

கோவை: இருக்கும் இடத்துக்கு அடுத்து, உடுக்க உடை என்பது அனைவருக்கும் அவசியம்.அவ்வாறு கோவையில் உடை தேவைப்படும் ஏழை மக்களுக்கு இலவச ‘ஷாப்பிங்’ அனுபவத்தை, பயன்படுத்தப்பட்ட ஆடைகள் விநியோக நிலையம் மூலம் அளித்து வருகின்றனர் ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’ தன்னார்வ அமைப்பினர்.
இதற்காக நல்ல நிலையில் உள்ள வேட்டி, சட்டைகள், டி-சர்டுகள், பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், முதியவர்களுக்கான பழைய துணிகளை தன்னார்வலர்கள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் இருந்து பெற்று வருகின்றனர். பெரும்பாலும் யார் துணிகளை அளிக்கிறார்களோ அவர்களே அந்த துணிகளை துவைத்து, தேய்த்து, மடித்து இவர்களிடம் அளிக்கின்றனர்.
அவற்றின் தரத்தை ஒருமுறை சரிபார்த்து, தரமில்லாத, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள துணிகளை கழித்துவிடுகின்றனர். பயன்படுத்தும் நிலையில் உள்ள துணிகளிலும், தையல் ஏதும் பிரிந்துள்ளதா ‘ஜிப்’ போன்றவை சரியாக உள்ளதா என பார்த்துவிட்டு, அவற்றில் ஏதும் குறை இருந்தால் சரி செய்கின்றனர்.
பின்னர், கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்குள்ள சமூக நலக்கூடங்கள், திருமண மண்டபங்களில் விநியோக நிலையத்தை அமைக்கின்றனர். அவ்வாறு அமைப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே சம்பந்தப்பட்ட ஊராட்சியின் தலைவருக்கு தகவல் தெரிவித்து, பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்கின்றனர்.
18,955 ஆடைகள் விநியோகம்: புதிய துணிகள் கடைகளில் எப்படி விற்பனைக்கு அடுக்கி வைக்கப்படுமோ அப்படி, விநியோக நிலையத்தில் அடுக்கி வைக்கின்றனர். அங்கு வரும் மக்கள், தங்களுக்கு தேவையான அளவுள்ள தலா 2 உடைகளை இலவசமாக எடுத்துச்செல்லலாம். துணிகளை வீட்டுக்கு எடுத்துச் சென்ற பிறகு, அளவு போதவில்லை என்றாலோ, பிடிக்கவில்லை என்றாலோ மீண்டும் அதே இடத்தில் அளித்து மாற்றிக்கொள்ளலாம்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட காளியாபுரம், பெத்தநாயக்கனூர், ரமணமுதலிபுதூர் உள்ளிட்ட 7 கிராமங்களிலும், மே, ஜூன் மாதங்களில் பொள்ளாச்சி தெற்கு தாலுகாவுக்கு உட்பட்ட மாக்கினாம்பட்டி, கோமங்கலம், கோலார்பட்டி, அம்பராம்பாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி உள்ளிட்ட 19 கிராமங்களிலும் ஆடைகள் விநியோக நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதன் மூலம் 9,228 பேருக்கு மொத்தம் 18,955 ஆடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகள், முதியோர் ஆவர். இது தொடர்பாக, பழைய துணிகளை பெற்று விநியோகிக்கும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அபிஷா, சத்யா ஆகியோர் கூறும்போது, “மாநகர பகுதியில் இதுபோன்று துணிகளுக்கு அதிகம் தேவை இருப்பதில்லை.
எனவேதான், ஊரக பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். வரும் நாட்களிலும் ஒவ்வொரு தாலுகா வாரியாக மாவட்டம் முழுவதும் விநியோக நிலையம் அமைத்து ஏழைகளுக்கு துணிகளை வழங்க உள்ளோம். மாதந்தோறும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் துணிகள் தானமாக கிடைத்து வருகின்றன.
இதில், 20 முதல் 30 சதவீதம் வரை, பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ள துணிகளை அளித்துவிடுகின்றனர். அவற்றையும் வீணாக்காமல் மறுசுழற்சிக்கு அனுப்பிவைக்கிறோம். விற்பனை நிலையங்களில் துணிகளை அடுக்கிவைப்பது, எடுத்துச்செல்வது போன்ற பணிகளில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.
துணிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல டிரக் டாக்ஸி நிறுவனத்தினர் உதவி வருகின்றனர். இவ்வாறு பழைய துணிகளை தானமாக அளிக்க விரும்புவோர் 6374713775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்”என்றனர்.