

மதுரை: ‘கை’யில் பணமிருந்தால் இந்த ஹைடெக் மருத்துவ காலத்தில் பழுதடைந்த இதயத்துக்கு பதிலாக மாற்று இதயம் பொருத்தி வாழலாம். ஆனால், நம் உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் அவசியமான அரும்மருந்தான ரத்தம், மனித தொழிற்சாலையில் மட்டுமே கிடைக்கக்கூடியது. பிறப்பு முதல் இறப்பு வரை நமது உடலில் வற்றாத ஜீவ நதியாக நிற்காமல் ஓடக்கூடிய இந்த ரத்தம் கடவுள் கொடுக்கிற கொடை.
அப்படி நன்கொடையாக கிடைக்கிற ரத்தம் கடைசிவரை நன்கொடையாக கொடுக்க வேண்டும் என்பதற்காக, மதுரையில் உள்ள கார் கம்பெனிகள், ஜூவல்லரி கடைகள், ஜவுளிக்கடைகள், தனியார் நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணிபுரியக்கூடியவர்களை விழிப்புணர்வு செய்து ரத்த தானம் செய்ய வைக்கிறார்கள் ‘ஜீவ நதி’ அமைப்பை சேர்ந்த இளைஞர்கள்.
ஒருவரை ரத்த தானம் செய்ய வைப்பதே பெரும் கஷ்டம். ஆனால், இவர்கள் கடந்த 23 ஆண்டில் 800க்கும் மேற்பட்ட ரத்த தானம் முகாம்களை நடத்தியுள்ளதுடன், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை விழிப்புணர்வு செய்து ரத்த தானம் செய்ய வைத்துள்ளார்கள். மேலும், இதுவரை 6 முறை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிகளவு ரத்தம் சேகரித்து கொடுத்து முதலிடம் பிடித்துள்ளனர் இந்த அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்.
இவர்கள் சேவையை பாராட்டும் வகையில் அரசு மருத்துவமனை நிர்வாகம் சமீபத்தில் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக எஸ்.கணேஷ் முருகன் உள்ளார். இவர் கூறுகையில், ‘‘2001 டிசம்பர் 26ம் தேதி யதார்த்தமாக நானும் எனது நண்பர்களும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்ந்து முதல் ரத்த தானம் செய்தோம். அதேநாளில் குஜராத்தில் பூகம்பம் நடந்தது. அந்த பெரும் துயரத்தில் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதகிளவு ரத்த தானம் தேவைப்பட்டது.
நாங்கள் வழங்கிய ரத்தம், குஜராத் அனுப்பி வைக்கப்பட்டது. ரத்தத்தின் தேவையை அன்றுதான் நாங்கள் உணர்ந்தோம். அந்த உணர்வே, நாங்கள் குழுவாக சேர்ந்து 'ஜீவ நதி' அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் ரத்த தானம் முகாம்கள் நடத்த தூண்டியது. தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிகளவு ரத்தம் சேகரித்து கொடுக்கும் இயக்கமாக உள்ளோம். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அரசு மருத்துவமனையில் ரத்ததுக்கு பயங்கர தட்டுப்பாடு இருக்கும். இந்த காலக்கட்டத்தில் மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களை தேடிச் சென்று ரத்த தானம் குறித்த பயம், தயக்கத்தை அகற்றி விழிப்புணர்வு செய்து ரத்த தானம் செய்ய வைக்கிறோம்.
நாங்கள் ரத்த தானம் செய்ய ஆரம்பித்த 2001ம் ஆண்டு காலக்கட்டத்தில் ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருந்தது. போஸ்ட் கார்டு மூலம் தன்னார்வலர்களுக்கு ரத்த தானம் முகாம் தகவல்களை தெரிவித்து தானம் செய்ய அழைப்போம். ‘வாட்ஸ்அப்’, ‘பேஸ்புக்’ வந்தபிறகு, வழக்கமாக ரத்த தானம் கொடுக்க வருகிறவர்களை பகுதி ஒருங்கிணைப்பாளராக மையப்படுத்தி அவர்கள் மூலம் அவர்கள் வசிக்கும் பகுதியில் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வை பரவலாக்கி முகாம்கள் நடத்த ஆரம்பித்தோம்.
இப்படியாக 2010ம் ஆண்டுக்குமேல் வருடத்துக்கு 20 முகாம்கள் நடத்த ஆரம்பித்தோம். ரத்த தானம் செய்வது குறைந்துவிட்டால் மனிதாபிமானம் குறைந்துவிட்டது என்பது அர்த்தமாகிவிடும். அதனால், ரத்த தானம் உயிர்ப்போடு இருக்க வேண்டும். நாம் தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய பணி நேரம் போக மீதமுள்ள நேரங்களில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு செய்து வருகிறேன்’’ என்றார்.