூடியூபை களமாக்கிய தத்துவவியல் பேராசிரியர் இரா.முரளி நேர்காணல்

பேராசிரியர் இரா.முரளியை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நிச்சயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நபர் அவர். அறிவுசார் கருத்துகளை சமூகத்திடம் கொண்டு செல்வது இன்றைய காலகட்டத்தில் மிகுந்த சவாலுக்குரியது. பொழுதுபோக்கு கண்ணோட்டத்திலேயே அனைத்தையும் அணுகும் இன்றைய தலைமுறைக்கு மானுட வாழ்வின் அர்த்தத்தை முன்வைக்கும் தத்துவங்களை தன்னுடைய யூடியூப் சேனல் வழியாக விளக்கிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் முரளி.

முரளி அடிப்படையில் ஒரு தத்துவப் பேராசிரியர். மதுரைக் கல்லூரியில் தத்துவவியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தன்னுடைய ஓய்வுக்குப் பிறகு, ‘Socrates Studio’ என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி, உலகளாவிய தத்துவங்களை, தத்துவவியலாளர்களை மிக விரிவாக அறிமுகப்படுத்தி வருகிறார். சாக்ரடீஸ், பிளாட்டோ, நீட்ஷே, புத்தர், நாகார்ஜுனர், ராமலிங்க அடிகள், அம்பேத்கர், அயோத்திதாசர், ப்ரான்ஸ் ஃப்னான், திக் நியட் ஹான், ஆதிசங்கர், ரமண மகரிஷி, ஓஷோ, முகமது நபி, ஹஸ்ரத் க்வாஜா மொய்னுதீன் என வெவ்வேறு கலாசாரங்களிலிருந்து உருவாகிவந்த தத்துவவியலாளர்களைப் பற்றிய களஞ்சியமாக அவரது யூடியூப் சேனல் உள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் சிக்கலான தத்துவங்களை, மிக எளிய முறையில், அதேசமயம் ஆழம் குறையாமல் விளக்குகிறார். தத்துவம் குறித்து எந்த அறிமுகம் இல்லாத நபர் கூட, அவரது வீடியோக்களை மிகுந்த சுவாரஸ்யத்துடன் பார்க்க முடியும். அவருடன் உரையாடினேன். அதிலிருந்து...

தத்துவவியல் சார்ந்து யூடியூப் சேனல் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எதனால் உங்களுக்கு வந்தது?

“என்னுடைய 35 ஆண்டு கால ஆசிரியப் பணியில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கற்பித்திருக்கிறேன். நிறைய இலக்கியக் கூட்டங்கள், வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தத்துவவியல் குறித்து உரையாடி இருக்கிறேன். ஆனால், என்னுள் ஒரு கேள்வி எப்போதும் ஓடிக்கொண்டிருந்தது: நான் கற்றவை வகுப்பறைக்கு மட்டும்தானா?

ஒரு பேராசிரியர் என்பவர் வகுப்பறைக்குள் மட்டும் சுருங்கிவிடக் கூடாது. அவர் தான் கற்றவற்றை மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தீவிரமாக எழுந்தது. வகுப்பறை தாண்டி சமூகத்துடனும் உரையாட வேண்டும் என்ற முடிவெடுத்தேன். நான் தத்துவவியல் சார்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய கட்டுரைகள் எழுதி இருந்தாலும், அது குறுகிய வட்டத்துக்குள் புழங்கக் கூடியதாக இருந்தது. காட்சி ஊடகங்கள் வழியாகவே பரவலான மக்களை சென்றடைய முடியும் என்பதே தற்போதைய யதார்த்தமாக உள்ளது. இதனால்தான், யூடியூப் சேனல் தொடங்க முடிவு செய்தேன்.

உலக அளவில் உள்ள தத்துவங்களை, அதன் போக்குகளை தமிழ் மக்களுக்கு எளிமையான முறையில் புரியவைக்கும் வகையில் வீடியோக்களை உருவாக்க ஆரம்பித்தேன். வீடியோ தொழில்நுட்பம் சார்ந்து என் முன்னாள் மாணவர்கள் உதவியாக இருக்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், யூடியூப் வழியாக தமிழ் மக்களிடம் தத்துவம் சார்ந்து பேசுவதில் நிறைவாக உணர்கிறேன். உலக அளவில் உள்ள தத்துவங்களை புரிந்துகொள்ள என்னுடைய காணொலிகள் உதவ வேண்டும் என்ற இலக்கில் செயல்பட்டுவருகிறேன்.”

தத்துவம் என்றால் என்ன, ஒரு சமூகத்துக்கு தத்துவம் ஏன் தேவைப்படுகிறது?

“முதலில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தத்துவம் என்பது ஒருமையல்ல. அது பன்மை. என்னை பொறுத்தவரையில் கூர்மையான அறிவுடன் உண்மையை உள்ளபடி அறிதல்தான் தத்துவம். தத்துவம் வழியாகவே மனிதன் தனது வாழ்வுக்கான அர்த்தத்தை உருவாக்கி கொள்கிறான். ஒருவன் உலகின் தன் இருப்புக்கான அர்த்ததை உணரும்போது அவன் தீமை செய்வதற்கான வாய்ப்பு குறைகிறது. நன்மையின் பக்கம்தான் நாம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை தத்துவம் விதைக்கிறது. அரசியலாக இருந்தாலும், அறிவியலாக இருந்தாலும் எல்லாமே தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்குகின்றன. ஒட்டுமொத்தத்தில் தத்துவம் இல்லாமல் சமூகம் இயங்க முடியாது. ஆனால், சமூகம் தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது என்பது நமக்கு தெரிவதில்லை.”

இதுவரையில் உருவான தலைசிறந்த தத்துவவியலாளர்கள் பட்டியலைப் பார்த்தால், பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். கீழை நாடுகளில் உருவான தத்துவவியலாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. என்ன காரணம்? தத்துவவியலாளர் என்றால் யார்? அதற்கான வரையறை என்ன?

“நாம் பார்க்கும் அன்றாட உலகில் ஒவ்வொரு தனி மனிதரும் வாழ்க்கை சார்ந்து தங்களுக்கென்று ஒரு தத்துவார்த்தப் பார்வையை கொண்டிருக்க முடியும். ஆனால், அவர்களை நாம் தத்துவவியலாளர் என்று சொல்வதில்லை. மனித வாழ்க்கை, சமூக இயக்கம் சார்ந்து கோட்பாடுகளை உருவாக்குபவர்களை, வழிமுறைகளை முன்வைப்பவர்களை நாம் தத்துவவியலாளர்கள் என்று சொல்லமுடியும்.

மேற்கத்திய கல்விப்புல வரையறையின்படி, தன்னுடைய தத்துவக் கோட்பாட்டை தர்க்க ரீதியாக முன்வைக்கிறவரே தத்துவவியலாளர் என்று அழைக்கப்படுகிறார். ஆனால், இந்தியா, சீனா போன்ற கீழை நாடுகளில் அப்படி இல்லை. இந்தியாவில் தத்துவமும் ஆன்மிகமும் ஒன்றோடு ஒன்று கலந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் தத்துவம் என்பது பிரதி சார்ந்ததாக இல்லாமல் அன்றாட வாழ்க்கை சார்ந்ததாக இருந்தது. காந்தியும், தாகூரும், ரமண மகரிஷியும், ஒஷோவும் தத்துவவியலாளர்கள்தான். ராஜராம் மோகன்ராயின் சதி ஒழிப்பு என்பது தத்துவத்தின் செயல்வடிவம்தான். அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் தத்துவவியாளர்கள்தான். உலக அளவில் பார்த்தால், கம்யூனிசம், பெண்ணியம் எல்லாம் தத்துவங்கள்தான். சூபியிசம் ஒரு தத்துவம்தான்.

மேற்கத்திய நாடுகளில் கல்வி அமைப்புக்குள் தத்துவம் கொண்டுவரப்பட்டது. அதனால், அங்கு தத்துவியலாளர்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்படுகிறது. அவர்களது தத்துவம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதனால், அங்குள்ள தத்துவவியலாளர்களே பரவலாக அறியப்படுகின்றனர். மேற்கத்திய தத்துவவியலாளர்கள் அளவுக்கு ஏனைய நாடுகளின் தத்துவவியலாளர்கள் பேசப்படாதற்கு அரசியல் காரணமும் உண்டு. நம்முடைய உலகம் வெள்ளையின ஆதிக்கத்தின் அடிப்படையிலே இன்னமும் இயங்குகிறது. அதனால், ஐரோப்பிய, அமெரிக்க அல்லாதவர்கள் பற்றி பேசப்படுவது குறைவாக உள்ளது. தவிர, வெள்ளையின ஆதிக்கத்தால் ஏனையவர்களும் வெள்ளையினத்தவர்கள் மூலமாகவே அங்கீகாரம் பெற வேண்டியதாக உள்ளது. அதாவது, ஏனைய நாட்டு தத்துவவியலாளர்கள் தங்கள் தத்துவக் கோட்பாட்டுக்கு அங்கீகாரம் வேண்டி, வெள்ளையர் நாடுகளுக்குதான் வரவேண்டியுள்ளது.”

தத்துவ உலகமும் ஆண்மையப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. ஆண் தத்துவவியாளர்கள் முன்வைக்கப்படும் அளவுக்கு பெண் தத்துவியாளர்கள் ஏன் முன்வைக்கப்படுவதில்லை. தத்துவத் துறையில் பெண்கள் உருவாகவில்லையா அல்லது அவர்கள் கண்டுகொள்ளப்படவில்லையா?

“தத்துவத் துறையில் பெண்கள் உருவாகவில்லை என்று சொல்வதைவிடவும் உருவாக வாய்ப்பளிக்கப்படவில்லை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். 20-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரையில் கிழக்கு, மேற்கு என்று எந்த வேறுபாடும் இல்லாமல் பெண்கள் சமூக ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர். அவர்களுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. பொதுத் தளத்தில் கருத்துச் சொல்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆண்களே பொதுவெளியில் உரையாடக்கூடியவர்களாக இருந்தனர்.

20-ம் நூற்றாண்டில் சூழல் மெல்ல மாறத் தொடங்கியது. பெண்ணியக் கோட்பாடுகள் சர்வதேச அளவில் பேசப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே பல்வேறு துறைகளில் பெண்கள் ஆளுமைகளாக உருவாக ஆரம்பித்தனர். இடதுசாரி சிந்தனைகளைப் பின்பற்றி பெண் தத்துவவியலாளர்கள் பலர் உருவாகினர். கடந்த நூற்றாண்டில் உருவாகிவந்த பெண் தத்துவவியலாளர்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிமோன் தி பொவேரா முக்கியமானவர். மார்த்தா நாஸ்பம், ராயா துனேவ்ஸ்கயா, ஜுடித் பட்லர், காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக் ஆகியவர்கள் பரவலாக அறியப்படும் பெண் தத்துவவியலாளர்கள் ஆவர். இந்தியாவில் காஞ்சனா மகாதேவனை குறிப்பிட்டுச் சொல்லலாம்.”

ஒரு தத்துவவியல் பேராசிரியராக தற்போதைய காலகட்டத்தின் போக்கை எப்படி பாக்கிறீர்கள்?

“மிகுந்த கவலையாக இருக்கிறது. முதலாளித்துவத்தின் உச்சக்கட்ட காலத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். நுகர்வுக் கலாச்சாரம் முன்னெப்போதும் இல்லாத அளவு தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இது நமது இளைய தலைமுறையினரை கபளிகரம் செய்கிறது. தனிமனித பொறுப்புகளை காலி செய்கிறது. உறவுகளை சிதைக்கிறது. அறிவு மழுங்கடிக்கப்படுகிறது. இதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அவை, தங்கள் வியாபாரத்துக்காக அறிவை மழுங்கடிக்கச் செய்யும் விஷயங்களை வழங்குகின்றன. மது மட்டும் போதை அல்ல, அறிவை மழுங்கடிக்கச் செய்யும் அனைத்தும் போதைதான். இதன் நீட்சியாக கூர்மையான சிந்தனையும், விமர்சனமும் இல்லாத ஒரு தலைமுறை உருவாகி வருகிறது.

நாம் தொழிலைக் கற்க கூடிய அறிவைதான் இந்த தலைமுறைகளுக்கு தந்து கொண்டிருக்கிறோம். சிந்தனையை வளர்த்தெடுப்பதில்லை. சிந்தனை கூர்மை இல்லாத தலைமுறை வளர, வளர சமூகத்தில் அறம் மறைந்துபோகும். அறமில்லா சமூகம் சீழ்பிடித்துவிடும். இந்தப் போக்கை தடுக்க பெரிய அறிவுசார் யுத்தம் தேவைப்படுகிறது. இதை 'மானுட விடுதலைக்கான அறிவு' என்று ஜெர்மனி தத்துவவியளாளர் ஹெபர்மாஸ் கூறுவார்.”

சமூக ஊடகங்களின் தாக்கம் உச்சமாக இருக்கும் இக்காலக்கட்டத்தில் தன்னை முன்னிலைப்படுத்தும் போக்கு தீவிரமாக உள்ளது. தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டால்தான் வாழ முடியும் என்ற கட்டத்துக்கு பெரும்பாலானவர்கள் நகர்ந்திருக்கிறார்கள். இந்தச் சூழல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

“நம்மை பிறர் கவனிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் உண்டு. அது இயல்பானது. ஆனால், அந்த எண்ணம் தீவிரமடையும்போது அது ஒரு நோயாக மாறிவிடும். தற்போது சமூக ஊடகங்களில் புழங்குபவர்களிடம் இந்தக் நோய்க்கூறுதான் வெளிப்படுகிறது. தங்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம் சமூகத்தில் முன்னகர்ந்து செல்ல முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது ஒரு மாயை. அவர்களுக்கு பணம் கிடைக்கலாம். புகழ் கிடைக்கலாம். அந்தஸ்து கிடைக்கலாம். ஆனால், தன்னை முன்னிலைப்படுத்தும் போக்கு அவர்களை உள்ளீடற்ற மனிதர்களாக மாற்றும். இறுதியில் அவர்கள் வெறுமையையே அடைவார்கள்.

மவுனம் என்ற ஒன்று நம்மிடமிருந்து மறந்துகொண்டிருக்கிறது. புத்தரின் மவுனம்தான் இதுவரை பேசப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புத்தர் தன் மவுனத்தால் இந்த உலகத்தையே புரட்டிப் போட்டார்.”

இளைஞர்களிடத்தில் உங்கள் சேனலுக்கான வரவேற்பு?

“முதலில் குறைந்தபட்சம் தத்துவம் படிப்பு சார்ந்த மாணவர்களுக்கு, எளிய மக்களுக்கு நான் பேசுவது சேரும் என்று நினைத்தேன் ஆனால், ஆச்சரியம் அளிக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் இயங்கும் தமிழ் இளம் தலைமுறையினர் இந்த சேனல் மூலம் பயன்பெறுவதாக என்னுடன் பகிர்ந்து கொண்டனர். எல்லாம் புகழும் தத்துவத்துக்கே..!”

உங்களுக்கு நெருக்கமான தத்துவவியலாளர் யார்?

“ஒவ்வொரு தத்துவமும் ஒரு தனி உலகம். எனக்கு பிடித்த தத்துவவியலாளர்கள் பலர். மேற்கத்திய தத்துவியலாளர்களில் எனக்கு பிடித்தமானவர்கள் என்றால் ஹெகல், கார்ல் மார்க்ஸ், பெர்ட்ரண்ட் ரஸல் ஆகியோரைச் சொல்வேன். இந்திய அளவில் அம்பேத்கரும் தென்னிந்திய அளவில் நாராயண குருவும், ராமலிங்க அடிகளும் பிடிக்கும். இம்மூவரும் பொது சமூகத்தில் தீவிர தாக்கம் ஏற்படுத்தியவர்கள். இவர்கள் எல்லாம் எனக்கு பிடித்தமான தத்துவவியலாளர்கள். ஆனால், என் மனதுக்கு நெருக்கமான தத்துவவியலாளர் என்றால், அது ஜே.கிருஷ்ணமூர்த்திதான். அவர்தான் தத்துவரீதியாக என்னை உலுக்கியவர். அவர் வழியாகவே என் சுயத்தை நான் கண்டடைந்தேன்.”

இறுதியாக, உங்களுடைய தத்துவம் என்ன?

“மனித நேயமும், சமத்துவமும்தான் என் தத்துவம். தத்துவத்துக்கு அகம், புறம் என இரண்டு பரிமாணங்கள் உண்டு. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பு உடையது. புறம் சரியாக இருந்தால் அகமும் சரியாக இருக்கும். புற உலகில் எல்லாருக்கும் வளமான வாழ்கை வழங்கக்கூடிய அரசியல் சித்தாந்தம் தேவை. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் நம் நாட்டில் ஏழைகள் குறைந்தபாடில்லை. ஏழைகளை நாம் ஏன் உருவாக்கி கொண்டிருக்கிறோம். அடிப்படையில் எல்லாருக்கும் எல்லாவும் கிடைக்கப்பெற வேண்டும்.

அக உலகில், மனிதர்கள் தங்களை ஆன்மிக ரீதியாக மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இங்கு நான் ஆன்மிகம் என்று குறிப்பிடுவது மதம் சார்ந்த ஆன்மிகத்தை அல்ல. மனிதத்தை, பிரபஞ்சத்தை உணர்வதைத்தான் ஆன்மிகம் என்று குறிப்பிடுகிறேன். அது நம்மை அன்பும், கருணையும் மிக்கவர்களாக மாற்றும்.”

பேராசிரியர் முரளியுடனான உரையாடலில் இடையிடையே புத்தரை அவர் அதிகம் புகழ்கிறார். அவரது தத்துவ பேச்சுகளின் பின்னணியிலும் புத்தரின் மவுனம் ஓடிக் கொண்டிருக்கிறது.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x