ஓசூரில் இரு வீடுகளில் பூத்து நறுமணம் வீசிய பிரம்ம கமலம் பூ - கண்டு ரசித்த மக்கள்

ஓசூர் மூவேந்தர் நகரில் உள்ள வீட்டில் பிரம்ம கமலம் செடியில் பூத்துக் குலுங்கிய மலர்கள்.
ஓசூர் மூவேந்தர் நகரில் உள்ள வீட்டில் பிரம்ம கமலம் செடியில் பூத்துக் குலுங்கிய மலர்கள்.
Updated on
1 min read

ஓசூர்: ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ ஓசூரில் இரு வீடுகளில் மலர்ந்து நறுமணம் வீசியது. இதை பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.

இமயமலை பகுதியில் அதிகமாகக் காணப்படும் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூவானது பிரம்மாவுக்கு உகந்த பூவாகப் பக்தர்களால் கருதப்படுகிறது.

இப்பூவின் தோற்றம் சயன கோலம் மற்றும் பாம்பு படம் எடுத்திருப்பதுபோல இருக்கும். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டும் இச்செடியில் பூக்கள் மலரும். பூக்கள் மலரும் போது ஏற்படும் நறுமணம் அப்பகுதி முழுவதும் நறுமணத்தைத் தரும்.

இந்நிலையில், ஓசூர் மூவேந்தர் நகரில் வசிக்கும் சுப்பாராவ் என்பவர் வீட்டில் பிரம்ம கமலம் செடி கடந்த 15 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகிறது.

இச்செடியில் நேற்று முன்தினம் இரவு 101 பூக்கள் மலர்ந்தன. இதை அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பூவைப் பார்த்து ரசித்தனர். இன்னும் சிலர் கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி வணங்கிச் சென்றனர்.

அதேபோல, ராஜாஜி நகரில் மோகன் என்பவர் வீட்டில் வளர்க்கப்படும் பிரம்ம கமலம் செடியில் 21 பூக்களும், சூளகிரியில் சீனிவாசன் என்பவர் வீட்டில் 80 பூக்களும் பூத்து நறுமணம் வீசியது.

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: அரிவகை பிரம்ம கமலம் செடியை ஓசூர் பகுதியைச் சேர்ந்த சிலர் நேபாளத்துக்குச் சுற்றுலா சென்றபோது வாங்கி வந்து வீட்டில் வளர்த்து வருகின்றனர். இதன் இலையை வெட்டி நட்டு வைத்தாலோ செடியாக வளரும் தன்மை கொண்டது. ஓசூரில் இச்செடி உள்ளவர்களின் வீடுகளிலிருந்து பலர் இலையை வாங்கித் தங்கள் வீடுகளில் நட்டுள்ளனர். இதனால், ஓசூரில் இச்செடி உள்ள பலரது வீடுகளில் தற்போது பிரம்ம கமலம் பூ மலர்ந்து நறுமணம் வீசி வருகிறது.

இரவு 9 மணிக்கு மேல் மலரத் தொடங்கி ஒரு சில மணி நேரத்தில் வாடிவிடும். இப்பூக்கள் மலரும்போது இறைவனைப் பிரார்த்தனை செய்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். இதனால், பூக்கள் மலர்ந்த வீடுகளுக்குப் பொதுமக்கள் சென்று வணங்கிச் சென்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in