

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல் குளம் மேட்டுக்காடு வைப்பாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது இரும்பு காலம் முதல் வரலாற்று தொடக்க காலத்தைச் சார்ந்த வாழ்விடப் பகுதி தொல்லியல் மேடு ஆகும். இத்தொல்லியல் மேடு 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2021-ல் தொடங்கப்பட்டன. அதில், சுமார் 3,500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
2-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் ஆன சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து, தற்போது ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெக்கப்பட்டது. இது குறித்து, தொல்லியல்துறை அலுவலர்கள் கூறுகையில், இந்த பொம்மை கருப்பு நிறத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெருகுற்றுகிறது. கயல் வடிவில் அமைந்த கண்களும், அவற்றின் புருவங்களும் கீரல் வடிவில் வரையப்பட்டுள்ளது.
வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளன. உருவத்தின் உயரம் 2.28 செ. மீ, 2.15 செ. மீ அகலம், 1.79 செ. மீ தடிமனும் கொண்டுள்ளது. சுமார் 40 செ.மீ ஆழத்தில் கிடைக்கப்பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற்று காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுவதாகத் தெரிவித்தனர்.