கீழ்நமண்டி அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈம பேழைகள் கண்டுபிடிப்பு

கீழ்நமண்டி அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈம பேழைகள் கண்டுபிடிப்பு
Updated on
1 min read

திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த கீழ்நமண்டி கிராமத்தில் பெருங்கற்கால நினைவு சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அகழாய்வு பணி நடைபெறுகிறது. தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் அகழாய்வு பணி நடைபெறுகிறது.

கீழ்நமண்டி அகழாய்வு மைய இயக்குநர் ஜி.விக்டர் ஞானராஜ், மைய பொறுப்பாளர் எம்.சுரேஷ் ஆகியோர் தலைமையில் 55 ஏக்கரில் அகழாய்வு நடைபெறுகிறது. இதுவரை 11 கல்வட்டங் களை குழி தோண்டி அகழாய்வு செய்துள்ளனர். 11 கல் வட்டங்களிலும் தலா ஒன்று முதல் 3 ஈமப் பேழைகளும், சிகப்பு மற்றும் கருப்பு சிகப்பு பானைகளும் புதைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஈமப் பேழைகள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சுடு மண்ணால் 13 கால்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஈமப் பேழைகள் அனைத்தும் தலா சுமார் மூன்றரை அடி நீளமும், 2 அடி அகலமும், ஒரு அடி உயரமும் கொண்டவையாக உள்ளன. சில ஈமப் பேழைகள் சேதமடைந்துள்ளன.

ஈமப் பேழைகள் மற்றும் பானைகளை வெளியே எடுத்து ஆய்வு செய்த பிறகுதான், இதில் வைக்கப்பட்டுள்ள பொருட்களின் விவரம் தெரியவரும். மயான பகுதியின் அருகே பெருங்கற்கால மனிதர்களின் வாழ்விட பகுதி இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த அடிப்படையில், மயான பகுதி அருகே 3 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இக்குழிகளிலிருந்து சிவப்பு மற்றும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கிடைத்துள்ளன. பானை ஓடுகளை சேகரித்து தொல்லியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அகழாய்வின் போது கிடைக்க பெற்ற பொருட்களின் மாதிரி கள் ஆய்வுக்கு அனுப்பப் பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இப்பகுதியின் பழந்தொன்மையை உலகறிய வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in