

கோவை: அறிவார்ந்த இளைஞர்களை உருவாக்கும் தகவல் களஞ்சியமாகவும், நாட்டு நடப்பு, இலக்கியம், வரலாறு, பொது அறிவு, அறிவியல் என அனைத்தையும் அறிய உதவும் அறிவுத் தடாகமாகவும் விளங்குகிறது நூலகம்.
நாளிதழ்கள், வார இதழ்களை வாசிக்க வரும் பொதுமக்கள் மட்டுமின்றி, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் அதற்கான புத்தகங்களை தேடி நூலகங்களுக்கு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது நூலகத் துறை சார்பில் நூலகங்கள் உள்ளன.
இந்நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இளைஞர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் என அனைத்து தரப்பினருக்கும் பயன் அளிக்கும் வகையில் ரூ.2.50 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டப்பட்டு வருகிறது.
கோவை ஆடீஸ் வீதியில் கட்டப்பட்டுவரும் இம்மையத்தின் கட்டுமானப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு, அடுத்த சில வாரங்களில் இம்மையம் திறக்கப்பட உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: மாநகரில் உள்ள மற்ற நூலகங்களை விட வித்தியாசமானதாக இருக்கும் வகையில் இந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வருகிறது. 48 சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தில், 7,800 சதுரடி பரப்பளவில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட இந்நூலகத்தில் மொத்தம் 10 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற உள்ளன.
தரைத்தளத்தில் உள்ளே நுழைந்தவுடன் வலது பக்கம் ஒரே சமயத்தில் 80 பேர் அமர்ந்து நூல்கள், நாளிதழ்களை வாசிக்கும் வகையில் இருக்கையுடன் கூடிய பிரம்மாண்ட நூலக அறை உள்ளது. அதேபோல, படிக்கட்டுக்கு அருகே இடது பக்கம், சிறுவர், சிறுமிகள் அமர்ந்து படிப்பதற்கான நூலக அறை கட்டப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளை கவரும் வகையில், மாணவ, மாணவிகளுக்கு ஏற்ற வகையில் நூல்கள் வைக்கப்படும்.
முதல் தளத்தில் இடது புறம் திரும்பினால் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளை உள்ளடக்கிய குடிமைப் பணித் தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்பவர்கள் படிப்பதற்கான நூல்களை கொண்ட அறை அமைக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் 2 அறைகள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டுள்ளன. இங்கு போட்டித் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
அது தவிர, தரைத்தளம், முதல் தளம், படிக்கட்டுப் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நூல்கள் வைக்கப்பட்டிருக்கும். வாசகர்கள் தங்களுக்கு வேண்டிய நூல்கள் அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்கும் வகையில் இந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் இருக்கும். இந்த கட்டிடத்தின் வளாகத்தில் பசுமைச் சூழலை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இயற்கையான காற்று உள்ளே செல்லும் வகையில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்த இடவசதி, கழிவறை வசதி உள்ளது. இவ்வளாகத்துக்குள் நுழைந்தவுடனேயே, இயற்கையையும், அமைதியையும் நேசித்து படிக்க வேண்டும் என்ற நிலைக்கு வாசகர்கள் சென்று விடுவர். அது தவிர, நூலகத்துக்கு வரும் தாய்மார்கள் பாலூட்டுவதற்காக தனி அறை உள்ளது. இம்மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.