

புதுச்சேரி: ‘ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று ஒருமுறை மகாத்மா காந்தியிடம் கேட்டதற்கு, “ஒரு நூலகம் கட்டுவேன்” என்றார். மிக உயர்ந்த எண்ணம் இது... நம்மில் சிலருக்கும் கூட இப்படி தோன்றியிருக்கும். ஆனால், அதை செயல்படுத்தியவர்கள் சொற்பத்திலும் சொற்பம். அப்படியான செயல் வீரர்களில் ஒருவர் ‘மதிஒளி’ சரஸ்வதி.
‘சமூகத்தில் அனைவருக்கும் புத்தக அறிவு கிடைக்க வேண்டும்’ என்ற உயரிய நோக்கில் அவரால் தோற்றுவிக்கப்பட்டு, புதுச்சேரி மூலக்குளம் சிங்கப்பூர் அவென்யூவில் சேவை நோக்குடன் இயங்கி வருகிறது ‘மதிஒளியின் அரிச்சுவடி’ நூலகம். புதுச்சேரியைச் சேர்ந்த மதிஒளி சரஸ்வதிக்கு அடிப்படையில் சேவைகளில் ஆர்வம் உண்டு.
கடந்த 1981-ல் நந்தலாலா சிறுவர் சங்கத்தை தொடங்கினார். இச்சங்கம் 1988 -ம் ஆண்டு ‘நந்தலாலா சேவா சமிதி டிரஸ்ட்’ - ஆக உருவெடுத்தது. கல்வி, மருத்துவம், கலை போன்றவற்றை வளர்ப்பதற்காக ‘நந்தலாலா மெடிக்கல் ஃபவுண்டேஷன், யோகசரஸ் எஜூகேஷனல் அகாடமி’ இவைகளையும் தோற்றுவித்தார்.
மதிஒளி சரஸ்வதி அடிப்படையில் ஒரு எழுத்தாளர் என்பதால், நூலகம் மீதான ஆர்வத்தில் தான் பிறந்த மண்ணில், சென்னை நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளையின் கீழ் பொது சேவைத் திட்டமான மதிஒளியின் அரிச்சுவடி நூலகத்தை ஆகஸ்ட் 2017-ல் திறந்து வைத்தார்.
குழந்தைகளை முன்னிறுத்தி தொடங்கினாலும், அனைவருக்கும் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் வகை யில் வடிவமைக்கப்பட்ட நூலகம் இது. அதனாலேயே அனைத்து வகை நூல்களும் இடம்பெற்றுள்ளன. நூலகக் கட்டிடத்தின் மேற்கூரை வடிவமைப்பே ஒரு திறந்த புத்தகத்தை பிரதிபலிக்கிறது. நூலகத்தின் உள்ளே சென்றதுமே மலர்ந்த முகத்துடன் கூடிய மதி ஒளியின் படம் நம்மை வரவேற்கிறது.
நல்ல வாசிப்புச் சூழல்: நூலகம் பற்றி நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளையைச் சேர்ந்த ராஜகோபாலனிடம் பேசினோம். "நல்ல வாசிப்புச் சூழல் அனுபவத்தைக் கொண்டு, 1,800 சதுர அடி பரப்பளவில் இந்த நூலகத்தை வடிவமைத்துள்ளோம். சிறார்களுக்கான சிறப்புப் பிரிவு, பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான புத்தகங்கள், பெரியவர்களுக்கான தேர்ந்தெடுத்த புதினங்கள், சிறுகதைகள், ஆன்மிகம், இலக்கியம், இயற்கைசார் மருத்துவம், சமையல், மொழி சார் நூல்கள் மற்றும் பொது வாசிப்பு நூல்கள் என தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. ‘ஆடியோ ரீடர் பாயின்ட்’ ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பிரெய்லி தனிப் பிரிவுக்கான ஆயத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. மூத்த குடிமக்கள் முதல் தளம் செல்ல ‘லிப்ட்’ வசதி ஏற்படுத்தியிருக்கிறோம். வந்து செல்லும் வாசகர்கள் நாளிதழ்கள், மாத, வார இதழ்களையும் வாசிக்கும்படி செய்திருக்கிறோம்.
நல்ல புத்தகங்களைக் கொண்டிருந்தாலும், நல்ல வாசிப்புச் சூழல் மிக அவசியம். அதைச் செய்திருக்கிறோம். எங்களது மதிஒளியின் அரிச்சுவடிக்கு 'சிறந்த பொதுக் கட்டிடம்' என்ற விருதை கடந்த, 17.03.2021 அன்று இந்திய கான்கிரீட் நிறுவனம் (ஐ.சி.ஐ) மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை வழங்கி, நூலக சூழலுக்கு பெருமை சேர்த்திருக்கிறது” என்றார்.
2017-ம் ஆண்டில் 24 பேருடன் தனது முயற்சியைத் தொடங்கிய மதிஒளியின் அரிச்சுவடி நூலகம், கரோனா காலத்தில் பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும் அதன் பிறகு எழுந்து 2021-ம் ஆண்டில் 141 உறுப்பினர்களுடன் செயல்பட்டது. 2022-ல் அது 182 ஆக உயர்ந்து, தற்போது 1,100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் சேவையைத் தொடர்கிறது.
இளையோர்களுடன் முதியோருக்காகவும்... நந்தலாலா சேவா சமிதியின் சங்கரன் கூறுகையில், "மதி ஒளி நிறுவனர் எழுதிய 64 புத்தகங்கள், மனித வாழ்க்கையின் நெறிமுறைகள் மற்றும் பல்வேறு அம்சங்களை ஆராய்கின்றன. நூலகத்தில், ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இந்த சொற்பொழிவில் எங்கள் நிறுவனர் மதிஒளி சரஸ்வதி எழுதிய புத்தகங்களில் இருந்து, சில பகுதிகள் விவாதிக்கப்படும். இந்த நிகழ்வு பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் நடந்து வருகிறது.
நூலக கட்டிடத்தின் முதல் தளத்தில் 5 முதல் 13 வயது வரையிலான சிறார்களுக்கு ஞாயிறு தோறும் காலைப் பொழுதில் தமிழ் வாசிப்பு மற்றும் எழுத்துப் பயிற்சி மற்றும் ஓவிய பயிற்சி வகுப்பும் இலவசமாக நடத்தப்படுகிறது. இங்கு செயல்படும் குழந்தைகள் மன்றத்தின் மூலம் குழந்தைகளை பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்துகிறோம்.
குழந்தைகள் மகிழ்ச்சியாக நூலகம் வந்து வாசிக்க வேண்டும் என்பதே இந்த மன்றத்தின் நோக்கம். அதேபோல் மூத்த குடிமக்கள் மன்றம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. தேர்ந்த மருத்துவர்களின் மூலம் மருத்துவ விழிப்புணர்வு உள்ளிட்ட மூத்த குடிமக்களுக்கான வாழ்க்கை முறை மேலாண்மை தொடர்பான சேவையை வழங்கி வருகிறோம்" என்றார்.
நடமாடும் நூலகம்: 2,700 க்கும் மேற்பட்ட புத்தகங்களின் தொகுப்புடன் கூடிய நடமாடும் நூலகம் ஒன்றையும் கடந்த பிப்ரவரி முதல் உருவாக்கியுள்ளனர். இது புதுச்சேரியின் பல பகுதிகளை சுற்றி வந்து, தங்களது உறுப்பினர்களுக்கு அவர்கள் பகுதிக்கே சென்று புத்தகங்களை வழங்கி வருகிறது.
நூலக கையிருப்பு ஆண்டுக்கு சுமார் 2,500 என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இருக்கும் நீங்கள் அறிவை வளமாக்க மதி ஒளி அரிச்சுவடியை நாடலாம். உங்கள் வீட்டில் உள்ள நூல்களையும் இவர்களிடம் நூலகத்துக்காக தரலாம். அறிவு இயக்கத்தில் நீங்களும் கை கோர்க்கலாம்.
உறுப்பினராக என்ன செய்ய வேண்டும்? - இங்கு வரும் அனைத்து உறுப்பினர்களும் நூலகத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்கள் ரூ.50, பெரிய வர்கள் ரூ.200 உறுப்பினர் வைப்புத் தொகை (திரும்பப் பெறக்கூடிய தொகை) செலுத்தி, உறுப்பினராகலாம். அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உறுப்பினர் சேர்க்கை முற்றிலும் இலவசம். மாணவர்கள் அதற்கான உரிய சான்றுடன் வர வேண்டும்.