

மதுரை: குதிரையில் பயணிப்பது மன அழுத்தத்தை போக்கும் என்கிறார் மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த என். பாலமுருகன் - மணிமேகலை. இவர்களது மகன் பா.சண்முகசுந்தர் (24). இவர் இருசக்கர வாகனத்தை தவிர்த்து குதிரையில் பயணித்து வருகிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் இலக்கியம் படித்துள்ளேன். தனியார் சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி படித்து வருகிறேன். சிறு வயதில் இருந்தே வளர்ப்பு பிராணிகளான நாய்கள், ஆடு, மாடுகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. குதிரை வளர்க்க ஆசைப் பட்டு கிடைத்த வேலைகளை பார்த்து ரூ.75 ஆயிரம் சேமித்து குதிரை ஒன்றை வாங்கி வளர்த்தேன்.
குதிரைகள் மனிதர்களோடு நெருங்கிப் பழகும் சமூக விலங்காகும். அதன் மூலம் பல அனுபவங்கள் கிடைக்கின்றன. குதிரை சவாரி செய்தால் மன அழுத்தம் குறையும். மேலும் மனோதைரியமும் அதிகரிக்கும். பண்டைய மன்னர்கள் பெரும் குதிரைப் படையை வைத்திருந்தனர்.
கால்நடை மருத்துவர்கள் மூலம் குதிரை பராமரிப்பு குறித்து அறிந்துகொண்டேன். இதன் மூலம் பராமரிப்பின்றி விடப்பட்ட 100 குதிரைகளை காப்பாற்றியுள்ளேன். சாலையோரங்களில் அடிபட்டு கிடக்கும் கால்நடைகளை மீட்டு உரிய சிகிச்சை கிடைக்கச் செய்துள்ளேன். கபடி, கிரிக்கெட் போல குதிரையேற்றத்தையும் பரவலாக்க வேண்டும்.
குதிரைகள் பயன்பாட்டை அதிகரித்தால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கலாம். மேலை நாடுகளில் சில கிராமங்களில் இப்படி வாகனப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து குதிரையை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் அழியும் நிலையில் உள்ள குதிரை இனத்தை பாதுகாக்கலாம்.
குதிரைக்கு தீவனமாக கோதுமை, கானப்பயறு, சுண்டல் தோல், நவதானியம், பெல்லட், குச்சி, கூஷா, தவிடு, கம்பு, கேழ்வரகு, பச்சரிசி அளித்து வருகிறேன். நாள் ஒன்றுக்கு ரூ.400 வரை செலவாகும். தினமும் குதிரையில் 10 கி.மீ. பயணம் செய்வேன். இதன் மூலம் மன தைரியம் அதிகரிக்கிறது. மேலும் மன அழுத்தமும் குறைகிறது. சாலையில் என்னை ஆச்சரியத்தோடு பார்ப்பவர்கள் ஆர்வமாக விசாரிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.