விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் 600 பேருக்கு அன்னதானம் - அசத்தும் அகத்தியர் சன்மார்க்க சங்கம்

விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் 600 பேருக்கு அன்னதானம் - அசத்தும் அகத்தியர் சன்மார்க்க சங்கம்
Updated on
2 min read

விருதுநகர்: விருதுநகரில் அரசு மருத்துவமனைகளில் நோய் தீர்க்க மருந்துகள் வழங்கப்படுவதை போன்று, பசிப்பிணி தீர்க்கும் மருந்தாக அன்னதானமும் தன்னார்வலர்கள் மூலம் நாள்தோறும் வழங்கப்படுகிறது.

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் சன்மார்க்க சங்கத்தில் நாள்தோறும் 600 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சன்மார்க்க சங்கத்தினர் கடந்த 15 ஆண்டுகளாக இச்சேவையை சிறப்பாக செய்து வருகின்றனர்.

பசிப்பிணி எனும் பாவி என்றும், பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்றும், பசியின் கொடுமையை தமிழ் இலக்கியங்கள் விளக்குகின்றன. இதனால், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்றும், தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றும் உணவு வழங்குவது போற்றப்படுகிறது. அத்தகைய அன்னதானத்தை தடையின்றி தினந்தோறும் வழங்கி வருகிறது ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்.

இது குறித்து விருதுநகரில் உள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க பொறுப்பாளர் மோகன் கென்னடி கூறியதாவது: திருச்சி துறையூரில் உள்ள மகா ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகள் தலைமையில், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. விருதுநகரில் உள்ள இச்சங்கத்தின் மூலம், கடந்த 2008-ம் ஆண்டு அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

மோகன் கென்னடி
மோகன் கென்னடி

அப்போது, செவ்வாய்க்கிழமை தோறும் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சில மாதங்களில் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் வழங்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு அன்னதானமாக கஞ்சி வழங்கத் தொடங்கினோம். விருதுநகர் பஜார், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று காலை மற்றும் மாலை நேரங்களில் கஞ்சி வழங்கி வந்தோம். ஒரு நாளைக்கு சுமார் 200 கிலோ அரிசியில் கஞ்சி தயாரிக்கப்பட்டது.

அதன் பின்னர், விருதுநகரில் 1,200 பேருக்கும், மதுரையில் 300 பேருக்கும் அன்னதானம் வழங்கினோம். தற்போது விருதுநகர் படேல் சாலையில் சங்கக் கிளையிலேயே உணவு சமைத்து, விருதுநகர் அரசு மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை மற்றும் சங்கக் கிளையில் தினந்தோறும் 600 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். சங்கக் கிளையில் நண்பகல் 12 மணியிலிருந்து அன்னதானம் தொடங்கும்.

மாலை 4.30 மணிக்கு அரசு மருத்துவமனையிலும், 5 மணிக்கு அரசு மகப்பேறு மருத்துவமனையிலும் அன்னதானம் வழங்கி வருகிறோம். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், தங்கி சிகிச்சை பெறுவோர், கர்ப்பிணிகள், நோயாளிகளுடன் இருப்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் வந்து பசியை தீர்த்துக் கொள்கின்றனர்.

இதற்கான செலவு முழுவதும் நன்கொடையாகவும், உபயதாரர்கள் மூலமாகவும் பெறுகிறோம். இது தவிர, வியாழக் கிழமை தோறும் விருதுநகர் முருகன் கோயில் முன்பு 250 பேருக்கு செல்வகுமார் என்ற பொறுப்பாளர் மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in